[X] Close

யாராக இருந்தார் ராஜீவ்?


  • kamadenu
  • Posted: 14 May, 2019 08:20 am
  • அ+ அ-

-ஜூரி

தன்னுடைய சொந்தக் கட்சிக்காரர்களால் மக்கள் மத்தியில் நீட்டிக்க முடியாத தன் நினைவுகளை கால் நூற்றாண்டு காலத்துக்குப் பின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதமர் கிளறி எழச்செய்வார் என்பதை ராஜீவ் காந்தியே எந்தக் காலத்திலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்; 2019 தேர்தலின் பேசுபொருள்களில் ஒருவராக ராஜீவ் மாறியது யாருமே எதிர்பார்த்திராத விஷயம்தான்.

எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் இன்று ராஜீவைப் பற்றி நிறையப் பேசப்படுகிறது. உள்ளபடி, ராஜீவ் எப்படிப்பட்டவராக இருந்தார்?

தற்செயல் பிரதமர்

இந்திரா காந்திக்கும் பெரோஸ் காந்திக்கும் மகனாக 1944 ஆகஸ்ட் 20 அன்று மும்பையில் பிறந்த ராஜீவ், டேராடூனில் பள்ளிப் படிப்பையும் பிரிட்டனில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பிறகு, தனக்கு விருப்பமான விமானத் துறையை வரித்துக்கொண்டார். மன்மோகன் சிங் ஒரு தற்செயல் பிரதமர் என்கிறோம் இல்லையா, அந்த அடைமொழி கூடுதலாகவே பொருந்தக்கூடியவர் ராஜீவ்.

அரசியலில் தனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டு விமான ஓட்டியாகச் சுற்றிக்கொண்டிருந்த ராஜீவை அரசியல் களம் நோக்கி அழைத்துவந்தது 1980-ல் நிகழ்ந்த சஞ்சய் காந்தியின் மறைவு. அதுநாள் வரை தனக்குப் பக்கபலமாக இருந்த இளைய மகன் சஞ்சய் மறைந்தபோது மூத்த மகன் ராஜீவை அரசியல் நோக்கி இழுத்தார் இந்திரா. 1981-ல் அமேத்தியில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் ராஜீவ். 1984-ல் இந்திரா படுகொலைசெய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் பதவி நோக்கி ராஜீவை இழுத்தனர். இந்திரா மறைந்த அடியோடு ராஜீவ் பிரதமர் பதவி ஏற்றபோது டெல்லியில் பெரும் கலவரம் மூண்டிருந்தது. இந்திரா கொலையாளிகள் சீக்கியர்கள் என்பதால், சீக்கியர்களை இலக்கிட்டு நடத்தப்பட்ட அந்தக் கலவரத்தை - காங்கிரஸார் அதன் முன்னணியில் இருந்தனர் - ராஜீவ் எதிர்கொண்ட விதமே கடும் விமர்சனத்துக்குள்ளானது. “ஒரு பெருமரம் வீழும்போது பூமி சற்று அதிரத்தான் செய்யும்” என்றார் ராஜீவ்.

இந்தியாவின் இளைய பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவுக்கு நிறைய கனவுகள் இருந்தன; ஆகையால், பதவியேற்ற வேகத்தில் மக்களவையைக் கலைக்கப் பரிந்துரைத்துவிட்டு, முன்கூட்டியே தேர்தலைச் சந்தித்தார். புதிய சகாக்களோடு மாற்றங்களை எதிர்கொள்ள அவர் திட்டமிட்டார். வரலாற்றிலேயே பெருவாரியான வாக்குகளை அளித்து ராஜீவை வெற்றியடையச் செய்தது இந்தியா. 49.10% வாக்குவீதத்துடன் 414 தொகுதிகளையும் வென்று ஆட்சியில் அமர்ந்தார் ராஜீவ். ஆட்சிப் பொறுப்பேற்றதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். ராஜீவின் இச்செயல்பாட்டுக்குப் பின்னர்தான் அரசுகள் நிலைத்து நீடிக்கலாயின. சாதனைகள், சோதனைகள், வேதனைகள் எல்லாம் கலந்தது என்று ராஜீவின் காலகட்டத்தைச் சொல்லலாம்.

ராஜீவ் காந்தி தருணங்கள்

பஞ்சாபில் பொற்கோவிலிலிருந்து பிந்தரன்வாலே உள்ளிட்ட தீவிரவாதிகளை அகற்ற எடுத்த ‘நீலநட்சத்திர’ நடவடிக்கைக்காக இந்திரா கொல்லப்பட்டார். இருந்தும், அமைதி திரும்ப ஹர்சந்த் சிங் லோங்கோவாலுடன் 1985-ல் சமரச ஒப்பந்தம் செய்துகொண்டார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்ததோடு அனைத்திந்திய சீக்கிய மாணவர் பேரவைக்கு விதித்திருந்த தடையையும் விலக்கினார். 1988 மே மாதம் ‘ஆபரேஷன் பிளாக் தண்டர்’ என்ற நடவடிக்கையின் மூலம் பொற்கோவிலுக்குள் தீவிரவாதிகள் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள் ஒன்றுவிடாமல் நீக்கப்பட்டன. அதன் பிறகே அங்கு அமைதி திரும்பியது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவிய அமைதியின்மையைப் பேச்சுவார்த்தைகள் மூலம் சாதுர்யமாக எதிர்கொண்டார். அசாமில் அந்நியருக்கு எதிரான இயக்கத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இந்திய உதவியை நாடிய பிற நாட்டினருக்கும் உரிய நேரத்தில் கைகொடுத்திருக்கிறார் ராஜீவ். 1986-ல் செஷல்ஸ் தீவில் அதிபர் பிரான்ஸ் ஆல்பர்ட் ரெனிக்கு எதிராக நடக்கவிருந்த ராணுவப் புரட்சியை முறியடிப்பத்தில் ராஜீவ் உதவினார். இதேபோல, 1988-ல் இலங்கையைச் சேர்ந்த ‘பிளாட்’ அமைப்பின் உறுப்பினர்கள் துப்பாக்கி முனையில் மாலத்தீவைக் கைப்பற்றியபோது அதிபர் மம்மூன் அப்துல் கய்யூமின் வேண்டுகோளை ஏற்று ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தார்.

இந்தியப் பொருளாதாரத்துக்குப் புது ரத்தம் பாய்ச்ச கல்வித் துறைச் சீர்திருத்தமும் பொருளாதாரச் சீர்திருத்தமும் முக்கியம் என்பதை ராஜீவ் உணர்ந்திருந்தார். உலகமயமாக்கல் திசை நோக்கி இந்தியா ராஜீவ் காலத்திலேயே அடியெடுத்துவைத்தது; இந்தியாவைக் கணினிமயமாக்கும் முதல் அடியையும் அவரே எடுத்துவைத்தார். ஆனால், அவர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கல்வித்திட்ட மாற்றங்களை முழுக்க நல்லவை எனக் கூறிட முடியாது; கல்வியை வெறும் வேலைக்கான தகுதியாக மாற்றும் திட்டமாகவே அது அமைந்தது.

ஆனால், இந்தியா முழுவதும் பரப்பவும் தரத்தைக் கூட்டவும் கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கை, கிராமப்புறங்களில் உள்ள ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் தரமான கல்வி பெற ‘ஜவாஹர் நவோதய வித்யாலயங்கள்’, தொழில் உற்பத்தியை ஊக்குவிக்க மானியங்கள், தொழில்நுட்பங்களை மேம்படுத்த கூடுதல் நிதி, இறக்குமதிகளுக்கான ‘கோட்டா’ முறை ஒழிப்பு, கணினி, விமானங்கள், ராணுவத் தேவைகள், தகவல் தொடர்புச் சாதனங்கள் மீதான இறக்குமதித் தடை விலக்கம் எனக் கல்வி மேம்பாட்டுக்காகவும், தொழில் துறை சார்ந்த வளர்ச்சிக்காகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ராஜீவின் பங்களிப்பு அளப்பரியது. இதற்கு நிகரான அக்கறை தொழிநுட்ப வளர்ச்சியிலும் அவருக்கு இருந்தது. கிராம ஊராட்சிகளுக்கு அதிகாரமளிக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டமும் அவருடைய கனவுதான்.

தடம் புரண்ட தடங்கள்

காஷ்மீர் விவகாரத்தைப் புத்திசாலித்தனமாக எதிர்கொண்ட ராஜீவ், இலங்கைப் பிரச்சினையில் அமைதி காப்புப் படையை அனுப்பி தமிழர்களின் அதிருப்தியைச் சம்பாதித்தார். உலகின் மோசமான தொழிலக விபத்துகளில் ஒன்றான போபால் விஷ வாயுக் கசிவு விபத்தை அவர் கையாண்ட விதமும் மோசமானது. சாதி, மத அரசியலை அணுகுவதிலும் ராஜீவுக்கு ஒரு தெளிவு இருந்ததாகச் சொல்ல முடியாது. பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்காகப் போராட்டக் குரல்கள் மேலெழுந்து வந்த காலத்தில் அதை அவர் அணுகிய விதத்தில் தெளிவின்மை வெளிப்பட்டது. ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள முற்பட்டு, கடைசியில் இந்துத்துவர்களை நயந்துகொள்வதற்காக அயோத்தியில் ராமர் கோயிலைப் பொதுமக்களுக்குத் திறந்துவிடுவதில் முடிந்தது.

ஊழலுக்கு எதிராகவும் லைசென்ஸ் ராஜ்ஜியத்துக்கு எதிராகவும் பேசிய ராஜீவ் காலத்தில்தான் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெடித்தது. இந்த ஊழலோடு சேர்த்துப் பேசப்பட்ட ஏனைய ஊழல்களும் ஆட்சி மீதான அதிருப்தியும் ஒன்றுசேர்ந்தன. மக்கள் இடையே மட்டுமல்லாது, கட்சிக்குள்ளும் அதிருப்தியைச் சந்தித்தார் ராஜீவ். ராஜீவின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய வி.பி.சிங் இந்த அதிருப்தி அலையை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்; அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி பிரதமர் ஆனார்.

தியாகம் பெயர் சொல்லும்

எல்லா விமர்சனங்களையும் தாண்டி ஒன்று இருக்கிறது. தன் தாயின் படுகொலைக்குப் பின்னர் தன்னையும் கொலையாளிகள் வட்டமிடுவார்கள் என்று தெரிந்துமே இந்நாட்டுக்கான பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் ராஜீவ். தன்னுடைய தவறுகளையும் தாண்டி தியாகத்துக்காக அவர் நினைவுகூரப்படுவார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close