[X] Close

ஊழலை நாம் இயல்பாக்கிக்கொண்டோமா


  • kamadenu
  • Posted: 04 Jun, 2019 09:28 am
  • அ+ அ-

-மு.இராமனாதன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தன. கட்சிகளின் பரப்புரைகளிலிருந்து முக்கியமானவை விக்கிபீடியா பட்டியலில் பார்க்கக் கிடைக்கின்றன. பொருளாதாரம், தேசப் பாதுகாப்பு, பயங்கரவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் துயரம், வாரிசு அரசியல் முதலானவை பட்டியலில் இடம்பெறுகின்றன. ஆனால், இந்தப் பட்டியலில் ஊழல் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் பல கட்சிகளும் தத்தமது எதிரணியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. எனில், ஊழல் ஏன் பட்டியலுக்குள் வரவில்லை?

விக்கிபீடியா எனும் இணையக் களஞ்சியத்தின் பக்கங்களை நடுநிலை வகிக்கும் தன்னார்வலர்கள் எழுதுகிறார்கள். நெறியாளர்கள் பரிசோதிக்கிறார்கள். இவர்கள் யாரும் தேர்தல் பரப்புரையில் ஊழல் ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்ததாகக் கருதவில்லை என்றுதானே அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்? ஊழல் எங்கெங்கும் பரவித்தான் கிடக்கிறது. ஆனால், அதை நேரிட்டுப் புறங்காண வேண்டும் என்று நமது சமூகம் விரும்பவில்லையா? அப்படியானால், ஊழலை நாம் சகித்துக்கொள்கிறோமா? உள்ளூர் நண்பர் ஒருவர் அரசு அலுவலர் பற்றி இப்படிச் சொன்னார்: “அவர் தங்கமானவர். காசு கொடுத்தால் காரியத்தை முடித்துக் கொடுத்துவிடுவார்”. அதாவது, கையூட்டு பெறுவது குற்றமல்ல. கையூட்டு பெற்றும் காரியமாற்றாமல் இருப்பதே குற்றம் என்ற நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.

ஊழலை ஹாங்காங் எப்படி எதிர்கொண்டது?

‘சர்வதேச வெளிப்படைத்தன்மை’ என்கிற அமைப்பு 180 நாடுகளில் நிலவும் ஊழலை மதிப்பிட்டிருக்கிறது. அதற்காக ஓர் அளவுகோலையும் நிறுவியிருக்கிறது. இதன்படி, முற்றிலும் தூய்மையான நாடு நூறு மதிப்பெண்ணும், முற்றிலும் ஊழல் மயமான நாடு பூஜ்யமும் பெறும். இந்த அளவீட்டின்படி, முதலிடத்தில் மேலை நாடான டென்மார்க் (88 மதிப்பெண்), கடைசி இடத்தில் ஆப்பிரிக்க நாடான சோமாலியா (10 மதிப்பெண்) வருகின்றன. இந்தியாவின் மதிப்பெண் 41. நான் ஹாங்காங்கின் மதிப்பெண்ணையும் தேடிப்பார்த்தேன். 76.

ஹாங்காங் இந்த இடத்துக்கு வந்துசேர்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 70-களின் தொடக்கம் வரை ஹாங்காங்கில் ஊழல் கோலோச்சியது. ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ‘தேநீர்க் காசு’ கேட்டார்கள். ஒப்பந்தங்களும் உரிமங்களும் வழங்க அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்றார்கள். சூதர் மனைகளுக்கும் போதை வணிகத்துக்கும் காவல் துறை கடைக்கண் பார்வை காட்டியது. மக்கள் பொருமிக்கொண்டிருந்தார்கள். இதற்கான முடிவு பீட்டர் கோட்பரின் உருவில் வந்தது. பீட்டர் ஆங்கிலேயர். பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஹாங்காங்கில் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். 1973-ல் வெளிநாட்டு வங்கிகளில் இந்திய மதிப்பில் சுமார் நான்கு கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். இது எதேச்சையாகக் கண்டறியப்பட்டது. காவல் துறை விசாரித்தது. பீட்டரால் கணக்குக்காட்ட முடியவில்லை. 1973 ஜூன் மாதம் ஒரு புலர் காலைப் பொழுதில் பீட்டர் லண்டனுக்கு சென்றுவிட்டார். மக்கள் கோபமுற்றனர். மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். பீட்டரைக் கைதுசெய்து ஹாங்காங் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. விசாரணை நடந்தது. பீட்டருக்கு நான்காண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டது.

கதை இந்த இடத்தில் முடியவில்லை

அப்போது ஹாங்காங்கின் ஆளுநராக இருந்தவர் மெக்லஹோஸ். அவர் காவல் துறை ஊழலைக் காவல் துறையே விசாரிப்பது முறையாக இராது என்று கருதினார். 1974-ல் ‘ஊழல் எதிர்ப்பு சுயேச்சை ஆணையம்’ என்கிற அமைப்பை நிறுவினார். காவல் துறை ஊழல்களை மட்டுமல்ல; எல்லா அரசுத் துறை, தனியார் துறை ஊழல்களையும் விசாரிக்கும் அமைப்பாக அதை உருவாக்கினார். ஆணையம் வானளாவிய அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. கண்கொத்திப் பாம்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான விழுமியங்களை பள்ளிக்காலம் முதற்கொண்டே மாணவர்களுக்குக் கற்பித்தும் வருகிறது. மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்திருக்கிறது. மக்களால் ஆணையத்தை அச்சமின்றி அணுக முடியும். புகாரளிக்க முடியும். விசாரணை நடக்கும். தவறிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும். கடந்த 45 ஆண்டுகளில் பல ஊழல் வழக்குகளைத் திறம்பட நடத்தியிருக்கிறது ஆணையம்.

2015-ல் ஆணையத்தால் தண்டனை பெற்றவர் டொனால்ட் சங். 2005 முதல் 2012 வரை ஹாங்காங்கின் செயலாட்சித் தலைவராக இருந்தவர். ஓய்வுபெற்ற பின் வசிப்பதற்காகத் தனது பதவிக் காலத்தில் ஆடம்பர அடுக்ககம் ஒன்றை வாங்கினார் சங். அதை அரசிடம் தெரிவிக்கவில்லை. அதைக் கட்டிய தொழிலதிபருக்குத் தனது பதவிக் காலத்தில் வானொலி உரிமம் ஒன்றையும் வழங்கினார். நீதிமன்றம் சங்குக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதித்தது. ஊழல் ஆணையம் தொடுத்த வழக்கின்பேரில் முன்னாள் செயலாட்சித் தலைவரே தண்டிக்கப்பட்டபோது, அயல்நாட்டு ஊடகங்கள் வியந்துபோயின.

தூய்மை நாடுகளின் பட்டியலில் ஹாங்காங்கைவிட முன்னணியில் நிற்கிறது சிங்கப்பூர் (85 மதிப்பெண்கள்). 50-களில் குற்றச்செயல்களும் ஊழலும் கைகோத்து நடந்த நாடுதான் சிங்கப்பூர் என்று சொன்னால் நம்புவது கடினமாக இருக்கலாம். அப்போதைய காலனி அரசு ஊழல் எதிர்ப்பு ஆணையத்தை நிறுவியது. 1965-ல் சிங்கப்பூர் விடுதலை அடைந்ததும் லீ குவான் யூ ஆணையத்தை சுயேச்சையானதாக மாற்றினார். அரசு ஊழியர்களின் ஊதியத்தை வெகுவாக உயர்த்தினார். அது கையூட்டின் மீதான ஆசையைக் குறைக்கும் என்று நம்பினார். மீறி கை நீட்டுபவர்களுக்கான தண்டனையைக் கடுமையாக்கினார். எல்லாவற்றுக்கும் பலன் இருந்தது.

ஊழலின் ஊற்றுக்கண் அடைபட்டது

பட்டியலில் முன்னால் இடம்பிடித்திருக்கும் இன்னொரு ஆசிய நாடு ஜப்பான் (73 மதிப்பெண்கள்). ஜப்பானில் அரசியல்வாதிகள் - அதிகாரிகள் - கார்ப்பரேட் முதலாளிகள் ஆகிய முத்தரப்பினரிடையே ஊழலால் இறுகிய பிணைப்பு நெடுங்காலம் நீடித்தது. 1994-ல் அமலுக்கு வந்த அரசியல் சீர்திருத்தங்கள் இந்தப் பிணைப்பைப் பலவீனமாக்கியது. ஊழலையும்தான். அதிகாரம் பரவலாக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் மாறின. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வந்தது. தேர்தல் செலவுகள் குறைந்தன. கட்சிகள் வெளிப்படையாகத்தான் நிதி திரட்ட முடியும் என்றானது. ஊழலின் ஊற்றுக்கண்களில் கணிசமானவை அடைபட்டன.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலிருந்து கீழ் நோக்கி வரும். ஆனால், ஊழலுக்கு எதிரான மனோபாவம் கீழிருந்துதான் மேலே போக வேண்டும். மாறாக, ஊழலைச் சகித்துக்கொண்டால் அது மெல்ல மெல்ல ரத்த நாளங்களில் கலக்கும். நாளடைவில் புற்றுநோய்க் கிருமிகள்போலத் தம்மைப் பெருக்கிக்கொண்டு பரவும். ஆரோக்கியமான திசுக்களை அழிக்கும். உடலை உருக்குலைக்கும். அதை அனுமதிக்கலாகாது. மக்கள் ஊழல் கண்டு பொங்க வேண்டும். உயரிய மதிப்பீடுகளைப் பால்ய காலத்திலே விதைக்க வேண்டும். இவை நடக்கும்போது மேலிருந்து சட்டங்களும் வரும். அப்போது தேர்தல் பரப்புரைகளில் ஊழலுக்குப் பிரதான இடம் இருக்காது. விக்கிபீடியாவின் தேர்தல் பக்கங்களில் ஊழல் உண்மையாகவே இடம்பெறாமல்போகும்.

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close