[X] Close

சந்தைக்குப் போலாம்... வாரீகளா? பிரமிக்க வைக்கும் பல்லாவரம் சந்தை!


pallavaram-sandhai

  • வி.ராம்ஜி
  • Posted: 28 May, 2018 14:28 pm
  • அ+ அ-

பாரீஸ்கார்னரில் சில பொருட்கள் கிடைக்கும். மூர்மார்க்கெட் தவிர, வேறு எங்கும் சில பொருட்கள் கிடைக்காது. பூக்கடை ஏரியாவில் பூக்களை குறைவான காசுக்கு அள்ளி வரலாம். ரிச்சி தெருப் பக்கம் போனால் என்னென்ன கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லீஸ் ரோட்டுக்குள் நுழைந்தாலே, சல்லிசு ரேட்டில் எதையெல்லாம் பர்ச்சேஸ் பண்ணலாம் என்று பட்டியலே போடலாம். ரங்கநாதன் தெருவும் புதுப்பேட்டை ஏரியாவும் நமக்குத் தெரியாதா என்ன? கோயம்பேடு பற்றி சொல்லவும் வேண்டுமா?

ஆனால் என்ன... இந்த ஏரியாக்களிலெல்லாம் என்னென்ன கிடைக்குமோ, அவை அத்தனையும் ஒரே இடத்தில், மிகக் குறைந்த விலையில், மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கிற இடம் எது தெரியுமா? பல்லாவரம்.

வாரத்தின் ஒரு நாள்... ஒரேயொருநாள்... வெள்ளிக்கிழமையன்று பல்லாவரம் ஏரியாவே தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான்! அன்றைக்குத்தான் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷனையொட்டி, பஸ் ஸ்டாண்டையொட்டி, திரிசூலம் தாண்டி உள்ள ரயில்வே கேட்டிலிருந்தே தொடங்குகிறது சந்தை ஏரியா.

முதல் நாள் மாலை வரை, சந்தையாகும் அந்தப் பகுதியில், ஒரு ஈகாக்கா கூட இருக்காது. திரிசூலத்தில் இருந்து பல்லாவரம் வரும் பாதை திடீரென டிராபிக்கில் மிதந்தால், இந்தப் பகுதிதான் ஆபத்பாந்தன். அப்படியான பகுதி, முதல்நாள் இரவில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து இறங்கும் வியாபாரிகளால் லேசான பரபரப்புக்கு உள்ளாகும். விடிந்ததும் கேட்கிற சந்தைக் கடை சத்தம், அடங்கி அமைதியாவதற்கு இரவு 11க்கு மேலாகிவிடும்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன ஏரியாக்களில் என்னென்ன கிடைக்குமோ, அவை அத்தனையும் இங்கே அத்துபடி. சொல்லப் போனால், குறைந்த விலையில் கிடைக்கும் என்பதுதான் இந்த சந்தை நிலவர சாதனை.

கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நீண்டிருக்கிறது சந்தை. இரண்டு இரண்டாக நான்கு வரிசைகள் கொண்ட கடைகள். கைப்பிடித்து அழைத்து வந்தால், குழந்தைகள் பர்கர், பீட்ஸாவில் இருந்து விடுதலையாகி, காய்கறிகள் மீது லவ்வாகிவிடுவார்கள். அப்படியொரு பச்சைப் பசேல். அப்படியொரு விலை கம்மி.

‘’இங்கே, முக்கால்வாசி கடைக்காரங்களோட சொந்த தோட்டத்துல விளைஞ்ச காய்கறிங்கதான் எல்லாமே. கத்தரி, உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வெங்காயம், சாம்பார் வெங்காயம், முருங்கைக்காய் என எல்லாமே தோட்டம் தோப்புல விளைஞ்சதுங்க’’ என்கிறார்கள் கடைக்கார அக்காக்களும் அண்ணன்களும்! 

 நிறம் மாறாமல், கையைச் சுடாமல், அழகு மிளிரக் காட்சி தருகின்ற காய்கறிகள். பல்லாவரம் சந்தைக்கு, கிழக்கு தாம்பரத்தில் இருந்தும் நங்கநல்லூரில் இருந்தும் கீழ்கட்டளை, மடிப்பாக்கத்திலிருந்தும் என நிறைய ஏரியாக்களில் இருந்தும் வருகிறார்கள்.

’’முன்னாடி, பல்லாவரம் ரோட்டுக்கு அந்தாண்ட, கண்டோன்மெண்ட் ஆஸ்பத்திரியாண்டதான் சந்தை இருந்துச்சு. இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்தே இருந்துச்சுன்னு சொல்லுவாங்க. அப்போலாம் மாட்டுச் சந்தைதான் பிரதானமாம். இப்ப, பட்டணத்துல, மெட்ராஸ்ல மாட்டை வளர்க்கிறவங்க நல்லாவே குறைச்சிட்டாங்களே. பாக்கெட் பால் வந்ததுல, மாட்டு வியாபாரம் படுத்துருச்சு. அதனாலயோ என்னவோ... ரோட்டுக்கு இந்தப் பக்கம், ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி, சந்தை வைக்க இடம் கொடுத்தாங்க. இதுவும் கண்டோன்மெண்ட்டோடதான். ஆனா காண்ட்ராக்ட் மாதிரி வுடுறாங்கோ’ என்கிறார்கள் மெகா மனம் படைத்த சிறு வியாபாரிகள்.

தோட்டம் வைக்கத் தேவையான பூச்செடிகள், செடிகள் வைக்கத் தொட்டிகள், செடிகளை வளர்க்கத் தேவையான உர மருந்துகள், தண்ணீர் விடுவதற்கு பயன்படுத்தும் பூவாளிகள் என ஒருபக்கம் ஏரியாவையே குளுகுளுப்பாக்கிறது. பார்த்தாலே, செடி வளர்க்கும் ஆசையும் வளரத் தொடங்கிவிடும்.

ரிமோட், பழைய, புதிய செல்போன்கள், பேட்டரிகள், பேட்டரி சார்ஜர்கள், டார்ச்லைட்டுகள், மின்விசிறிகள், கார், டூவீலர் வீல்கள், லைட்டுகள் என எலெக்ட்ரானிக் பொருட்கள், வரிசைக்கட்டி கடைகளாக இருக்கின்றன.

செக்கில் ஆட்டப்பட்ட உடலைக் கெடுக்காத எண்ணெய்க் கடைப் பக்கம் கூட்டம் அலைமோதுகிறது. அந்த எண்ணெய் வாசமே, இல்லாத பதார்த்தங்களை உள்ளுக்குள் வழுக்கி எடுத்துக் கொண்டு, வயிற்றுக்குள் சேர்க்கின்றன.

செயற்கைக் குருவி, குயில்களின் சத்தங்கள்தான் நம் சந்ததிக்குப் பரிச்சயம். ஆனால், குருவிகள், கிளிகள், குயில்கள், கோழிகள், சேவல்கள், ஆடுகள், முயல் குட்டிகள், வாத்துகள் என அதன் சத்தங்களும் வண்ணங்களும் வேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கிற நகர வாசிகளின் நரக வாழ்க்கைக்கு, சந்தோஷமும் நிம்மதியும் தரும் ஒத்தடங்களாகவே பார்த்துப் பார்த்து வியக்கிறாகள் மக்கள். ஆசை ஆசையாய் வாங்குகிறார்கள்.

சும்மா நம்ம தெரு முனை அளவுக்குத் தான் சந்தை என்று நினைத்துவிடாதீர்கள். திரிசூலம் அருகில் உள்ள கேட்டில் இருந்து தொடங்கி பல்லாவரம் ஸ்டேஷன் வரைக்கும் என ஒரு ரயில் அளவுக்கு நீ...ண்டிருக்கிறது சந்தை. வெறுமனே கட்டைப்பையுடன் போகும்போது, ஜாலியாக, வேடிக்கை பார்த்துக் கொண்டே போவீர்கள். அப்புறம் ஒவ்வொன்றாக வாங்கி, கட்டைப்பை, கனமான பை என்றாகிவிட, ஒவ்வொருவரும் கணவருக்கு, மனைவிக்கு, நண்பருக்கு என்று போன் போட்டு, கூப்பிடுகிறார்கள். ‘தூக்கமுடியலப்பா... இங்கே நிக்கிறேன். வண்டி எடுத்துட்டு வந்துரு’ என்று அவசரப்படுத்துகிறார்கள்.

விதம்விதமான புதுசாப் பூத்திருக்கிற கலர் கலர் செருப்புகளின் லேட்டஸ்ட் டிசைன்கள், சந்தைக்கு வராமல் எப்படி? விதவித செருப்புகள், ரகரக ஷூக்கள் என கண்ணையும் காலையும் கவருகின்றன.  

இன்னொரு பக்கத்தில், வாய்வுப் பிரச்சினையா, மலச்சிக்கலா என்று மருந்துக்கடைகள், மைக் வைத்து அழைக்கிறது. எல்லாப் பழங்களும் நம் ஏரியாவில் வாங்குகிற விலையை விட, பத்து இருபது ரூபாய் குறைவாகவே விற்கப்படுகிறது.

கலர்கலரான பிளாஸ்டிக் பொருட்கள், விதம்விதமான அப்பளம், வடாம் வகைகள், கொல்லிமலை சர்க்கரை வள்ளிக்கிழங்குகள், அம்மாக்களின் அத்தைகளின் கைவண்ணத்தையும் சமையற்கட்டையும் நினைவுபடுத்தும் அந்தக்கால அரிவாள்மனைகள், இலுப்பைச் சட்டிகள், சைஸ் வாரியாக தோசைக்கற்கள் என ஆள் அம்பு சேனையுடன் அதாவது குடும்ப சகிதமாக வந்தால், குடும்பத்துக்குத் தேவையான அனைத்தையும் ஆளுக்கொரு பையாக நிரப்பி, வாங்கிச் செல்லலாம்.

புரோட்டீன் சத்துகள் தரும் பயறு வகைகள், பருப்பு வகையறாக்கள், அ...ந்தப்பக்கம் போனால் மணக்க மணக்க கருவாடு ஐட்டங்கள், விலை குறைவான சேலைகள், நைட்டிகள், டிஷர்ட்டுகள், ஆடைகள் என என்ன வாங்கலாம்... எல்லாமே வாங்கலாம் ரகம்தான்!

சந்தையைச் சுற்ற நிச்சயம் வேண்டும் தெம்பு. ஆகவே ஆங்காங்கே, டீ விற்பனையும் சம்சா விற்பனையும் சுடச்சுட நடந்துகொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் கிர்ணிப்பழ ஜூஸ், குளுகுளுக்க வைக்கிறது. சீம்பால் கூட விற்கிறார்கள். வண்டிக்குப் பின்னே  தேன் கட்டிக் கொண்டு  ஊரைச் சுற்றிச் சுற்றி வந்து விற்பார்களே... அவர்கள் சந்தையே கதியென்று வண்டியைப் போட்டுவிட்டு நிற்க, தேன் வாங்குவதற்கு மொய்த்தெடுக்கிறது கூட்டம்.

பழங்காலக் காசுகள், பழங்கால விஷயங்கள் சேகரிப்பவரா நீங்கள். எந்தக் காசு வேண்டும்? செப்புக்காசுகள், ஐந்து பைசா, ரெண்டு பைசா, ஒரு ரூபாய் என என்னென்னவெல்லாமோ பழைமை பறைசாற்றும் கடையும் இங்கே பஞ்சமின்றி இருக்கிறது. காடை முட்டைகள் விற்பனைக்கடை, பழுப்புநிற முட்டையுடனும் பளீர் நிற பேனர்களுடனும் நம்மை வரவேற்கிறது.

தனியா விஷயங்கள், மசாலாப் பொருட்கள், துடைப்பம், மிதியடி சமாச்சாரங்கள், புதிய பொருட்கள், செகண்ட் ஹேண்ட் பொருட்கள், செண்ட், பாடி ஸ்ப்ரேக்கள் என உலக பொருட்கள் அனைத்தும் கிடப்பதால், பல்லாவரம் சந்தையை உலக சந்தை அளவுக்குப் பெருமிதத்துடன் மெச்சிக் கொண்டாடுகிறார்கள், நடுத்தர மக்கள்.

நடுவே பொழுதுபோகவேண்டுமென்றால், பச்சை குத்திக் கொள்ளக் கூட கடை இருக்கிறது. மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில், கார்டு தேய்த்து கார்டு தேய்த்து கட்டெறும்பாகிப் போன இந்த நவீன உலகில், பல்லாவரம் சந்தையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிற பொருட்கள், வெளியே ஆயிரத்து முந்நூறு வரை ஆகும் என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதியுடன் சொல்கிறார்கள், சந்தையின் வாடிக்கையாளர்கள்.

அங்கே ஒரு செக்யூரிட்டி அண்ணனிடம் சொன்னோம்... காலைல 10 மணிலேருந்து பன்னெண்டு வரைக்கும் செமயா இருக்கும் கூட்டம். அப்புறம் ;லேசா குறையும். மூணு, மூணே கால், நாலுன்னு ஒரு கூட்டம் வரும். அப்புறம் அஞ்சு, அஞ்சரை, ஆறுன்னு கூட்டம் குவிஞ்சமேனிக்கு இருக்கும். அந்த அளவுக்கு கூட்டம் பத்து பதினொன்னரை வரைக்கும் இருக்கும்’’ என்று சொல்லும் செக்யூரிட்டி, வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

‘’வாராவாரம் மூணுலேருந்து அஞ்சு லட்சம் மக்கள் வந்து புழங்குற இடம் பல்லாவரம் சந்தை. ஆனா என்ன... ஒரு கக்கூஸ் வசதி கூட கிடையாது. ஆயிரக்கணக்கான வியாபாரிகள்கிட்ட, கடைக்கு இவ்ளோனு சீட்டுக்காசு வாங்குறாங்க. அவங்களுக்கும் எந்த வசதிகளும் கிடையாது. ஒரு மேற்கூரை போட்டு, கழிப்பறை வசதியும் குடிநீர் வசதியும் செஞ்சு தரலாம். பாவம் வியாபாரிகளும் மக்களும்’’’ என்று புலம்புகிறார்.

‘டூவீலரை நிப்பாட்டு, நிப்பாட்டாம ஓட்டிக்கிட்டே போ. ஆனா வண்டிக்கு டோக்கன் வாங்கிக்கோ’னு பத்துரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் என்ன... பாதுக்காப்புக்கு உத்தரவாதமில்லை. எப்படியும் வாராவாரம் வெள்ளிக்கிழமையன்று, இங்கே ஆறேழு வண்டிகள் களவாகிவிடுகின்றன என பயத்துடன் சொல்கிறார்கள்.

நாங்கள் போயிருந்த போது, யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ‘இன்னும் இருட்டவே ஆரம்பிக்கல. அதுக்குள்ளே மூணு வண்டி கோவிந்தாவாயிருச்சுய்யா!’

நிர்வாகமும் காவல்துறையும் கொஞ்சம் கையையும் மனதையும் கோர்த்து சில உதவிகள் செய்தால், பல்லாவரம் சந்தையில் சாமான்களை வாங்க, பரங்கிமலையில் இருந்தென்ன... பம்பாயில் இருந்து கூட வந்து, வாங்கிச் செல்வார்கள்.

அப்புறம் என்ன... ஒரு எட்டு பல்லாவரம் சந்தைக்குப் புறப்படவேண்டியதுதானே!

 

 


Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close