[X] Close

ஆம்னி பஸ் வெண்ணெய்... அரசு பஸ் சுண்ணாம்பு?


omni-bus-govt-bus-vennai-sunnambu

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jun, 2018 17:22 pm
  • அ+ அ-

ஆம்னி பஸ் வரவர, ஷேர் ஆட்டோ ரேஞ்சுக்கு ஆகிவிட்டது. ஆனால் அரசு பஸ் சென்னைக்குள் தலைகாட்டுவதே இல்லை. வெளியூர் செல்லும் பயணிகள் புலம்புகின்றனர்.

காலையில் இருந்து இரவு 8 மணி வரை வெளியூர்ப் பேருந்துகள், சென்னைக்குள் வருவதற்கு அனுமதியில்லை. வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள், பெருங்களத்தூர் வந்து, அங்கிருந்து தாம்பரம் வழியே வராமல், அப்படியே பைபாஸ் சாலை வழியாக, மதுரவாயல் வழியே சென்று, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் சென்றுவிடவேண்டும் என்பது விதி. அதேபோல, கோயம்பேடில் இருந்து வெளியூர் கிளம்புகிற பேருந்துகள், அதே மதுரவாயல் பைபாஸ் வழியே பெருங்களத்தூர் வந்தடையும். இது திருச்சி, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில், ராமேஸ்வரம், புதுக்கோட்டை, அறந்தாங்கி செல்லும் பேருந்துகளுக்குப் பொருந்தும்.

அரசுப் பேருந்துகள் அப்படித்தான் அனுப்பப்படுகின்றன. செல்கின்றன. டீசல் மிச்சம், அலைச்சல் மிச்சம்,கூடுதலாக கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்றெல்லாம் காரணங்கள் சொல்கிறார்கள் அரசுப் பேருந்து ஓட்டுனர்கள்.

ஆனால், ஆம்னிபஸ்களை சென்னைக்குள் சர்வசாதாரணமாகப் பார்க்கமுடிகிறது. சென்னை அசோக்நகர், ஈக்காடுதாங்கல், கத்திப்பாரா, ஆசர்கானா, ஆலந்தூர் கோர்ட், சிமெண்ட் ரோடு சாந்தி பெட்ரோல் பங்க், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், தாம்பரம் என்று வரிசையாக ஷேர் ஆட்டோ போல் பாயிண்டுகள் வரிசை கட்டி இருக்க, அங்கே ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு நின்று, பயணிகளை ஏற்றிச் செல்வதை தினமும் பார்க்கலாம்.

‘’அரசு பஸ்லயே காசு ஏத்திட்டாங்க. போய்த்தொலையுதுன்னு ஏறலாம்னா, சென்னை சிட்டிக்குள்ளே அந்த பஸ்சுகளை பாக்கறது குதிரைக்கொம்புதான். ஆனா, ஆம்னி பஸ் வரிசையா வருது, இஷ்டத்துக்கு நிக்கிது. குடும்பத்துல நாலுபேரு அரசுபஸ்ல போறதுக்கு எவ்ளோ காசு ஆவுதோ, அது ஆம்னிபஸ்ல ஒருத்தருக்கே ஆவுது’ என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் பயணிகள்.

ஆசர்கானா போஸ்ட் ஆபீஸ் வாசலில், எக்கச்சக்க ஆம்னி பஸ்கள் நிற்கின்றன. அதேபோல் நங்கநல்லூர் திரும்புகிற பகுதியில், பெட்ரோல் பங்க் பாயிண்டிலும் முன்னதாக ஆலந்தூர் கோர்ட் அருகிலும் ஏராளமான பஸ்கள் எந்த டென்ஷனும் இல்லாமல், ஆற அமர நின்று நிதானித்து நிறுத்தி ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

பல்லாவரம் ஏரியாவில் பால வேலை நடக்கிறது. ஆகவே சர்ச் அருகில் உள்ள பாதை அடைக்கப்பட்டு, சுற்றி அனுப்பப்படுகிறது. பல்லாவரம் சந்தை கூடும் பகுதி வழியே பஸ்கள் ஏராளமாக வருவதால், சந்தையில் கடை கொஞ்சம் அப்புறப்படுத்தப்பட்டு, வியாபாரமும் மந்தமாகிவிட்டது என்கிறார்கள் வியாபாரிகள்.

பல்லாவரம் பஸ் ஸ்டாப்பில் ஆம்னி பஸ்கள்தான் நிற்கின்றன. கூட்டம் பார்த்து, டிராபிக் பார்த்து மிரண்டு போகும் மக்கள், கோயம்பேடு போய் அரசு பஸ்சை ஏறுவதற்குள், பஸ் கோயம்புத்தூருக்கே போயிரும் போல என்று சோகத்திலும் காமெடியாகப் பேசிக்கொள்கிறார்கள்.

ஒருகண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா என்பார்கள். ஆம்னி பஸ் வெண்ணெய், அரசு பஸ் சுண்ணாம்பு என்று உதாரணம் பொருத்திச் சொல்லி பெருமூச்சு விடுகிறார்கள் பயணிகள்.

   

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close