[X] Close

பயணங்களும் பாதைகளும்: 8- பட்டணத்தில் பூதம்


lochness-monster

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 May, 2018 11:03 am
  • அ+ அ-

பாற்கடலில் திருமால் பள்ளிகொண்ட ஆதிசேஷனை தேடி நாம் போகலாமா? சிரிப்பா, கேலியா, ஆச்சர்யமா, எப்படிப்பட்ட எண்ணம் தோண்றுகிறது இதைக்கேட்டதும்?

எதற்கு இந்தக் கேள்வி என்றால் சென்ற வாரம் தினசரி ஒன்றில் வெளியான ஒரு செய்தியில் நியூசிலாந்து ஆராய்ச்சியாளர் ஒருவர் ஸ்காட்லாந்து லாக்னெஸ் ஏரியில் நெஸ்ஸி என்று செல்லமாக அழைக்கப்படும் கடல் அசுரனைப்பற்றிய மரபணு ஆராய்ச்சியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தது இடம்பெற்றிருந்தது.

37 கிலோமீட்டர் பரப்பில் அமைந்த ஒரு நல்லதண்ணீர் ஏரி தான் லாக்னெஸ். கடல் மட்டத்தில் இருந்து 52 அடிகள் உயரத்தில் உள்ளது. இது ஸ்காட்லாந்தின் இன்வெர்நெஸ் எனும் இடத்தில் உள்ளது. 

இப்போது நான் பார்த்த லாக்நெஸ் மான்ஸ்டரைப் பற்றிய கதைக்கு வருவோம்.

நாங்கள் லண்டனில் ஒரு வாரம் தங்கிவிட்டு, அங்கிருந்து ரயில் மூலம் ஸ்காட்லாந்து சென்றோம். அது ஜூன் மாதம் என்பதால் லண்டனில் அவ்வளவாகக் குளிர் இல்லை. எடுத்துச்சென்ற ஸ்வெட்டருக்கு லண்டன் பார்க்க விதியில்லை. இந்த ஒருவார சூரியக்குளிப்பு தந்த தைரியம் ஸ்காட்லாந்து போகும்போது ஸ்வெட்டரை பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டேன்.
மிதமான குளிர்படுத்தப்பட்ட ரயிலில் சில மணி நேரப்பயணம். வண்டியில் இரு புறமும் அகலமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள். அதன் வழியே தெரிந்த பச்சைப்பசேல் புல்வெளிகள். அதில் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பிரம்மாண்ட மணிகளோடு கூட்டமாக அலையும் மிக பிரம்மாண்ட மாடுகளும் குதிரைகளும். மைல் கணக்கில் விரியும் புல் வெளிகளில் ஆங்காங்கே மறைந்து தலைகாட்டும் வீடுகள், வாசலில் கொடிகளில் உலரும் துணிகள், கைகளில் குச்சியோடு, தலையில் குல்லாய், உடலில் கோட் சராயுடன் வயதான ஒருவர் அல்லது சின்றெல்லா வித உடையோடு, மிகச் சிவப்பாக, தலையில் அழகிய தொப்பியுடன் ஆப்பிள் பறிக்கும் ஒரு மாது....வீட்டுப் புகை போக்கியிலிருந்து மெதுவாக எட்டிப்பார்க்கும் புகை... அலுக்கவே அலுக்காத சினிமா படக்காட்சிகள்தான்.

சிலு சிலுப்பாக ஆங்காங்கே நீர் ஓடைகள். அதன் முகப்பில் கட்டப்பட்ட சிறிய போட்கள் என அடடா....இப்படி ஒரு தேசத்தில் இருக்கமாட்டோமா என்ற ஏக்கம் வராமல் நிச்சயம் யாரும் இருக்கமுடியாது.

நாங்கள் சென்ற இடத்தின் பெயர் அவிமோர். ஒரு வழியாக அங்கு சென்றடைந்தோம். பெட்டி படுக்கையுடன் வேறு யாருமே இறங்காத அந்த ஊரில் கீழிறங்கி தரையில் காலை வைத்தவுடன். குளிரில் உடல் நடுங்க, வாய் தானே திறந்து மூடி தந்தி அடிக்க...பேச வராமல் நான் உளறினேன்.
லேசாகக் குளிர் அடங்கி கைகளை நான் தேய்ப்பதற்குள், விற்றென்று ஒரு சுழல் காற்று வீசி உடலைச் சில்லிட வைக்க.... எல்லோரிடமும் அவர்கள் ஸ்வெட்டரை வாங்கிப் போட்டுக்கொண்டு திருஷ்டி பூசனிக்காய் பொம்மை போல் ஹோட்டல் அறையைச் சென்றடைந்தேன்.

சரி முக்கியமான பகுதிக்கு வருவோம்.விடுதியின் ரிசெப்ஷனிலேயே சுற்றிப்பார்க்கப்படவேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். எனக்கு முதலில் கண்ணில்பட்டது, லாக் நெஸ் மான்ஸ்டர். உடனே விசாரிக்கத்தொடங்கினேன்.
நிறைய போட் சவாரிகள் உள்ளதாகவும், சரியான நேரம் பார்த்துச்சென்றால் அந்தக் கடல் ராக்ஷசனை பார்க்கவும் முடியும் என்று சொல்லப்பட்டது. விடுதியில் தங்கியவர்கள் பார்த்திருக்காற்கள் என்ற உபரி தகவல் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது.

மாஸ்டர் ப்ளான் தாயாரிக்கத் தொடங்கினோம். ஒரு வழியாகக் காலை பத்து மணி ....கடைசியில் இந்த நேரத்தை முடிவு செய்தோம். மிகப்பெரிய க்யூவில் நின்று டபுள் டெக்கர் போட்டில் ஏறினோம். கீழ்த் தளத்தில் ஒரு பாதியில் சின்ன சாப்பாட்டுக்கூடம். வித விதமாக மதுவகைகள் அங்கிருந்தன. 
முதல் தளத்தில் வரிசையாக அமைக்கப்பட்ட இருக்கைகள். ஓரமாக இரு மெகா சைஸ் தூரனோக்கி. பக்கத்திலேயே அவன் வழி பார்ப்பதற்கு யூரோவில் கட்டணம் சேகரிக்கும் ஒரு சிப்பந்தி.

அடுத்த தளமும் இதே போல் தான். நாங்கள் அந்தத்தளத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு வேளை நெஸ் வெளியே மூக்கை நீட்டினால் உயரத்தில் இருந்து தானே நன்றாகத்தெரியும். வெயில் அதிகம் இல்லை. தண்ணீர் மேல் மிதந்து கொண்டிருந்தோம். குளிர் மெதுவாக உறைக்கத் தொடங்கியது. சட் என்று காற்று வீசிக் கண்டதையும் கெட்டதாயும் பறக்கச்செய்தது. ஆனாலும் கீழே செல்வதற்கு மனம் இல்லை. எங்கேயாவது நெஸ் மான்ஸ்டரை தவற விட்டு விட்டால்.
தூரத்தில் தெரிந்த ஒரு கடல் பாசி சில நேரம் நெஸ்தான் எனும் சந்தேகத்தை கிளப்பியது. கைகளில் நம் ஊர் பொறிக்கு சமமான வஸ்துவை நீரில் போட்டபடி சிலர். நெஸ்ஸை பற்றி அதிகம் கவலைப்படாமல் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சிலர்.
அப்போது அந்தப் போட்டின் கைட் சில அடி தூரத்தில் இருந்த ஒரு சின்ன குடிசை போன்ற வீட்டைக்காட்டினார். நான்கு குச்சுகளின் மேல் தண்ணீரில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் ஒரு கணவனும் மனைவியும் பல வருடங்களாக இருப்பதாகவும், டர்ன் எடுத்துக்கொண்டு அவர்கள் டெலஸ்கோப் வழியாக நீரில் காலையும் மாலையும் நெஸ்சை தேடும்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

அந்த மூலையில் நின்றிருந்த யாரோ ஒருவர் பெரிய சத்தம் ஒன்றைப்போட, நாங்கள் அனைவரும் ஒரே ஓட்டமாக அவரை நோக்கி ஓட....எல்லோரும் நெஸ் நெஸ் என்று ஜபித்த வண்ணம் கண்ணத்தில் போட்டுக்கொள்ளாத குறையாக பர பரக்க....கடைசியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருந்த இருவர் போட் ஆட்டத்தில் தவறி உதட்டைக்கடிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட சத்தம் என்பதால் சப்பென்று போனது.

ஆக இரண்டு மணி நேரம் நெஸ்ஸைத் தேடியதில் ஒன்று நன்றாகப் புரிந்தது. சில நேரம் முட்டாள்களாக இருப்பதில் நமக்கு மகிழ்ச்சி, முட்டாள்களாக நம்மை வைப்பதில் நாட்டுக்கு மகிழ்ச்சி. டூரிசம் மூலம் கிடைக்கும் வருமானம் அபாரம்.
இப்போது செய்யப்போகும் மரபணு ஆராய்ச்சி சொல்லட்டும், யார் யாரை முட்டாள்களாக்கி உள்ளார்கள் என்று....!

 

-லதா ரகுநாதன்

தொடர்புக்கு: lrassociates@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close