[X] Close

கரும்பலகைக்கு அப்பால்... 22 - ஒரே மாதிரி இருக்கத் தேவையில்லை!


22

  • kamadenu
  • Posted: 04 Jun, 2019 09:29 am
  • அ+ அ-

-ரெ.சிவா

கோடை விடுமுறையில் இரண்டு முகாம்களில் குறும்படங்களைத் திரையிட்டுக் குழந்தைகளோடு கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் கலந்துரையாடல்கள், கலைப் பயிற்சிகள் என்று நிகழும் முகாம்களில் கவனிக்கத்தக்க அம்சம் இருப்பதாக உணர்ந்தேன்.

மரம் வளர்த்தல், கதை, பறவைகள் பற்றிய புரிதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கலைகள் என எல்லாவற்றிலும் எல்லோருக்கும் புரிதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் முகாம்களில் இருந்து  பள்ளிகள் பாடம் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது.

சாருக்கு அது புரியல!

பல்வேறு படங்களுடன் கல்வி குறித்த சில குறும்படங்கள் குறித்தும் உரையாடினோம். அவற்றுள் ஒன்று  ‘Alike’.  வசனம் இல்லாமல் வண்ணங்கள், உணர்வு, இயக்கத்தால் மனத்தில் கேள்விகளை எழுப்பும் அனிமேஷன் படம்.

இயந்திரமாக வேலை பார்க்கும் அப்பா. சுமக்க முடியாத புத்தக மூட்டையுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தை. குழந்தையின் ஆர்வத்தை, படைப்பாற்றலைக் கண்டுகொள்ளாமல் சொன்னதைச் செய்யச் சொல்லும் ஆசிரியர். தன்னைப் போல மகனை ஆக்க முயல்வதை உணர்ந்து குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக அப்பா மாறுவதுடன் நிறைவடைகிறது படம். குழந்தைகளுடன் கலந்துரையாடல் தொடங்கியது.

“அந்தப் பையன் அழகா படம் படமா A B C D எழுதுறான். அவங்க சாருக்கு அது புரியல.”

“நாள்பூரா வேலைபார்த்துச் சோர்வா ஆகுறதே அப்பாவோட வேலையா இருக்கு.”

“எல்லா அப்பா மாதிரியும் படிபடின்னு சொல்றாரு. அப்புறமா மகனோட ஆசையை நிறைவேத்துறாரு.”

“எல்லோரும் ஒரே மாதிரி வேலையைப் பார்க்குறாங்க. ஒரே மாதிரி நடக்குறாங்க,

தூக்கிட்டு நடக்க முடியாத அளவு புத்தகப்பை கனமா இருக்கு.”

"பள்ளிக்கூடமே இல்லாமல் படிக்க முடியாதா?” என்று கேள்விகள் தொடர்ந்தன.

பள்ளிக்கூடம் இல்லாமல் எப்படிப் படிக்க முடியும்? என்று கேட்டேன்.

தெரியல. ஆனா பள்ளிக்கூடத்தில் கஷ்டம் இல்லாமல் படிக்க முடியாதா என்று பதிலும் கேள்வியாக நீண்டது.

கஷ்டப்படாமல் முன்னேற முடியுமா? என்றேன்.

“நான் படிக்கறதைத் தானே சொன்னேன்!” என்று அந்தக் குழந்தை சொன்ன பதில் என் முகத்தில் அறைந்தது.

குழந்தைகளின் எளிய கேள்விகளுக்கு எப்போது பதில் தேடப்போகிறோம்?

குரல் எழுப்புங்கள் ஆசிரியர்களே!

எதிர்காலம், முன்னேற்றம், வெற்றி, கனவு என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளால் பயங்களை உருவாக்கிவைத்துள்ளோம். பெற்றோரும் பயந்து குழந்தைகளையும் பயமுறுத்தி உள்ளே தள்ளுவதாகவே கல்வி மாறியிருக்கிறது.

அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கும் கல்வி அதிக விலை கொண்டதாக ஆகியிருக்கிறது. கல்வி வியாபாரத்தின் பண முதலீடுகளைப் பன்மடங்கு லாபத்துடன் மீட்க வேண்டிய சுமையே குழந்தைகளிடமிருந்து குழந்தைப் பருவத்தைப் பறிக்கிறது. பல்வேறு அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.

அறிவின் பெயரால் புத்தகங்களைப் பெரியதாக ஆக்கியிருக்கிறோம். வகுப்பறையில் குழந்தைகளும் ஆசிரியரும் அடையும் சிரமங்கள் குறித்து ஆசிரியரே குரல் எழுப்ப வேண்டும்.

கல்வியில் மாற்றங்கள் என்பது புத்தக மாற்றம் என்ற அளவில் முடிந்துவிட்டது. புதிய புத்தகங்களின் முன்னுரைகள் வசீகரமாக இருக்கின்றன. அப்படியான கல்வியை வார்த்தைகளிலிருந்து செயல்பாட்டுக்கு மாற்றுவதே இன்றைய தேவை.

கற்பித்தல் முறைகள், சூழல், எதிர்காலத் தேவை, இன்றைய பயன்பாடு என்று பல்வேறு மாற்றங்கள் குறித்து ஆசிரியர்கள் தொடங்கிப் பெற்றோர், குழந்தைகளுடன்  கலந்துரையாடுவோம்.

படத்தின் பெயர் :  Alike

நேரம் : 8.01  நிமிடங்கள்

Youtube link :

Alike 

 

கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,

தொடர்புக்கு: artsiva13@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close