[X] Close

இந்தியாவை அறிவோம்: கர்நாடகம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:27 am
  • அ+ அ-

-தம்பி

மாநில வரலாறு

கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னதாக நந்த பேரரசின் ஆளுகைக்குள் இருந்தது கர்நாடகம். பிறகு, அசோகர் காலத்தில் மௌரியப் பேரரசின் ஆளுகைக்குள் வந்தது. அதையடுத்து நான்கு நூற்றாண்டுகள் சாதவாகனர்கள் ஆட்சிபுரிந்தனர். தொடர்ந்து கடம்பர்கள், மேலைக் கங்கர்கள், சாளுக்கியர்கள், ஹொய்சாளர்கள் ஆண்டார்கள். கி.பி. 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு அமைந்தது. அதன் பிறகு, சுல்தான்கள், மொகலாயர்கள், நிஜாம், ஆங்கிலேயர்கள் போன்றோரின் ஆளுகையில் கர்நாடகத்தின் பகுதிகள் இருந்தன. சுதந்திரத்தின்போது மைசூர் மாநிலமாக அறியப்பட்டது. மாநில மறுசீரமைப்புச் சட்டம்-1956-ன் கீழ் கர்நாடக மாநிலம் பிரிக்கப்பட்டது.

புவியியல் அமைப்பு

தென்னிந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கர்நாடகம், நாட்டின் 6-வது பெரிய மாநிலம். பரப்பளவு 1,91,791 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கர்நாடகத்தின் மக்கள்தொகை 6.11 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 320. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555). இந்துக்கள் 84%, முஸ்லிம்கள் 12.92%, கிறிஸ்தவர்கள் 1.87%, சமணர்கள் 0.72%. உட்பிரிவுகளில் பட்டியலின சமூகத்தினரின் எண்ணிக்கை 17.14%.

சமூகங்கள்

கர்நாடகத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக லிங்காயத்துகளும் ஒக்கலிக்கர்களும்தான் பெரும்பான்மையான சமூகத்தினர் என்று நம்பப்பட்டுவந்தது. ஆனால், 2013-14-ல் அங்கு எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின்போது பட்டியலினத்தவர்களின் எண்ணிக்கைதான் அங்கு அதிகம் என்பது தெரியவந்தது. பட்டியலினத்தவர்களுக்கு அடுத்ததாக முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம். எனினும், லிங்காயத்துகளும் (14%) ஒக்கலிக்கர்களும் (11%) அரசியல்ரீதியாக செல்வாக்கு மிகுந்த சமூகத்தினர்களாக இருக்கின்றன. இந்தச் சமூகங்களுக்கு அடுத்த நிலையில் குருபாக்கள் (7%) இருக்கிறார்கள். தற்போதைய முதல்வர் எச்.டி.குமாரசாமி ஒக்கலிக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுகள்

கிருஷ்ணா நதியும் காவிரியும் கர்நாடகத்தின் இரண்டு பிரதான நதிகள். கிருஷ்ணா நதியின் கிளையாறுகள் பீமா, கடப்பிரபா, வேதவதி, மலபிரபா, துங்கபத்ரா, ஷராவதி போன்றவை. ஹேமாவதி, ஷிம்ஷா, அர்காவதி, லட்சுமணத் தீர்த்தம், கபினி போன்றவை காவிரியின் கிளையாறுகள்.

காடுகள்

மொத்தம் 38,724 சதுர கிமீ பரப்பளவில் காடுகள் அமைந்திருக்கின்றன. இது கர்நாடகத்தின் மொத்தப் பரப்பில் 20%. 5 தேசியப் பூங்காக்களும் 23 வனவிலங்கு சரணாலயங்களும் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளை கர்நாடகத்தின் நுரையீரல் எனலாம். கர்நாடகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் காணப்படுகின்றன. பறவையினங்கள் 600, பாலூட்டியினங்கள் 160, ஊர்வன 160, மீன் வகைகள் 800 என்று கர்நாடகம் வளமான உயிர்ப் பன்மையைக் கொண்டிருக்கிறது.

நீராதாரம்

கர்நாடகத்தின் நீராதாரத்தில் கிருஷ்ணா, காவிரி ஆறுகளும் அவற்றின் கிளையாறுகளும் முக்கியப் பங்கு வகித்தாலும் 72% விவசாய நிலங்கள் மழைநீரை நம்பித்தான் இருக்கின்றன. ஆற்றுப் பாசனம் 28% மட்டும்தான். இங்கு கிட்டத்தட்ட 20 நீர்த்தேக்கங்களும் அணைகளும் இருக்கின்றன.

கனிம வளம்

கர்நாடகம் கனிம வளம் மிக்க மாநிலம். இதன் ‘கனிமப் பிராந்தியம்’ 29 மாவட்டங்களையும் உள்ளடக்குகிறது. தங்கம்,வெள்ளி, தாமிரம், இரும்பு, மாங்கனீஸ், சுண்ணாம்புக் கல்,டோலோமைட், கல்நார், பாக்ஸைட், குரோமைட், கோலின்,கிரானைட் கல் போன்றவை இங்கு தோண்டியெடுக்கப்படுகின்றன. தங்க உற்பத்தியில் நாட்டிலேயே கர்நாடகத்துக்குத்தான் முதலிடம். குரோமைட், வெள்ளி உற்பத்தியில் இரண்டாமிடம். யுரேனியம், கியாமை, கல்நார், மக்னீசியம், இரும்புத் தாது போன்றவற்றின் உற்பத்தியில் மூன்றாமிடம். பிரபலமான கோலார் தங்க வயல்கள் கர்நாடகத்தில்தான் இருக்கின்றன. கோலார் தங்க வயல்களிலிருந்து ஆண்டுதோறும் 3 ஆயிரம் கிலோ தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது.

kkr.JPG 

பொருளாதாரம்

2018-19-ல் கர்நாடகத்தின் ஜிடிபி ரூ.15.88 லட்சம் கோடி. தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,78,121. கர்நாடகத்தின் 66% மக்கள் கிராமப்புறத்தினர் என்பதால் இந்த மக்கள்தொகையில் பெரும்பாலானோர், அதாவது 55%, விவசாயத் தொழில்களிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். ஆகவே, இம்மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு விவசாயத்தின் பங்களிப்பு பிரதானமானது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டட், நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரீஸ், பி.எச்.ஈ.எல். போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் பெங்களூரில் இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் ‘இந்திய ஐ.டி. நிறுவனங்களின் கேந்திரம்’ என்றும் ‘இந்திய சிலிக்கான் வேலி’ என்றும் பெங்களூர் அழைக்கப்படுகிறது. உயிரிதொழில்நுட்பத்திலும் கர்நாடகம் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள 320 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் கர்நாடகத்தில் மட்டும் 158 நிறுவனங்கள் இருக்கின்றன.

அரசியல் சூழல்

சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் காங்கிரஸின் ஆதிக்கம் வெகு நாட்கள் நீடித்த மாநிலங்களுள் கர்நாடகமும் ஒன்று. நாடாளுமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை நெருக்கடிநிலைக்குப் பின் வந்த தேர்தலில்கூட காங்கிரஸ்தான் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் அல்லாத கட்சியொன்றிலிருந்து முதன்முறையாக முதல்வரானவர் என்ற பெயரை 1983-ல் ஜனதா கட்சியின் ராமகிருஷ்ண ஹெக்டே பெற்றார். கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அரசுஅமைத்திருந்தாலும் அவற்றுக்கிடையே சுமுகமான உறவுஇல்லை என்பதுதான் உண்மை. சட்டமன்றத்தைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் ஆட்சியமைக்க முடியாத பாஜக தனது செல்வாக்கை மேலும் அதிகரிக்க முடியாமல் திணறுகிறது. இதைத் தவிர உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்துத்தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குகளை பகுஜன் சமாஜ் கட்சி குறிவைத்திருப்பதால் பாஜக கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் தலைவலி உருவாகியிருக்கிறது.

முக்கியப் பிரச்சினைகள்

கர்நாடகம் பெரிய மாநிலம் என்பதால் வெவ்வேறு விதமானநிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. வட கர்நாடகம் வறட்சியான பகுதி. இங்குள்ள மக்கள் தண்ணீர்ப் பிரச்சினையால் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். பெல்லாரி பகுதி கனிம வளம் நிரம்பியது என்றாலும் மற்ற இயற்கை வளம் ஏதுமற்ற பகுதி. கனிமங்கள் தவிர்த்த வேலைவாய்ப்புகள் ஏதும் அங்குள்ள மக்களுக்குக் கிடையாது. மைசூர், பெங்களூர் போன்ற பகுதிகள் நன்கு வளர்ச்சியடைந்திருந்தாலும் தற்போது மக்கள்தொகை பெருக்கத்தால் திணறுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தால் கர்நாடகத்தின் பொருளாதாரம் அதிகரித்த அதேவேளையில் அந்தத் தொழில் துறைக்காக வெளிமாநிலங்களிலிருந்து குடியேறியவர்களுக்கு இடம்கொடுக்க முடியாமல் பெருநகரங்கள் தடுமாறுகின்றன. இதனால், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலையும்கூட சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குத் தப்பவில்லை. இதனால், மழை குறைந்து ஒட்டுமொத்த மாநிலமுமே பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close