[X] Close

இந்தியாவை அறிவோம்: உத்தராகண்ட்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:56 am
  • அ+ அ-

-தம்பி

மாநில வரலாறு

உத்தராகண்டிலுள்ள பாறை ஓவியங்கள், குகைகள் போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இங்கே மனிதர்கள் வாழ்ந்துவந்தது தெரியவருகிறது. பௌரவர்கள், நந்தர்கள், மௌரியர்கள், குஷானர்கள், குப்தர்களில் ஆரம்பித்து பன்வார்கள் வரையிலும் பல அரசர்களும் பேரரசுகளும் ஆட்சிசெய்திருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் ஆளுகையின் கீழ் வருவதற்கு முன் மேற்கில் கர்வால் பேரரசாகவும், கிழக்கில் குமாயுன் பேரரசாகவும் இருந்த இந்தப் பகுதி சுதந்திரத்துக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் சேர்க்கப்பட்டது. எனினும், உத்தராகண்ட் கிராந்தி தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தங்களுக்கென்று தனி கலாச்சாரம், புவியியல் அமைப்பு போன்றவை இருப்பதால் தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியும் கிளர்ச்சிகள் செய்தும் வந்தனர். 2000-ல் உத்தராஞ்சல் என்ற பெயரில் நாட்டின் 27-வது மாநிலமாக அப்போது மத்தியில் ஆண்டுகொண்டிருந்த பாஜக தலைமையினாலான அரசால் அறிவிக்கப்பட்டது. உத்தராஞ்சல் என்ற பெயரைப் பலரும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் 2006-ல் காங்கிரஸ் அரசால் உத்தராகண்ட் என்ற பெயர் வைக்கப்பட்டது.

புவியியல் அமைப்பு

உத்தராகண்ட், நாட்டின் 19-வது பெரிய மாநிலம். பரப்பளவு 53,483 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி உத்தராகண்டின் மக்கள்தொகை 1.01 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 189. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555).

சமூகங்கள்

இந்துக்கள் 82.97%, முஸ்லிம்கள் 13.95%, சீக்கியர்கள் 2.34%, கிறிஸ்தவர்கள் 0.37%. உட்பிரிவுகளில் பட்டியலின சமூகத்தினரின் எண்ணிக்கை 18.76%, பிராமணர்கள் 20%, தாக்கூர்கள் 35%, இதர பிற்பட்ட வகுப்பினர் 5%-க்கும் குறைவு. தாரு, ஜவுன்சரி, புக்சா, போடியா, ராஜி உள்ளிட்ட பழங்குடியினரின் எண்ணிக்கை 2.89%. நாட்டிலேயே பிராமணர்களின் சதவீதம் இந்த மாநிலத்தில்தான் அதிகம்.

ஆறுகள்

இந்தியாவின் மிக முக்கியமான, மிகவும் பிரபலமான இரண்டு ஆறுகளான கங்கையும் யமுனையும் உத்தராகண்டில் உள்ள இமயமலைப் பரப்பின் பனியாறுகளிலிருந்து உருவாகின்றன. கங்கை உற்பத்தியாகும் இடத்துக்கு கங்கோத்ரி என்றும், யமுனை உற்பத்தியாகும் இடத்துக்கு யமுனோத்ரி என்றும் பெயர். அலக்நந்தா, பாகீரதி, பிலாங்கனா, தௌலி கங்கா, கௌரி கங்கா, கோசி, மந்தாகினி, நந்தாகினி உள்ளிட்ட ஏராளமான நதிகள் உத்தராகண்டின் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து வளம் பரப்புகின்றன.

காடுகள்

உத்தராகண்டின் மொத்தப் பரப்பளவில் காடுகள் 65%. இதில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயங்களின் எண்ணிக்கை 7. தேசியப் பூங்காக்களின் எண்ணிக்கை 6. இமாலய நீல ஆடு, பனிச் சிறுத்தை, சிறுத்தை, புலி உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்கள் உத்தராகண்டின் காடுகளில் காணப்படுகின்றன.

நீராதாரம்

கங்கை, யமுனை உள்ளிட்ட ஜீவநதிகள் பாயும் மாநிலம் என்பதால் இம்மாநிலத்தின் கணிசமான பகுதிகள் நீர்வளம் மிக்கவை. கிட்டத்தட்ட 15 அணைகள் இங்கு கட்டப்பட்டிருக்கின்றன.

utta.JPG 

கனிம வளம்

உத்தராகண்ட் மலைப்பாங்கான மாநிலம் என்பதால் பல்வேறு கனிமங்கள் இங்கு கிடைக்கின்றன. பேரைட், ஜிப்ஸம், சுண்ணாம்புக் கல், பாஸ்போரைட், சிலிக்கா மணல், சோப்புக்கல், தங்கம், கிராஃபைட், மேக்னஸைட் உள்ளிட்ட தனிமங்கள் இங்கு கிடைக்கின்றன.

பொருளாதாரம்

உத்தர பிரதேசத்துடன் ஒப்பிடும்போது ஓரளவு வளர்ச்சியடைந்துவரும் மாநிலமாகவே உத்தராகண்ட் உள்ளது. இம்மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 2005-12 ஆண்டுகளில் 13.7%-ஆக வளர்ச்சி பெற்றது. 2013-ம் ஆண்டின் கணக்குப்படி தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.1,03,000 (தேசிய சராசரி ரூ.74,920-ஐ விட இது அதிகம்). விவசாயம்தான் இங்கே பிரதானமான தொழில் துறை. பாசுமதி அரிசி, கோதுமை, சோயாபீன்ஸ், கடலை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவைதான் இங்கே பிரதானமான பயிர்கள். ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய், லிச்சீ, பிளம் போன்ற பழ மரங்களும் செடி வகைகளும் பரவலாக வளர்க்கப்படுகின்றன. 2010-ல் கோதுமை உற்பத்தி 8.31 லட்சம் டன்கள், அரிசி உற்பத்தி 6.10 லட்சம் டன்கள். உத்தராகண்டில் 86% மலைப்பகுதிகள் என்பதால் மலைகளில் விளைச்சல் குறைவாகவும் சமவெளிகளில் அதிகமாகவும் இருக்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக, சேவைத் துறையும் சுற்றுலாத் துறையும் உத்தராகண்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமான பங்களிக்கின்றன.

அரசியல் சூழல்

2000-ல் உத்தர பிரதேசத்திலிருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்ட பிறகு 2002-ல் முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. அதில் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தது. 2007-ல் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 2012-ல் காங்கிரஸும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 2017-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை மூன்று தேர்தல்களை இதுவரை சந்தித்திருக்கிறது. 2004-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 5 தொகுதிகளில் பாஜக 3 இடங்களிலும் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் தலா ஒரு இடத்திலும் வென்றன. 2009, 2014 தேர்தல்களில் முறையே காங்கிரஸ், பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றன.

முக்கியப் பிரச்சினைகள்

உத்தராகண்ட் மலைப்பாங்கான மாநிலம் என்பதால் ஏராளமான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துவருகிறது. நிலச்சரிவு, மேகவெடிப்பு, பெருமழை வெள்ளம் போன்றவை நிகழும்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த நிகழ்வுகளை எதிர்கொள்ளவோ பேரிடர் நிகழ்ந்த பின் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவோ முறையான திட்டமிடலும் அரசு இயந்திரத்தின் முனைப்பும் இல்லை. சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக கங்கை உள்ளிட்ட ஆறுகள் கடும் மாசுபாடு அடைந்துள்ளன. இங்கே சாலைக் கட்டமைப்புகள் மிக மோசம். கணிசமான இடங்களில் கிராமங்கள் முறையான சாலைகளால் இணைக்கப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close