[X] Close

பாகுபலிதான் பார்ட் 2... அக்கினி வெய்யிலுமா? சென்னை செம ஹாட் மச்சி!  


chennai-hot-heat

  • வி.ராம்ஜி
  • Posted: 29 May, 2018 11:43 am
  • அ+ அ-

அக்கினி நட்சத்திரம் நேற்றுடன் முடிந்தது. எல்லோரும் ‘அப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள். ஆனால் அக்கினி நட்சத்திரம் முடிந்தும் கூட, இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம், ‘தாங்கமுடியலடா சாமீ’ ரகமாகத்தான் இருக்கிறது என்று புலம்பித் தவித்து, தலையால் தண்ணீர் குடிக்கிறார்கள் சென்னைவாழ் மக்கள்.

மே மாதம் வந்துவிட்டாலே, பள்ளிகல்லூரிகளெல்லாம் விடுமுறை விட்டு குதூகலமாகிவிடுவார்கள். அதேபோல், மே மாதம் அக்கினி நட்சத்திரக் காலம். மே முதல் வாரம் தொடங்கி நேற்று வரை அக்கினி நட்சத்திரம் அலப்பறையைக் கொடுத்தது. இதில் மக்கள் வாடிவதங்கித்தான் போனார்கள்.

இந்த மாதத்தில்தான் பிளஸ்டூ மற்றும் டென்த் ரிசல்ட்டும் வரும், வந்தது. ஆனால் செஞ்சுரி அடித்த மாணவ மாணவிகள் போல், வெயிலில் செஞ்சுரி அடித்த ஊர்கள் தலைப்புச் செய்தியானது. வெயில்நகரம் என்று பேரெடுத்த வேலூரைச் சொல்லவே வேண்டாம். ‘பேரைக் கேட்டதும் சும்மா அதிருதுல்ல’ எனும் ரீதியில், வேலூர் என்று சொன்னதுமே அங்கே சாலைகள் அனல் கக்கும் உணர்வினூடான கற்பனைக் குதிரைகள், கால் வைக்க முடியாமல் தவித்து மருகின. சர்வசாதாரணமாக, செஞ்சுரியைப் போட்டுக்கொண்டே இருந்தன. செஞ்சுரி தாண்டி, சாதனைக்குப் பதிலாக வேதனைகளையும் வியர்வைகளையும் காட்டிக்கொண்டே இருந்தன.

கந்தக பூமி என்றே திருச்சிக்கு இன்னொரு பெயர் உண்டு. இங்கேயும் எப்போதும் போலவே இந்தக் கோடையிலும் வெயிலின் தாக்கம் ஏகத்துக்கும் எகிறியடித்தது. பக்கத்தில் உள்ள கரூரும் கூட, ‘உள்ளேன் ஐயா’ சொல்லி, 100, 102, 104 என்று பல்ஸ் எகிறவைத்தன.

ஆனால், கோடை வரும்போதே, கோடை மழை என்றும் சொல்வார்கள் நினைவிருக்கிறதா? அப்படியொரு கோடை மழை, திருநெல்வேலி, கன்யாகுமரி, கோவைப் பகுதிகள் என பெய்து குளிர்வித்தன. சாலைகளும் குளிர்ந்தன. மக்களின் உடலும் மனசும் குளிர்ந்து போயிற்று.

போதாக்குறைக்கு, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் என்று மாறிமாறி பெய்தது மாரி. ‘அடடா...’ என்றும் ‘அடைமழைடா’ என்றும் மழை கண்டு ரசித்தார்கள்.

ஆனால், சென்னைக்காரர்களைப் பார்த்து, ‘என்னங்க... ஊர்ல மழை உண்டா?’ என்று யாராவது கேட்டால், வெயிலைவிட உஷ்ணமானார்கள். ஒருநாள்... ஒருபொழுது... ஒருநிமிடம் கூட சென்னையில் மழையில்லை.

‘சூரிய பகவான் இரக்கமே இல்லாம வந்து எரிக்கிறான். வருண பகவான் வரவே வராம, நம்மளை வயிறெரிய வைக்கிறான். என்ன கலிகாலமோ...’ என்று புலம்பாதவர்கள் குறைவுதான்.

‘காலைலயே சுள்ளுன்னு அடிக்குது வெயில். இந்த வெயில் கொடுமையவே தாங்கமுடியல. இதுல சிக்னல்ல நிக்கிறது அதைவிடக் கொடுமை. ஏதோ... வெயில்ல நிக்கறதுன்னு நேர்த்திக்கடன் செலுத்துற மாதிரி, சிக்னல்ல நிக்கிறதுதாங்க பெரிய ரோதனை’ என்று அலுத்துக் கொண்டார்கள் மக்கள்.

‘மழையா... சென்னைல மழையா. அதெல்லாம் இப்பப் பெய்யாது’ என்று குழந்தைகள், ரமணன் ரேஞ்சுக்கு வானிலை அறிக்கை வாசித்தார்கள். ’இப்ப ஸ்கூல் லீவு சமயம். இது மழைக்கும் தெரியும். அதனால மழைக்கும் லீவு. ஜூன்ல ஸ்கூல் திறக்கும். அப்ப வரும் பாருங்க மழை’ என்று கண் சிமிட்டி, உதடு சுழித்து, ‘வெவ்வவ்வ்வவே’ காட்டுகிறார்கள் பசங்க... மழை பழிப்புக்காட்டுவது போலவே!

’ஒரு அஞ்சு வருஷத்துக்கு நாய் படாதபாடு படுவீங்க. கடன் ஜாஸ்தியாகும். உடம்புத் தொந்தரவு இருக்கும். நிம்மதி இருக்காது. சொந்தக்காரங்க சண்டைக்கு வருவாங்க. காசுபணத்துக்கு அல்லாடுவீங்க.’ ‘அப்புறம்...’ ‘அப்புறம்... இதெல்லாம் உங்களுக்குப் பழகிரும்’... என்று புகழ்மிக்க ஜோக் இருக்கிறதே. அதுமாதிரி, வெயிலும் பழகித் தொலைந்துவிடும் போல என்று பொருமுகிறார்கள் விற்பனைப் பிரதிநிதிகள்.

கரும்புச்சாறு, லெமன் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், கற்றாழை ஜூஸ், கூழ், பானைத்தண்ணி, பிரிட்ஜ் தண்ணி, தர்பூசணி, வெள்ளரிக்காய் என சகலரோகநிவாரணிகளையும் கைக்கொண்டு, ஒருவழியாய் அக்கினி நட்சத்திரம் நேற்று 28ம் தேதியுடன் முடிந்ததும், அப்பாடா என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டார்கள். ஆனால் இன்று 29ம் தேதி காலையில் இருந்தே தன் ஆக்டோபஸ் கொள்ளிக்கரங்கள் கொண்டு, வெயில் இந்த சென்னை மாநகரத்தை மீண்டும் ஆரத்தழுவத் தொடங்கிவிட்டது.

‘’காலைல ஏழரைக்கெல்லாம் (ஏழரைதான்) மூஞ்சில அடிக்குது வெயில். சாப்பாடை ஹாட்பேக்ல தரத்தேவையில்ல. சாதாரண டப்பால கொண்டுவந்தாலே, அது மத்தியானம் வரைக்கும் சூடாத்தான் இருக்கும் போல. அப்படி அனல் பறக்குது’ என்கிறார்கள் சென்னை மக்கள்.

தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும் முறைவைத்துப் பெய்த மழை, சென்னையில் பெய்யவில்லை. அக்கினிநட்சத்திரம் முடிந்தும் கூட, வெயிலின் தாக்கம் குறையவில்லை.

‘மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை’ என்று அழகாய்ச் சொல்லுவார்கள். மழைக்குத்தானே அப்படி. வெயிலுக்குமா. வெயில் விட்டாலும் அனலும் சூடும் விடவில்லை என்று இனி புதிதாகச் சொல்லவேண்டும் போல!

பாகுபலி பார்ட் டூ வந்துச்சு. அதுமாதிரி அக்கினி நட்சத்திர வெயில் பார்ட் டூவெல்லாம் இருக்கா என்ன? இந்தக் கொளுத்து கொளுத்துதுங்களே... என்று முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டு, லெமன் ஜூஸ் ஆர்டர் சொல்லிவிட்டு, அப்பாவியாய்க் கேட்கிறார் சென்னைப் பையன்.

இதெல்லாம் ஒருரெண்டு நாளைக்குத்தான். அப்புறம் யாராவது புலம்பினா, ‘ஷாக்கைக் குறை, ஷாக்கைக் குறை’ன்னு சூரி ஸ்டைல்ல எல்லாரும் சொல்லிக்கிட்டுதான் இருப்போம்.

அண்ணே... இன்னொரு லெமன் ஜூஸ் போடுங்கண்ணே!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close