[X] Close

பாஜக, காங்கிரஸுக்கு சவாலாக பாரதிய பழங்குடி கட்சி


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:24 am
  • அ+ அ-

பாஜக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் கையாண்ட கொள்கைகள் எத்தனை புதிய அரசியல் இயக்கங்களின் எழுச்சிக்கு வித்திட்டிருக்கின்றன என்றே தனியாக ஒரு கட்டுரை எழுதலாம்போல இருக்கிறது. ராஜஸ்தானிலும் குஜராத்திலும் குறிப்பிட்ட பிராந்தியத்தில் பாஜக மட்டும் அல்லாது காங்கிரஸும் அஞ்சும் இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது பாரதிய பழங்குடி கட்சி.

தெற்கு ராஜஸ்தான், வடக்கு குஜராத் பிராந்தியத்தில் பில், மீனா பழங்குடிச் சமூகங்கள் இடையே இத்தேர்தலில் தாக்கத்தை உண்டாக்கவல்ல கட்சி இது என்று பாரதிய பழங்குடிகள் கட்சியை (பிபிடி) அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள். 43 வயதான காந்திலால் ரோட் இதன் தலைவர். இதர நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இவரைவிட வயது குறைவு. ‘பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தங்களை இந்துக்களாக்கி, தனித்தன்மையை அழிக்கப்பார்க்கின்றன’ என்பதுதான் இவர்களது பிரதானக் குற்றச்சாட்டு. அதேபோல, ‘தேர்தலில் வென்ற பிறகு தங்களைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை’ என்பது இவர்களின் கோபம்.

பழங்குடிகள் பரவியிருக்கும் இந்தப் பிராந்தியத்தில் பெரிய வளர்ச்சியோ வேலைவாய்ப்புகளோ இல்லை. தொழில், விவசாயம் இரண்டிலும் பின்தங்கிய பகுதி. அது பாஜக, காங்கிரஸ் அல்லது இப்போது களத்தில் இருக்கும் வெகுஜனக் கட்சியாக இருக்கும் எதுவென்றாலும் சரி; அடிப்படையில் அவற்றில் இருப்போர் சமவெளிகளில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்களே; அவர்களுக்குப் பழங்குடிகளின் கலாச்சாரமோ வாழ்க்கையோ பிரச்சினைகளோ தெரியவில்லை என்ற ரோட்டின் குரலுக்கு, பழங்குடி மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. ‘நாங்கள் தனி இனம், இந்துக்கள் அல்ல, தொல்குடிகள். எங்களுடைய வழிபாட்டுக்குரிய தெய்வங்களும் குருதேவர்களும் வேறு; ஆனால், எங்கள் கலாச்சாரம் மீது இன்று போர் ஏவப்பட்டிருக்கிறது’ என்று சொல்லும் இவர்கள், காலஞ்சென்ற பழங்குடித் தலைவரான ஜெய்பால் முண்டா மீது பெரும் மதிப்பு கொண்டிருக்கின்றனர்.

2017-ல் தொடங்கப்பட்ட இக்கட்சிக்குத் தொண்டர்கள் பலம் இருந்தாலும் பண பலம் இல்லை. இரவலாகக் கிடைத்த ஒரு காரில்தான் முழுப் பிரச்சாரமும் நடக்கிறது. பாஜகவும் சங்கப் பரிவாரங்களும் இந்துத்துவத்துக்கு எதிரான இயக்கமாக இதைப் பேசுகின்றனர். காங்கிரஸோ, ‘வசுந்தரா உருவாக்கிய கட்சி இது; காங்கிரஸ் வாக்குகளைப் பிரிக்கும் நோக்கத்தைக் கொண்டது’ என்கிறது. தொகுதிகளை வெல்கிறார்களோ இல்லையோ, சேதத்தை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். யாருக்கு என்பதுதான் கேள்வி!

-ராஜகோபாலன்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close