[X] Close

ஆர்வம் தரும் இடைத் தேர்தல்கள்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:47 am
  • அ+ அ-

-கோபால்

மே 19 அன்று தமிழகத்தின் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஏப்ரல் 18 அன்று 38 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. ஆகவே, தமிழக சட்டப்பேரவையில் காலியாக இருந்த 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவுகள் இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவிருக்கும் மே 23 அன்றே வெளியிடப்படவிருக்கின்றன.

இந்தியாவில் மக்களவையிலோ மாநில சட்டப்பேரவைகளிலோ உள்ளாட்சிகளிலோ உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் சேர்த்து நடத்தப்படும் தேர்தல் பொதுத் தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. இவற்றுக்கு மாறாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுப்பினராகத் தொடர முடியாமல் போகும்போது அத்தொகுதி காலியாகிறது.

காலியான தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதுவே இடைத்தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் இடைக் காலத்தில் நடத்தப்படும் தேர்தல் என்பதால் இது ‘இடைத் தேர்தல்’ என்று பெயர் பெற்றதாகப் புரிந்துகொள்ளலாம்.

காலியான தொகுதிக

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவிக்காலத்தின்போது இறந்துவிட்டாலோ பதவியை ராஜிநாமா செய்துவிட்டாலோ உறுப்பினராக நீடிக்கும் தகுதியை இழந்தாலோ தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடத்தப்படும். பின்வரும் காரணங்களுக்காக ஒருவர் உறுப்பினராகத் தொடரும் தகுதியை இழப்பார்.

# நீதிமன்றத்தால் ஏதேனும் ஒரு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் உறுப்பினராக நீடிக்கும் தகுதியை இழக்கிறார்.

# ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு இன்னொரு கட்சிக்கு மாறுபவர் அல்லது கட்சியிலிருந்து ராஜிநாமா செய்பவர் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி இழக்கிறார்.

# மக்களவை அல்லது சட்டப்பேரவையில் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறும் உறுப்பினர்களும் அக்கட்சியின் கோரிக்கையின் பேரில் அவைத் தலைவரால் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள்.

# குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக நிரூபிக்கப்பட்டால் மறுதேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவியை இழப்பார்.

# ஒரே உறுப்பினர் இரண்டு பதவிகளை வகிக்கக் கூடாது. பொதுத் தேர்தலில் ஏற்கெனவே எம்பியாக இருப்பவர் எம்.எல்.ஏ.வாகப் போட்டியிட்டு வென்றால் அவர் இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதேபோல் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் ஒரே நபர் போட்டியிட்டு வென்றால் இரண்டில் ஒன்றை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தச் சூழ்நிலைகளில் ராஜிநாமா செய்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வேறொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

# தேர்தலில் வெற்றிபெற்ற எந்தத் தொகுதியிலும் உறுப்பினராக இல்லாதவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால், ஆறு மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாக வேண்டும். இதற்குத் தோதாக ஆளும்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் யாரேனும் ஒருவர் தன் பதவியை ராஜிநாமா செய்வார். அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும்.

ஒரு தொகுதி காலியானது என்று அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. ஆனால், தேர்தல் தொடர்பான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பது, தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெறும் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடத்துவதற்கு இசைவான சூழல் இல்லை என்று தேர்தல் ஆணையம் கருதுவது ஆகிய சூழ்நிலைகளில் தேர்தல் தள்ளிப்போடப்படும்.

தமிழகமும் இடைத் தேர்தலும்

# 1972-ல் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக 1973-ல் நடந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டது. அக்கட்சியின் வேட்பாளர் கே. மாயத்தேவர் வெற்றிபெற்றார். அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றி அதுதான்.

# 1980-க்குப் பின் இதுவரை 50-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றில் 9 முறை மட்டுமே ஆளும் கட்சி/கூட்டணியைச் சாராத வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.

# 2016-ல் ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றிபெற்றது அரிதான நிகழ்வு.

# அதற்கு முன் 2004-ல் திருமாவளவன் ராஜிநாமா செய்ததால் மங்களூர் (தனி) தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக வேட்பாளர் வெ.கணேசன் வெற்றிபெற்றார். 2000-ல் நத்தம் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக வேட்பாளர் ஆர்.விஸ்வநாதன் வெற்றிபெற்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close