[X] Close

உலக வலசை பறவை மாதம்: சிவகங்கைக்கு வந்த ஐரோப்பிய அலை


  • kamadenu
  • Posted: 18 May, 2019 12:41 pm
  • அ+ அ-

-ஆதி வள்ளியப்பன்

ஓரிரு மாதங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து கோட்டூர் எனும் கிராமத்துக்குப் போக வாய்ப்புக் கிடைத்தது. முதன்மைச் சாலையான சருகணி சாலையிலிருந்து உட்சாலையில் நுழைந்து பயணித்துக்கொண்டிருந்தோம். அந்தச் சாலைக்குள் சென்றுகொண்டிருந்தபோது, பெரிதாக ஆச்சரியப்படுத்தும் அம்சங்கள் ஏதும் இல்லாமல்தான் நேரம் கடந்துகொண்டிருந்தது.

சிவகங்கை மாவட்டம், அதன் அண்டை மாவட்டமான ராமநாதபுரத்தைப் போலவே வறட்சிக்குப் பெயர் போனது. இந்தச் சாலைக்கு மிக அருகிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு (பெயர் மட்டும்தான் அழகு). புதர்களும் குப்பைகளும் மண்டிக் கிடக்கிறது. மணலைக்கூட இந்த ஆற்றில் அரிதாகவே பார்க்க முடிகிறது.

இதில் தண்ணீர் பாய்ந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. இந்தப் பகுதியில் தண்ணீர்த் தேவையைப் பெரிய கோயில்களின் அருகே அமைக்கப்பட்டுள்ள ஊருணிகள் எனும் குளங்கள் நிறைவுசெய்து வந்தன. அந்தக் குளங்களில் பல, நாங்கள் சென்றிருந்தபோது வறண்டு காய்ந்து கிடந்தன.

போக்கை மாற்றிய பறவை

இப்படி எங்கும் வறண்டிருந்த நிலையில் ஆங்காங்கே கொஞ்சம் பசுமை எட்டிப் பார்க்கும் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தோம். சமீப ஆண்டுகளாக மிக அதிகமாக வெறுக்கப்படும் சீமைக் கருவேல மரங்கள் சாலையின் இருமருங்கிலும் இருந்தன. சாலையின் வலப்புறத்தில் ஆள் உயரத்துக்கு அவை உயர்ந்து வளர்ந்திருந்தன. சாலையின் இடப்புறம் அதே மரங்கள் குட்டையாகவும் காய்ந்தும் குறும்புதர்போல் மண்டிக் கிடந்தன.

அந்தப் புதர்களின்மீது 50, 100 என்ற கணக்கில் பழுப்பும் இளஞ்சிவப்பும் கலந்த நிறத்தில் பல குருவிகள் உட்கார்ந்திருந்தது தென்பட்டது. சட்டென்று சுமார் 40-50 குருவிகள் ஒரு அலைபோல் மேலெழுந்து சாலையைக் கடந்து பறப்பதும், பிறகு மீண்டும் பழையபடியே முட்புதர்களின் மீது வந்து அமர்வதுமான அந்தக் காட்சி, எங்கள் பயணத்தின் போக்கை மாற்றியது.

கரும் பேரலைகள்

சுமார் 20-30 அடி தொலைவிலிருந்து அந்தக் குருவிகளைச் சட்டென அடையாளம் காண முடியவில்லை. அவை சூறைக்குருவிகளாக-சூரமாறிகளாக, இருக்க வேண்டுமெனக் கணித்தேன். சூறைக்காற்றைப் போன்ற வடிவத்தில் கூட்டமாக அவை பறப்பதால், இந்தக் குருவிகளுக்கு சூறைக்குருவிகள் என்ற பெயர் வந்திருக்கலாம்.

வெளிநாடுகளில் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வானத்தில் இவை பறந்து செல்லும் காட்சி பிரபலம். சோள வயல்களில் தரையிறங்கி உண்பதால், இவற்றுக்குச் சோளக்குருவிகள் என்றொரு பெயரும் உண்டு.

பார்ப்பதற்கு நம்ம ஊர் மைனா, சற்றே வேறுபட்ட நிறத்தில் இருப்பதைப் போன்று தோன்றும் இந்தப் பறவைகள், மைனா குடும்பமான Starling என்ற வகையின்கீழ் முன்பு வகைப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அதிலிருந்து வேறுபடுத்தப்பட்டு Pastor என்ற வகையின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மைனாவின் மேற்புறம் பழுப்பாகவும் தலை, இறக்கைப் பகுதி, வால் போன்றவை கறுப்பாகவும் இருக்கும். இதன் தலை, இறக்கைப் பகுதி, வால் போன்றவையும் கறுப்பாகவே இருக்கும் அதேநேரம், உடல் பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

sivagangai.jpg 

குழப்பம் ஏன்?

இந்தப் பறவையை சென்னை நன்மங்கலம் காப்புக் காட்டிலும் வேறு சில இடங்களிலும் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். அன்றைக்குக் கையில் இருநோக்கி இல்லாத நிலையில், அந்தப் பறவையைப் பார்த்தவுடன் அடையாளம் காண்பது சற்றே கடினமாக இருந்தது. சற்று நேரம் காத்திருந்த பிறகு, நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகிலிருந்த சீமைக் கருவேல மரத்தின் மேற்புறத்தில் 10-15 பறவைகள் வந்து அமர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்தபோது அவை சோளக்குருவிகள்தாம் என்பதை உறுதி செய்துகொள்ள முடிந்தது.

முதலில் ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம், அந்தப் பறவைகளின் மேற்புறம் இளஞ்சிவப்புக்குப் பதிலாகப் பழுப்பு நிறம் தூக்கலாக இருந்ததுதான். பருவநிலைக்கு ஏற்பவும் பறவைகள் இனப்பெருக்கக் காலத்திலும், சிலவற்றில் ஆண்-பெண் வேறு வேறு நிறத்திலும் காணப்படுவது இயற்கைதான். ஒரே வகைப் பறவை ஒரு பகுதியில் ஒரு நிறத்திலும் மற்றொரு பகுதியில் சற்றே மங்கிய அல்லது சற்றே தூக்கலான நிறத்தைக் கொண்டிருப்பதும் புதிது அல்ல.

வெயிலைத் தேடி வந்தவை

சரி, மைனாவைப் போன்ற இந்தப் பறவையை ஓரிடத்தில் 50-100ஆகப் பார்ப்பதில் அப்படியென்ன ஆச்சரியம் இருக்கிறது? அந்தப் பறவைகள் நம்மூர் பறவைகள் அல்ல. ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகரிக்கும்போது காலம்காலமாக நம் நாட்டுக்கு வலசை வருபவை என்பதுதான் இதில் பொதிந்திருக்கும் ஆச்சரியம். மழைக்காலம்-குளிர்காலத்தில் நம் நாட்டுக்கு இரை தேடி வரும் அவை, மீண்டும் தங்கள் நாடுகளில் பருவநிலை உகந்ததாக மாறிய பின்பு அங்கேயே திரும்பிச் சென்றுவிடுகின்றன. இப்படி ஆண்டுதோறும் தெற்குப் பகுதிகளுக்கு இரை தேடி வருவதையும், மீண்டும் தாயகம் திரும்புவதையும் அந்தப் பறவைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

அன்றைக்கு நாங்கள் பார்த்த இடத்தில் 200-300 பறவைகள் இருந்திருக்கும். வாழ்க்கையைச் சிக்கலின்றி நகர்த்துவதற்காக ஆண்டுதோறும் ஐரோப்பாவிலிருந்து இந்தியா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளுக்கு வலசை வருவதை வழக்கமாக அவை கொண்டுள்ளன. ஒவ்வொரு வலசை பருவத்தையும் இந்தப் பறவைகளே தொடங்கி வைப்பதாக ‘பறவை மனிதர்' சாலிம் அலி குறிப்பிட்டுள்ளதாகப் படித்தேன்.

ஓரிடத்துக்கு வலசைப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன என்றால், முதலாவது அந்த இடத்தில் அவற்றுக்கான இரை நன்கு கிடைக்க வேண்டும். அடுத்ததாக அந்த இடம் மனிதத் தொந்தரவுகள் அதிகமில்லாத இடமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களுமே நாங்கள் பார்த்த இடத்தில் இருந்ததாகவே தோன்றியது. இதுபோன்ற மனிதத் தொந்தரவுகள் அதிகமில்லாத இடங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே எஞ்சியிருப்பதால்தான் வலசை வரும் நிலப்பறவைகளும் நீர்ப்பறவைகளும் தஞ்சம் புக முடிகிறது. அந்த வகையில் நாங்கள் சென்ற இடம் வறட்சியான ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தப் பறவைகளால் வளம் பெற்றுத் திகழ்ந்தது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close