[X] Close

சுவையான சிறுதானிய வற்றல்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 15:23 pm
  • அ+ அ-

-தொகுப்பு:ப்ரதிமா

பாரம்பரிய உணவின் மகத்துவத்தைப் பலரும் புரிந்து கொண்டதன் விளைவாகச் சிறுதானியங்களை நோக்கி  நகரத்  தொடங்கியிருப்பது  வரவேற்கத்தக்கது. சிறுதானியங்களில் சோறு, பொங்கல், சிற்றுண்டி, நொறுவை போன்றவற்றைச் செய்யத் தொடங்கியிருப்பது நல்லதொரு மாற்றத்தின் அறிகுறி.

samayal.jpg

இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் சிறுதானியங்களில் வற்றலும் போடலாம் என்கிறார் சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ந.சுபமதி. “சிறுதானியங்களில் வற்றல் செய்தால் சுவை வித்தியாசமாக இருப்பதுடன் ஆரோக்கியத்துக்கு அடித்தளமாகவும் இருக்கும்” என்று சொல்லும்  சுபமதி, சிறுதானியங்களில் செய்யக்கூடிய வற்றல் வகைகள் சிலவற்றின் செய்முறையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

தினை ஜவ்வரிசி வற்றல்

என்னென்ன தேவை?

தினை மாவு – ஒரு கப்

ஜவ்வரிசி – ஒன்றரை கப்

பச்சை மிளகாய் – 4

எலுமிச்சை – 1

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் பெரிய பாத்திரத்தில் ஜவ்வரிசியைத் தண்ணீருடன் போட்டு வேகவையுங்கள். தினை மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஜவ்வரிசியில் ஊற்றுங்கள். பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொதிக்கும் கலவையில் சேருங்கள். கரண்டியில் அள்ளி ஊற்றும் பதம் வந்ததும் எலுமிச்சைச் சாற்றை மாவில் பிழிந்து இறக்கிவையுங்கள். பருத்தித் துணியில் இந்த மாவுக் கலவையைச் சிறு சிறு வட்டங்களாக ஊற்றிக் காயவிடுங்கள். மறுநாள் வற்றலை உரித்துத் திருப்பிப்போட்டுக் காயவிடுங்கள். நான்கு முதல் ஐந்து நாட்கள்வரை காயவைத்து எடுங்கள்.

saamai.jpg 

சாமை வற்றல்

என்னென்ன தேவை?

சாமை மாவு – 2 கப் 

ஜவ்வரிசி – அரை கப்

பச்சை மிளகாய் – 6

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை – 2

சீரகம் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசி மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் காலை அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை அது ஊறிய தண்ணீருடன் சேர்த்து வேகவையுங்கள். ஜவ்வரிசி நன்றாகக் கொதித்ததும் சாமை மாவைத் தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கொதிக்க வையுங்கள். இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து கூழ் பதத்துக்கு வரும்வரை நன்றாகக் கிளறுங்கள். பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொதிக்கும் மாவில் ஊற்றுங்கள். சீரகத்தையும் எலுமிச்சைச் சாற்றையும் சேருங்கள். கலவை நன்றாகக் கெட்டியானதும் இறக்கிவையுங்கள். முறுக்குக் குழலில் ரிப்பன் அச்சைப் போட்டு இந்த மாவை நிரப்பி, பருத்தித் துணியில் பிழிந்து காயவையுங்கள். இரண்டு, மூன்று நாட்களில் நன்றாகக் காயந்ததும் எடுத்துப் பொரிக்கலாம்.

kambu.jpg 

கம்பு தக்காளி வற்றல்

என்னென்ன தேவை?

கம்பு மாவு – 2 கப், ஜவ்வரிசி – ஒன்றரை கப், பச்சரிசி மாவு – கால் கப், தக்காளி – 4, மிளகாய் – 7, உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் காலையில் பெரிய பாத்திரத்தில் ஜவ்வரிசியைத் தண்ணீருடன் சேர்த்து வேகவையுங்கள். கம்பு மாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஜவ்வரிசியில் ஊற்றுங்கள். பச்சரிசி மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள். மிளகாய், உப்பு, தக்காளி மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து, கொதிக்கும் கலவையில் சேருங்கள். கரண்டியில் அள்ளி ஊற்றும் பதம் வந்ததும் மாவை இறக்கிவிடுங்கள். பருத்தித் துணியில் இந்த மாவைச் சிறு சிறு வட்டங்களாக ஊற்றி, நன்றாகக் காயவைத்து எடுங்கள்.

varagu.jpg 

வரகுக் கூழ் வற்றல்

என்னென்ன தேவை?

வரகரிசி மாவு – 2 கப், ஜவ்வரிசி – அரை கப், சீரகம் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 6, சின்ன வெங்காயம் – 100 கிராம், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் காலை ஜவ்வரிசியைக் கொதிக்கவையுங்கள். வரகரிசி மாவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் ஜவ்வரிசியில் ஊற்றிக் கிளறுங்கள். உப்பையும் மிளகாயையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கலவையில் ஊற்றுங்கள். கூழ் பதம் வந்ததும் சீரகத்தையும் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். சூடு குறைந்ததும் மாவைப் பருத்தித் துணியில் கிள்ளிவைத்துக் காயவிடுங்கள். சின்ன வெங்காயம் சேர்ப்பதால் ஆறு நாட்கள்வரை நன்றாகக் காயவிட்டு எடுங்கள்.

gudhirai.jpg 

குதிரைவாலி முறுக்கு வற்றல்

என்னென்ன தேவை?

குதிரைவாலி அரிசி மாவு – 2 கப்

ஜவ்வரிசி – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 8 (காரம் வேண்டாம் என்றால் இரண்டைக் குறைத்துக்கொள்ளலாம்)

எலுமிச்சை – 2

எப்படிச் செய்வது?

ஜவ்வரிசியை முதல்நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் அடி கனமான பெரிய பாத்திரத்தில் ஜவ்வரிசியைத் தண்ணீருடன் கொட்டிக் கொதிக்கவிடுங்கள். குதிரைவாலி அரிசி மாவைச் சிறிது தண்ணீரில் கரைத்துக் கொதிக்கும் கலவையில் ஊற்றிக் கட்டியில்லாமல் கிளறுங்கள். உப்பையும் பச்சை மிளகாயையும் விழுதாக அரைத்துச் சேர்த்துக் கிளறுங்கள். கெட்டியானதும் இறக்கிவைத்து எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்துவிட்டுக் கிளறுங்கள். மாவு ஓரளவு சூடு குறைந்ததும் முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து, வெயிலில் காயவைத்து எடுங்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close