[X] Close

வெற்றி முகம்: மாணவ ஆசான்கள்!


  • kamadenu
  • Posted: 14 May, 2019 11:18 am
  • அ+ அ-

-ம.சுசித்ரா

“அறிவை இடமாற்றுவது கற்பித்தலாகாது. அறிவு உற்பத்தியாவதற்கான சாத்தியங்களை உருவாக்குவதே கற்பித்தலாகும்” என்றார் மாற்றுக் கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ ஃப்ரெய்ரே. இந்த வார்த்தைகளைக் கண்டவுடன், “அதெல்லாம் சரிதான்… ஆனால், பாடத்தை நடத்தவே நேரம் போதவில்லை. இதில் ஒவ்வொரு மாணவருக்கு என்ன தேவை என்பதையறிந்து அவர்கள் ஒவ்வொருவரையும் தனி ஆளுமைகளாக மாற்றுவது எப்படி?” என்ற வார்த்தைகள்தாம் நமது பள்ளி ஆசிரியர்கள் பலரின் மனத்துக்குள் ஒலிக்கும் என்பது புரிகிறது.

இந்த இரண்டு பார்வைகளுக்கும் இடையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் உழன்றுகொண்டி ருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஊட்டும்விதமாக ‘மாணவ ஆசான்’ திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது, சென்னையில் உள்ள ‘இன்வால்வ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்.

பாடமும் தலைமைப்பண்பும்

இந்நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இளைஞர்கள் சென்னை, அதன் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று 8-ம் வகுப்பு தொடங்கி பிளஸ் 2வரை உள்ள படிப்பில் சூட்டிகையான, உதவ மனமுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படைப் பாடத்தையும் தலைமைப்பண்புப் பயிற்சிகளையும் அளிக்கிறார்கள். அவர்களை ஆசானாக மாற்றி அதே பள்ளியின் 4 முதல் 8-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க வைக்கிறார்கள்.

இந்த நிறுவனம் முன்னெடுத்திருக்கும் புதுமையான செயல்வழிக் கற்பித்தல் முறைக்குப் பல சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.   சிங்கப்பூர் சர்வதேச அறக்கட்டளை வழங்கிய ‘இளம் சமூகத் தொழிலதிபர்’ விருது, அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘குளோபல் எங்கேஜ்மெண்ட் சம்மிட்- 2017’  என்ற சமூக மாற்றத்துக்காகச் செயல்படும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு, சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த ஆண்டு நடத்திய ‘யூத் ஸ்பீக் சம்மிட்’-ல் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளிட்டவை இந்நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கிறது.

பிஹார் டூ சென்னை

இதன் நிறுவனர், சென்னை ஐ.ஐ.டி.யில் நான்காமாண்டு இயந்திரப் பொறியியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் திவான்ஷூ குமார். பிஹார் மாநிலத்தின் பழமைவாய்ந்த நகரமான கயாவைச் சேர்ந்தவர் திவான்ஷூ குமார். எளிமையான பொருளாதாரப் பின்புலத்தைச் சேர்ந்தவர். ரூ.150 மட்டுமே கல்விக் கட்டணமாக வசூலித்துவரும் கயாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்திருக்கிறார்.

10-ம் வகுப்பில் உயரிய மதிப்பெண் குவிக்கவே புது டெல்லியில் பிரபலமான பள்ளி ஒன்றில் 100 சதவீதம் உதவித்தொகையுடன் பிளஸ் 2 முடித்திருக்கிறார். ஜெ.இ.இ. நுழைவுத் தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற்றுத் தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் இயந்திரப் பொறியியல் படித்துவருகிறார்.

“பொதுவாகவே, படிப்புக்காகவோ வேலைக்காகவோ ஊரையும், உறவையும் பிரிந்துசெல்பவர்கள் புதிய இடத்துக்கு ஏற்றாற்போல வாழப் பழகவே சிரமப்படுவார்கள். அப்படி இருக்க சென்னையில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டி எது உங்களை உந்தித்தள்ளியது?” என்று கேட்டபோது, “நான் எளிமையான சூழலில் படித்து வளர்ந்தவன். போதுமான கவனிப்போ பயிற்றுவிப்போ இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுத்தான் படித்தேன். சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்த புதிதிலேயே எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திவந்த தன்னார்வ அமைப்பு ஒன்றில் இணைந்துகொண்டேன்.

பின்தங்கிய சூழலைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கத் தேவையான திறன்களை ஊட்டுவதே எங்கள் பணி. ஜெ.இ.இ. உள்ளிட்ட சவாலான நுழைவுத் தேர்வுகளை வெல்லப் பலரைத் தயார்படுத்தினோம். நானும் இன்னும் சிலரும் மட்டும் ஆங்காங்கே சென்று சில மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக மாணவர்களையே ஆசானாக்கும் புதிய முயற்சியை ஏன் முன்னெடுக்கக் கூடாது என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அதுவே ‘இன்வால்வ்’ நிறுவனத்தின் முதல் படி” என்கிறார் குமார்.

2016-ம் ஆண்டின் கோடைக்கால விடுமுறையின்போது புது டெல்லி சென்றிருக்கிறார் குமார். அங்கே தான் மேல்நிலை வகுப்புகள் படித்த பள்ளியில் தன் புதிய யோசனையைச் சோதனை முயற்சியாகச் செயல்முறைப்படுத்திப் பார்த்திருக்கிறார். அதில் கிடைத்த தன்னம்பிக்கையில் சென்னை திரும்பியதும் ‘இன்வால்வ்’ நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்.

தீர்வு இங்கே

“இந்தியப் பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வி அறிவு குறித்து அண்மையில் நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் பெரும்பாலான  மாணவர்களுக்கு அடிப்படைக் கணிதம், மொழி திறன்களில் பற்றாக்குறை இருப்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தனியார் பள்ளி மாணவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் மாணவர்களை  ஆசானாக்குவது என்றால் என்ன?”

“நம்முடைய கல்விப் பாடத்திட்டத்தில் பல அறிவியல் கருத்துகள் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாதபடி abstract ஆக உள்ளன. போதாதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும் 50 மாணவர்கள்வரை இருப்பதால் ஆசிரியர்களால் தனிக் கவனம் செலுத்த முடிவதில்லை. இவற்றை மனத்தில் நிறுத்தியே மாணவர்களின் அறிவுத்திறனுக்கு ஏற்ப கற்பிக்கப் பயிற்றுவித்தலை எங்கள் திட்டத்தின் முதல் படியாகக் கொண்டிருக்கிறோம்.

உதாரணத்துக்கு, கணிதத்தின் அடிப்படைகளான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தலைத் தீக்குச்சி, தென்னந்துடைப்பக் குச்சி, பாசி மணி போன்ற பொருள்களைக் கொண்டு கற்பித்தல். இரண்டாவது, ஆசிரியர்களுக்கே அடங்காத மாணவர்கள் மேல்வகுப்பு மாணவர்கள் பாடம் நடத்தினால் மட்டும் கவனித்துவிடுவார்களா என்றும் சிக்கல் எழுகிறதில்லையா? அதற்கு வகுப்பறை மேலாண்மையைப் பயிற்றுவிக்கிறோம்.

இதன் வழியாகத் தொடர்பாற்றல் (communication skill), சிக்கலுக்குத் தீர்வு காணும் முறை (problem solving technique), குழுவாகச் செயலாற்றும் திறன் (organizational skill), உணர்ச்சிபூர்வமான புத்திக்கூர்மை (emotional intelligence) ஆகியவற்றை மாணவர்களே நடைமுறை வழியாகக் கற்றுக்கொள்கிறார்கள். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை நாங்கள் உருவாக்கிய ‘மாணவ ஆசான்’களைச் சந்திக்கிறோம். அரசு, அரசுதவிப் பெறும் பள்ளிகளுக்கு முற்றிலும் இலவசமாகப் பயிற்றுவிக்கிறோம்.

2018-ல் ஐந்து அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துப் பயிற்றுவித்தோம். தனியார் பள்ளிகளுக்கு மட்டும் குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கிறோம். கடந்த இரண்டாண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட ‘மாணவ ஆசான்கள்’ உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வழியாக 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்” என்கிறார். ஈடுபாட்டுடன் படித்தால் சிறந்த மாணவராகத் திகழும்போதே சிறந்த ஆசானாகவும் உருவெடுக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்திவருகிறது, ‘இன்வால்வ்’.

தொடர்புக்கு: 8447707384,

divanshu@involveedu.com

கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close