[X] Close

தேர்தல் அறிவிப்போடு எம்பிக்கள் செயல்பாடுகளை முடக்குவது சரியா?


  • kamadenu
  • Posted: 17 May, 2019 09:00 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

தேர்தல் அறிவிப்பு வெளியான வேகத்தில் மக்களவை உறுப்பினர்களின் செயல்பாடு கிட்டத்தட்ட நம் நாட்டில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடுகிறது; இந்நிலை சரியா என்ற கேள்வி எழுகிறது.

இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பை மார்ச் 10-ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் அறிவிப்போடு சேர்த்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதிலும் அமலாகிவிடுகின்றன. பிறகு, மக்களுக்கான வளர்ச்சிப் பணிகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் உள்ளிட்ட எதையும் அரசு செய்ய முடியாது. இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட விதிவிலக்கான தருணங்களில் மட்டும் புதிய முடிவுகள், நிதி உதவி அளிக்கும் அதிகாரம் அரசிடம் உள்ளது. ஏனைய விஷயங்களில் அரசின் கை கட்டப்பட்டுவிடுகிறது என்றாலும்கூட, பிரதமரோ அவரது அமைச்சரவையோ கூடி வழக்கம்போல ஆலோசனை நடத்தவோ, புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் அத்தியாவசியமான தேவைகளுக்கான முடிவுகளை எடுக்கவோ எந்தத் தடையும் இல்லை. தேர்தல் நாட்களிலும் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சகங்கள் வழக்கம்போல செயல்படுகின்றன.

ஆனால், மக்களவை உறுப்பினர்களின் பணிகளோ கிட்டத்தட்ட தேர்தல் அறிவிப்புக்குப் பின் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிடுகின்றன. தேர்தல் காலகட்டம் நெடுகிலும் மக்களுக்கான பணிகளில் மக்களவை உறுப்பினர்கள் ஈடுபட முடிவதில்லை. வழக்கமாக, மக்கள் அவர்களிடம் அணுகும் பரிந்துரைகளையும்கூட அவர்களால் செய்து தர முடிவதில்லை. மக்கள் கோரிக்கைகளைத் தாங்கி வரும் எந்தக் கடிதத்தையும் மாநிலத்தின் அதிகாரிகள் முதல் மத்திய அமைச்சகங்கள் வரை யாருக்கும் மக்களவை உறுப்பினர்கள் அனுப்ப முடியாது. இது தேர்தலின் முடிவுகள் வெளியாகி புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்கும் வரை நீடிக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியான மார்ச் 10 தொடங்கி தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 வரை கிட்டத்தட்ட 75 நாட்கள் நமது மக்களவை உறுப்பினர்கள் செயலிழக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். அவர்களுடைய பதவிக்காலம் ஜூன் 3 வரை கணக்கில் இருந்தாலும், இப்படி ஒரு சங்கடத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோன்ற நிலை ஏற்படுவது யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலே இருக்கிறது.

பெரிய முடிவுகளை எடுப்பது பிரதமரும் அமைச்சர்களும்தான். ஆனால், தேர்தல் முடிவுகளைப் பாதிக்கவல்ல பெரிய முடிவுகள் - அறிவிப்புகள் நீங்கலாக அவர்களே அன்றாடப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படும்போது, மக்களோடு நேரடியாகத் தொடர்பில் உள்ள மக்களவை உறுப்பினர்களும் குறிப்பிட்ட வரையறைகளோடு அப்படி அனுமதிக்கப்படுவது குறித்து நமது அரசும் தேர்தல் ஆணையமும் யோசிக்க வேண்டும்.

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close