[X] Close

360: அண்ணா புறப்பட்டார் பராக்!


360

  • kamadenu
  • Posted: 18 May, 2019 08:42 am
  • அ+ அ-

வாசகர்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல். முன்பதிவு அடிப்படையிலேயே முதல் பதிப்பு முழுவதும் விற்றுவிட்டது. அடுத்த பதிப்பு தயாராகிவிட்டது. புத்தகத்தைப் படித்த வாசகர்கள் பலர் ஊருக்கு ஊர் புத்தக அறிமுகக் கூட்டத்துக்குத் திட்டமிட்டுவரும் நிலையில், எல்லோரையும் முந்திக்கொண்டு முதல் கூட்டத்தை சென்னையில் மே 19 அன்று நடத்துகிறார் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையிலுள்ள இந்திய அலுவலர் சங்கத்தில் ஞாயிறு மாலை 6 மணி அளவில் நடைபெறவிருக்கும் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர் இயக்குநர் கரு.பழனியப்பன். நிகழ்ச்சி அரங்கில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகத்தோடு, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ புத்தகமும் விற்பனைக்குக் கிடைக்கும்.

பவாவின் பெருங்கதையாடல்

புகழ்பெற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் வாய்வழிக் கதையாக, தொடர்ந்து சொல்லிவருகிறார் பவா செல்லத்துரை. நான்கு ஆண்டுகளாக இதுவரை 80 சிறுகதைகளைச் சொல்லியிருக்கும் அவர், அடுத்த கட்டமாக இப்போது நாவல்களையும் கையில் எடுத்திருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை மாலையில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘இடக்கை’ நாவலைத் தனது வசீகரமான குரலில் சொன்னார். “கதை கேட்கச் செய்வதன் மூலம் வாசித்தலை நோக்கி நகர்த்தும் முயற்சியாக இருக்கிறது” என்று பாராட்டுகள் குவிகின்றன.

பஷீர் மண்ணில் தோப்பிலுக்கு அஞ்சலி

தோப்பில் முஹம்மது மீரானின் சொந்த ஊரான தேங்காய்ப்பட்டினத்துவாசிகளிடம் தமிழும் மலையாளமும் கலந்து திரளும். தமிழ் வாசகர்களுக்கு நிகராக கேரளத்திலும் தோப்பிலுக்கு செல்வாக்கு உண்டு. கேரளத்தில் தோப்பிலுக்காக நடந்த அஞ்சலிக்கூட்டத்தில் கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரனும் கே.டி.ஜலீலும் கலந்துகொண்டனர். இலக்கியத்துக்கும் இலக்கிய ஆளுமைகளுக்கும் கேரளம் தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

திருப்பத்தூரில் புத்தகத் திருவிழா

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், திருப்பத்தூர் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் இணைந்து புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர். திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள வி.பி.சிங் மண்டபத்தில் மே 15 தொடங்கிய புத்தகக்காட்சி ஜூன் 2 வரை நடக்கிறது. ஐயாயிரம் தலைப்பில் ஐந்து லட்சம் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

என்னை எப்போது சுடப்போகிறீர்கள்?

பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஸ்டானிஸ்லவஸ்கி நடிப்புப் பள்ளி வழங்கும் ‘என்னை எப்போது சுடப்போகிறீர்கள்?’ எனும் நவீன நாடகம் இன்று (18.05.2019) மாலை 5:30 அளவில் பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில் நிகழ்த்தப்படவிருக்கிறது. இந்நாடகம் சதத் ஹசன் மன்ட்டோ, மனுஷ்யபுத்திரனின் எழுத்துகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு உணர்ச்சிமிகு கவிதைக்கு நடிகர் நாசர் குரல் வழங்குகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close