[X] Close

பாஜகவுடன் ரகசிய உறவு: மார்க்ஸிஸ்ட்டுகளின் வங்கத்து வியூகம்


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:54 am
  • அ+ அ-

எஸ்.ராஜகோபாலன்

காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணி கொள்ளலாமா, கூடாதா என்று தேசிய அளவில் மாதக்கணக்கில் விவாதித்தது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால், திரைமறைவு உறவுக்கு எந்த விவாதமும் தேவையில்லை என்ற முடிவின்படி வங்கத்தின் சில தொகுதிகளில் பாஜகவுக்கு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் மார்க்ஸிஸ்ட் கட்சிக்காரர்கள்.

வங்கத்தைப் பொருத்த அளவில், ‘உங்களுடைய முதல் எதிரி யார்?’ என்று ஒரு மார்க்ஸிஸ்ட் கட்சி தொண்டரிடம் கேட்டால், மோடியைக் காட்டிலும் முதல்வர் மம்தாவையே சொல்வார். மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட்டுகளிடமிருந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது முதலாக மார்க்ஸிஸ்ட் கட்சியையே காலியாக்கும் வேலையில் இறங்கிவிட்டார் மம்தா. மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு ஏற ஏற எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வேலையையும் அதிகரித்தார். மம்தாவை எதிர்கொள்ள என்ன வழிமுறையைக் கையாண்டும் மார்க்ஸிஸ்ட்டுகளால் மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை; இடையில் ஒரு தேர்தலில் காங்கிரஸுடன்கூடத் திரைமறைவுக் கூட்டணியில் இறங்கிப்பார்த்தார்கள்; தோல்வியிலேயே முடிந்தது.   

தமிழ்நாட்டைப் போலவே வங்கத்திலும் அதிகம் செல்வாக்கு இல்லாத கட்சியாக இருந்துவந்த பாஜக, மோடியின் ஆட்சியில் தன்னை வலுவாக வளர்த்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலிலும் வங்கத்தில் மம்தாவின் கொடியே பறக்கும் என்று எல்லோரும் கணித்தாலும், இரண்டாவது பெரிய கட்சி என்ற இடம் நோக்கி பாஜக நகர்ந்துவிடும் என்பதை அங்குள்ள மார்க்ஸிஸ்ட்டுகள், காங்கிரஸாரே சொல்கிறார்கள். இத்தகைய சூழலில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களில் எல்லாம் மார்க்ஸிஸ்ட் உள்ளூர் தலைவர்களும் தொண்டர்களும் பாஜகவுக்கு உதவும் வேலையில் இறங்கியிருக்கின்றனர். மம்தாவை வீழ்த்த இந்த வியூகம் உதவும் என்று எண்ணி இறங்கியிருக்கும் மார்க்ஸிஸ்ட்டுகளின் உதவியையே துருப்புச்சீட்டாக அவர்களைத் தங்கள் கட்சி நோக்கி இழுக்கும் வேலையில் பாஜகவும் இறங்கியிருக்கிறது.

திரிணமுல் காங்கிரஸார் உள்ளூரில் இதைக் கடுமையாகச் சாடிவருகின்றனர். மார்க்ஸிஸ்ட் முன்னணித் தலைவர்களும் கீழேயுள்ள இந்தப் போக்கை ஆதரிக்கவில்லை. ஆனால், ‘ஒரு எதிரிக்கு பயந்து இன்னொரு எதிரிக்குக் கதவு திறந்துவிடாதீர்கள்’ என்று அவர்களது எச்சரிக்கை சமிக்ஞையைக் கண்டுகொள்ளாமல் கீழே மம்தாவைக் குறிவைத்து பாஜகவுக்காக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மார்க்ஸிஸ்ட்டுகள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close