[X] Close

ஆட்டத் திருப்பர்கள்: ஹைதராபாத்தில் பறக்கும் அஸாதுதீன் ஒவைசியின் பட்டம்!


  • kamadenu
  • Posted: 17 May, 2019 08:58 am
  • அ+ அ-

-செல்வ புவியரசன்

ஒரே ஒரு மக்களவை உறுப்பினர், ஏழு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே என்றாலும் தெலங்கானா அரசியலில் திருப்பங்களை உண்டாக்கும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது ‘ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேதுல் முஸ்லிமீன்’ (ஏஐஎம்ஐஎம்). தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவுக்குத் தனிப்பெரும் செல்வாக்கு இருந்தாலும் தலைநகர் ஹைதராபாத்தில் இன்னமும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் பட்டம் சின்னம்தான் சிறகடித்துக்கொண்டிருக்கிறது.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அஸாதுதீன் ஒவைசி, தொடர்ந்து மூன்று முறை ஹைதராபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு ஆந்திர பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார். அவரது தம்பி அக்பருதீன் ஒவைசி, சந்திராயனகுட்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்ணன், தம்பி இருவருமே வெறுப்பு கக்கும் பேச்சுக்கும் புகழ்பெற்றவர்கள்.

இவர்களது தந்தை சுல்தான் சலாவுதீன் ஒவைசி, சார்மினார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1967 தொடங்கி 1984 வரை தொடர்ந்து ஆறு முறை வெற்றிபெற்றவர். அதன் பிறகு மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சலாவுதீன் ஒவைசிக்குப் பிறகு ஹைதராபாத் மக்களவை உறுப்பினராக அஸாதுதீன் ஒவைசி தொடர்கிறார். சார்மினார் சட்டமன்றத் தொகுதியில் சலாவுதீனின் நண்பர் சையது அகமது பாஷா குவாத்ரி தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குவாத்ரி, தொகுதி மாறி யாகூத்புராவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஹைதராபாத்தில் ஒரு குடும்பமும் அவர்களது குடும்ப நண்பர்களுமாய்த் தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கு முஸ்லிம் வாக்குவங்கி மட்டுமே காரணமில்லை. 4% வாக்குகள்கூட இல்லாமல் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஏழு தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் வெற்றிபெற்றிருக்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம்தான் இல்லையா? எப்படி இது சாத்தியமானது?

மக்களின் தலைவர் ஒவைசி?

ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 10.30 முதல் மதியம் 2.30 வரை ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகளையும் ஒருசேரப் பார்க்கலாம். தினந்தோறும் கோரிக்கை மனுக்களோடு நூறு பேராவது வந்துபோகிறார்கள். கோரிக்கைகள் அனைத்துக்கும் அங்கேயே உடனடியாகத் தீர்வுகாண முயற்சி எடுக்கப்படுகிறது. அங்கிருந்தே தொடர்புடைய அதிகாரிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார்கள் அல்லது அவர்களுக்குப் பரிந்துரைக் கடிதங்களை எழுதிக்கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் ஒவைசியின் முன்னிலையிலேயே நடக்கின்றன.

தொகுதி மக்களின் குறைகேட்பதற்கு மட்டுமல்ல, ஏஐஎம்ஐஎம் உறுப்பினர்கள் சட்டமன்றத்திலும் மக்களவையிலும் பேசுவதற்கு உதவியாக ‘ஹபீப்-இ-மில்லத்’ என்ற அரசியல் ஆய்வு மையம் ஒன்றும் நடத்தப்பட்டுவருகிறது.

அதேநேரத்தில், ஒவைசி சகோதரர்களைப் பற்றி விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் அவர்களது கல்வி நிறுவனங்கள் கிளைபரப்பிவருகின்றன. மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அதிகக் கட்டணங்கள் வசூலிக்கிறார்கள். மாநகரம் முழுவதும் அவர்களே தனியார்ப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்துவதால், அரசுப் பள்ளிகளைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. ரியல் எஸ்டேட் வணிகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள். அரசியல்வாதிகளுக்குரிய அத்தனை குறைகளும் ஒவைசி சகோதரர்களுக்கும் உண்டு என்றபோதிலும், கோரிக்கை மனுவோடு யார் கட்சி அலுவலகத்தை நாடினாலும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதே அவர்களது பலம்.

மகாராஷ்டிரத்திலும் கணக்கு

தெலங்கானாவில் கிடைத்த வெற்றியை மகாராஷ்டிரத்திலும் சோதித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார் அஸாதுதீன் ஒவைசி. 2014 சட்டமன்றத் தேர்தலில் 24 இடங்களில் போட்டியிட்டது ஏஐஎம்ஐஎம். மும்பை பைகுல்லா, அவுரங்காபாத் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று மகாராஷ்டிரத்திலும் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியில் அங்கம்வகித்தது. அவுரங்காபாத் சட்டமன்ற உறுப்பினர் இம்தியாஸ் ஜலீல், இப்போது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.

‘மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் தேசியக் கட்சிகள் மகாராஷ்டிரத்திலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரைக்கூட நாடாளு மன்றத்துக்கு அனுப்பவில்லை. அனைவரும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்கு முயல்கிறார்களே தவிர, அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுக்கத் தயாராக இல்லை’ என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார் அஸாதுதீன் ஒவைசி.

மகாராஷ்ரத்தில் மட்டுமல்ல, பிஹாரில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் கிஷன்கஞ்ச் தொகுதியிலும் ஏஐஎம்ஐஎம் இந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளரைக் களத்தில் இறக்கியிருக்கிறது. 2015-ல் நடந்த பிஹார் சட்டமன்றத் தேர்தலில் சீமாஞ்சல் பகுதியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம், அதிலொரு தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கும் வாய்ப்பளித்தது. முஸ்லிம்களின் நலனுக்கான அரசியல் கட்சி என்று அடையாளப்படுத்திக்கொண்டாலும் தேர்தல் வியூகங்களுக்கும் தயாராகவே இருக்கிறது.

காங்கிரஸ் சந்தித்திருக்கும் நெருக்கடி

தெலங்கானாவின் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்கள் 12.5%. தெலங்கானா தனி மாநில மாவதற்கு முன்பு சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்துவந்தன. தற்போது அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிட்டது ஏஐஎம்ஐஎம்.  2014  மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவின் 4 தொகுதிகளிலும் ஆந்திரத்தின் ஒரு தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது. வழக்கம்போல, ஹைதராபாத் தொகுதியில் அஸாதுதீன் ஒவைசி மட்டுமே வெற்றிபெற்றார். 2014 சட்டமன்றத் தேர்தலையும் தனியாக எதிர்கொண்டு 8 இடங்களில் போட்டியிட்டது, 7 இடங்களைக் கைப்பற்றியது.

2018 சட்டமன்றத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக்கொண்டது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி. அக்கட்சி வலுவாக இருக்கும் 8 தொகுதிகளை அதற்கே விட்டுக்கொடுத்து மற்ற தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் தொடர்கிறார் சந்திரசேகர ராவ். ஏஐஎம்ஐஎம் கட்சியும் சட்டமன்றத்தில் ஏழு இடங்களைத் தக்கவைத்துக்கொண்டது.

 நடந்து முடிந்திருக்கும் மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட்டிருக்கும் அஸாதுதீன் ஒவைசியின் வெற்றிவாய்ப்பு என்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், பாஜகவுக்கு எதிரான வாக்குகளில் கணிசமானவற்றைக் காங் கிரஸுக்குக் கிடைக்காமல் சிதறச் செய்துவிட்டார் ஒவைசி.

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close