[X] Close

பாஜக குரல் ஒலிக்கும் பிஹார்!


  • kamadenu
  • Posted: 16 May, 2019 08:42 am
  • அ+ அ-

து.யுவராஜா

எல்லோர் கவனத்தையும் உத்தர பிரதேசம் ஆக்கிரமித்துவிட்டிருப்பதாலேயே இத்தேர்தலில் பிஹார் சம்பந்தமான பேச்சுகள் மட்டுப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தி பேசும் பத்து மாநிலங்களில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்த பெரிய மாநிலமான பிஹார் எப்போதுமான தேர்தல் பரபரப்புக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இம்முறையும் தகிக்கிறது. இரண்டு பெரும் கூட்டணிகள் எதிரெதிரே நிற்கின்றன. சூழல் எப்படி இருக்கிறது?

பாஜக டெல்லியைத் தக்கவைக்க வேண்டும் என்றாலும் சரி, பாஜகவை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டும் என்றாலும் சரி; பிஹார் முக்கியமான மாநிலம். ஏனென்றால், 2014 தேர்தலில் பாதிக்கும் மேற்பட்டு ஒரு மாநிலத்தில் தொகுதிகளைக் கைப்பற்றிய இடங்களில் பிஹாரும் ஒன்று; மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 22 தொகுதிகளை அது வென்றது. பிஹாரை வெல்வதின் சூட்சமம் எப்படிப்பட்ட கூட்டணியை அமைக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. கட்சிகள் ஏராளம் என்றாலும், மூன்று கட்சிகள்தான் இங்கே முக்கியமான சக்திகள். ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி.

ஓட்டுக்கணக்குகள்

2005 வரை பிஹாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் முதல் இடத்தில் இருந்த கட்சி. 28% ஓட்டுகள் அப்போது அதன் வசம் இருந்தன. 2005-ல் ஆட்சியை இழந்த பின் படிப்படியாக சரிந்த அதன் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 20.14% ஆனது; காங்கிரஸுடனான கூட்டணியையும் சேர்த்துதான் இந்தக் கணக்கு. 2015 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 18.4% ஓட்டுகள் கிடைத்தன. ஆக, வாக்குகள் அடிப்படையில் இன்றைக்கு அது இரண்டாவது இடத்தில் இருக்கும் கட்சி.

2005 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 20.47% வாக்குகளைப் பெற்றிருந்தது நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம். 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்ற அது, 15.8% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. 2015 சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து மகா கூட்டணியில் போட்டியிட்டபோது 16.8% வாக்குகளைப் பெற்றது. ஆக, வாக்குகள் அடிப்படையில் இன்றைக்கு அது மூன்றாவது இடத்தில் இருக்கும் கட்சி.

2005-ல் வெறும் 15.65% வாக்குவீதத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்தது பாஜக.

2010-ல் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்ததில் 16.46% வாக்குவீதத்துக்கு முன்னேறியது. 2014 மக்களவைத் தேர்தலில் தனித்து நின்றாலும், மோடி அலையில் 29.9% வாக்குவீதம் பெற்று முதலாம் இடத்தை அடைந்தது. 2015 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் 24.4% வாக்குவீதத்துடன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே செய்தது. ஆக, இன்றைக்கு மாநிலத்தின் பெரிய கட்சி அதுவே.

இந்த முறை நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ள 2014 தேர்தலில் அது வென்ற எண்ணிக்கையையும்கூடக் குறைத்துக்கொண்டு 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. ஏனைய இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறது.

2015 சட்டமன்றத் தேர்தல் சூழலோடு ஒப்பிட்டால், இது நேரெதிரான காட்சி. உண்மையிலேயே பாஜக இடம்பெற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் பிஹாரில் பலமிக்க மகா கூட்டணி. ஏனென்றால், பாஜகவின் 24% வாக்கு வங்கியுடன் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கொண்டிருக்கும் 5% வாக்கு வங்கியையும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் கொண்டிருக்கும் 16% வாக்கு வங்கியையும் சேர்த்தால் கிடைக்கும் 45% என்பது மிகவும் பெரிய வாக்குவீதம். மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பாஜகவைப் புறந்தள்ளிவிட்டு மேலே ஏறி வர முற்படுவதுபோல காங்கிரஸ் இங்கே மேலேறிவருவது அத்தனை எளிதல்ல. குறிப்பாக, சாதிவாரியான ஓட்டுக்கணக்குகள் பாஜக கூட்டணிக்கே சாதகமாக இருக்கின்றன.

பிரச்சார பலம்

பிஹாரைப் பொருத்த அளவில் பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார். 12 பொதுக்கூட்டங்கள் அவர் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கின்றன. முதல்வர் நிதிஷ்குமார் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பேசுகிறார்; 250 கூட்டங்கள் வரை அவர் திட்டமிட்டிருக்கிறார். இது தவிர, அமித் ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் பிரச்சாரம் வேறு தனித்துப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. எதிர்த் தரப்பில் இப்படி பிரச்சாரம் மேற்கொள்ள பெரிய தலைவர்கள் இல்லை. பிஹாரின் மாபெரும் பிரச்சாரகரான லாலு சிறையில் முடங்கிவிட்ட நிலையில், அவருடைய மகன் தேஜஸ்வியே ராஷ்டிரிய ஜனதா தளத்தின் எல்லாச் சுமைகளையும் சுமக்கிறார். காங்கிரஸுக்கு வெறும் 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் ராகுலும் இங்கே அதிக கவனம் செலுத்தவில்லை.

இது நீங்கலாக சில திட்டங்களும் பாஜக கூட்டணிக்கு உதவும் என்று நம்புகிறார்கள். “பிஹாரில் விவசாயிகளுக்கு டீசலுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. வறட்சி நிலவும் பகுதியில் சிறு விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை அவர்களின் வங்கிக் கணக்கில் போட்டிருக்கிறோம். பிரதமரின் கிஸான் திட்டத்தால் 15 லட்சம் விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள். இது நீங்கலாக இரண்டு விஷயங்கள் எங்களுக்கு மேலும் சாதகம் என்று கருதுகிறோம். முதலாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான 10% இடஒதுக்கீடு; இரண்டாவது, பாலகோட் வான்வழித் தாக்குதல்” என்கிறார் பிஹார் பாஜகவின் முகமும் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி.

நிதிஷ் அரசு கொண்டுவந்த மதுவிலக்குத் திட்டத்துக்கு கிராமத்துப் பெண்களிடையே ஓரளவு செல்வாக்கு நிலவுகிறது. மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்துவதென்பது நிதிஷ் அரசுக்குப் பெரும் பிரச்சினையாகத்தான் இருந்துவருகிறது என்றாலும், மது அருந்தாததால் சேமிக்கும் பணத்தைக் கொண்டு நல்ல விஷயங்களுக்கு அவர்களால் செலவிட முடிவதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நல்லுறவு நிலவுவதாகவும் பல குடும்பங்களில் சொல்கிறார்கள்.

ஒட்டாத கூட்டணி

ராஷ்டிரிய ஜனதா தளம் அமைத்திருக்கும் கூட்டணியும் சளைத்தது இல்லை என்றாலும், அந்தக் கூட்டணியில் ஒருங்கமைவு அமையவில்லை என்பது பலவீனமாகத் தெரிகிறது. ஏனென்றால், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் நீங்கலாக இக்கூட்டணியில் பல கட்சிகள் கடைசி நேரத்தில் இணைக்கப்பட்டவை. கீழ் மட்டத்தில் அரசியல்ரீதியான கருத்தொற்றுமை வெளிப்படவில்லை; மேலும், இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் ராஷ்டிரிய ஜனதா தளம் கொண்டுவராததும் இங்கே ஒரு பலவீனமாக வெளிப்படுகிறது.

இதற்கு மாறாக பாஜக கூட்டணி நாட்டின் வேறு எந்தப் பகுதியைக் காட்டிலும் பலமானதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கிறது. மோடியைப் போலவே, நிதிஷ்குமாரும் தனக்கென்று ஒரு பிம்பத்தையும் செல்வாக்கையும் கொண்டிருக்கிறார். பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் 2004 தொடங்கி 2013 வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கூட்டணியில் இருந்தவர்கள் என்பதால், இடையில் ஏற்பட்ட பிரிவுக்குப் பிந்தைய இணைவு மீண்டும் அதே இணக்கச் சூழலைக் கொண்டுவந்திருக்கிறது. “பிஹாரில் ஜெயிக்காவிட்டால் வேறு எங்குமே ஜெயிக்க முடியாது” என்கிற அளவுக்குத் தெம்பாகப் பேசுகிறார்கள் பாஜகவினர். மே 23 விடை கிடைத்துவிடும்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close