[X] Close

நாடக உலா


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:33 am
  • அ+ அ-

-வீயெஸ்வி

குறிஞ்சி

இது ஒரு பீரியட் டிராமா. ஜெ.ரகுநாதன் எழுதி, ஆர்.கிரிதரன் இயக்கியது.

மிகப்பெரிய கப்பல் ஒன்றின் முக்கால்வாசி பாகத்தை மேடை யில் கொண்டுவந்து நிறுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார் கலை இயக்குநர் மோகன்பாபு. குறிஞ்சி என்ற கப்பலின் மேல்தளத்தில் சீருடையில் நேவி அதிகாரிகள் மூவர் நின்று வசனமெல்லாம் பேசுகிறார்கள். நடக்கும் கதைக்கு அந்தக் கப்பல்தான் சாட்சியாக நிற்கிறது.

அறிஞர் அண்ணா இறந்த வருடத்தில் கதை ஆரம்பமா கிறது. இறுதி ஊர்வலம், அடுத்த முதலமைச்சர் யார் என்பதை எல்லாம் வசனங்களில் சேர்த்து காலநிர்ணயம் செய்கிறார்கள்.

துறைமுகம் சென்று குறிஞ்சி யைப் பார்க்க வேண்டும் என்பது மனநலம் குன்றிய 35 வயது ஆசா மிக்கு ஆசை. அதுவே 70 வயதான, சுதந்திரத்துக்கு முந்தைய மெட் ராஸ் இம்பீரியல் போலீஸில் டி.எஸ்.பி ஆக இருந்தவரின் விருப் பமும். துறைமுகத்தில் தருமன், கடலை விற்கும் கண்ணம்மா, டீ கொடுக்கும் கபாலி என்று கதாபாத்திரங்கள். இவர்களுடன், ஒரே ஒரு வாக்கியம் மட்டுமே பேசும் மனம் பேதலித்த ஆசாமி.

‘வரலாற்றில் அதிகம் கவனிக் கப்பட்ட  புத்தகத்தில் அதிகம் வாசிக்கப்படாத ஓர் அத்தியாயத்தில், அறிமுகமான சம்பவத்தில், அறிமுகமாகாத மாந்தர்கள் சிக்கிக் கொண்ட ஒரு கதைதான் குறிஞ்சி’ என்று நாடகத்தின் கதைச் சுருக்கத்தில் எழுதியிருக்கிறார்கள்.

இரு நபர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது ஏன், எப்படி என்பதை விளக்க, 1942-ல் நடந்ததாக சொல்லப்படும் முன்கதை, நாடகத்தின் அடிநாதம். அந்தக் காலத்திலேயே போலீஸில் ஊழல்

செய்திருக்கிறார்கள். காட்டுத் தர்பாரில் அராஜகம் நடந்திருக்கிறது. இந்த உண்மைகள் வரலாற்றில் மறைக்கப்பட்டும், மறக்கப்பட்டும்விட்டது என்பதை ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார்கள் நாடகாசிரியரும் இயக்குநரும்.

துறைமுகத்தில் சரக்குக் கடத் தப்பட்டதற்கு, விபத்தில் இருந்து தப்பித்த 2 சிறுவர்கள் சாட்சி யாகிவிடுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் மீது ராட்சதத்தனமாக தாக்குதல் நடத்தி, மனம் பிழறச் செய்யும் காட்சி நெஞ்சைப் பிளக்கிறது. நாடகம் முடிந்தும் குறிஞ்சி கப்பல் கண் முன் நிற்கிறது.

(கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகத்துக்கான 2-ம் பரிசுப் பெற்ற நாடகம்)

வானவில்லின் அம்பு

வானவில்லின் அம்புக்கு கதை - உரையாடல் - இயக்கம் அகஸ்டோ.

அழுத்தமான கதை சொல்லியாக மீண்டும் தன்னை  நிரூபித்திருக்கிறார். இதில்  ஹரீஷ் சத்தியானந்தன், ஆதித்யா ஸ்ரீராம் என்று இரு சிறுவர்கள் தனித்து நிற்கிறார்கள். குகபிரசாத்தின் மென்மையான கிளாசிக்கல் இசை, காதுகளை வருடிவிடும் தேன் மதுர கீதம்.

பொறாமை, கோபம், ஆற்றாமை என்று பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் வயலின் இசைக் கலைஞர் வேடத்தில் போத்திலிங்கம் நிறைவு. பிசியோதெரபிஸ்ட் சொர்ணா ரோலில் உஷா நந்தினி. அப்பா பற்றிய கசப்பான உண்மைகளை மகனிடம் மறைப்பதிலும், அவனை புல்லாங்குழலில் தேர்ச்சிப் பெற செய்வதிலும், கிளைமாக்ஸிலும் எமோஷன்களை அழகுபட வெளிப்படுத்துகிறார்.

ரத்தத்தில் கலந்திருந்தால் மட்டுமே எவருக்குமே கலை வசப்படும்; உழைப்பு இரண்டாம்பட்சம் என்பது மையம். வயலின் வித்வான் தன் பேரனின் ரத்தக்கலப்பு காரணமாகவே வயலினுள் அவன் அநாயாசமாக சஞ்சாரம் செய்வதாக நினைப்பவர். பேரனின் நண்பன், பின்னணி எதுவுமில்லாமல் குழலூதும் திறமையை ஏற்க மறுக்கிறார் இவர். புல்லாங்குழல் சிறுவனின் குடும்பக் கதை சூப்பர் டீலக்ஸ்.  இறுதியில் புல்லாங்குழல் சிறுவன் பள்ளிக்கூடத்தில் நிகழ்த்தும் சாதனை வயலினை மனம் மாற செய்வதாகப் போகும் கதையை மேலும் விவரித்து சஸ்பென்ஸ் உடைப்பது விமர்சன அதர்மம்! (சிறந்த  கதைக்கான முதல் பரிசுப் பெற்ற நாடகம்)

பட்டம்பி

கூத்தபிரானின் மகன் ரத்னம் கதை - வசனம் எழுதி, பேரன் விக்னேஷ் ரத்னம் இயக்கிய நாடகம். ப்ளாஷ்பேக் காட்சியில் பட்டம்பியாகத் தோன்றி அப்பாவை நினைவுப்படுத்துகிறார் ரத்னம். சின்னதாக குடுமி, பனியன், மடித்துக் கட்டிய வேஷ்டிக்கு வெளியே தெரியும் நிக்கர் சகிதம் அச்சுப்பிச்சுத்தனத்துடன் ரத்னம் காற்றில் கணக்குப் போடுவது கலகல.

 ஹீரோவாக வாலிப விக்னேஷ். மாடி வீட்டு வசந்தியை (சுவாதி ஸ்ரீதர்)  காதலிக்கும்போதும்.. அப்பா ஜெயராமன் (ஸ்ரீராம்), அம்மா (அனுராதா கண்ணன்)வுக்கு சொன்ன பேச்சு கேட்கும் சாது மகனாக அலுவலகம் கிளம்பும்போதும்..மர்ம நபரின்  தொலைபேசி அழைப்பின் மிரட்டலில் பதறும்போதும்... நடிப்பில் பாஸாகிவிடுகிறார். வசனம் பேசும்போது மட்டும் ஏன் அத்தனை ஆட்டம்? ஒரு காலத்தில் கந்துவட்டி வசூலிப்பதில் கில்லாடியாக இருந்தவராம் அப்பா ஜெயராமன்.  ஏழைக் குடும்பமான பெரிய பட்டம்பியின் குடும்பத்தில் கண்களில் விரல் விட்டு ஆட்டியவர். இவரைப் பழிவாங்க கிடைத்தவர்தான் மகன் பட்டம்பி. இறுதியில் ஜெயராமன் சுயரூபம் தெரியவரும்போது அவர் பொங்கி பொங்கி அழ மட்டுமே செய்கிறார். மற்றபடி மகன் பட்டம்பி தானே எல்லா பழிகளையும் சுமந்து பெற்றோரை மறந்து, காதலியை துறந்து விடுமுறைக்கு வெளியூருக்குச் செல்வது மாதிரி ஜெயில் நோக்கி புறப்படுவது பரிதாபமான முடிவு - நாடகத்துக்கு!

(சிறந்த கதைக்கான 2-ம் பரிசுப் பெற்ற நாடகம்)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close