[X] Close

பெருங்களத்தூர் டிராபிக்... பெருந்துயரம்டா சாமீ!


perukalathur-traffic

  • வி.ராம்ஜி
  • Posted: 27 May, 2018 10:20 am
  • அ+ அ-

வெள்ளி, சனிகளில் தார்சாலைகளே தெரியாத அளவுக்கு நிரம்பி வழியும் வாகனக் கூட்டங்கள், இப்போது எல்லா நாளும் திருநாளே கணக்காக, நெரிசலில் முழிபிதுங்கிக் கிடக்கின்றன. அதிலும் இந்த பெருங்களத்தூர் டிராபிக்...சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போவதாகப் புலம்புகிறார்கள் பயணிகள்.

கோடைக்காலம் வந்துவிட்டால், சொந்த ஊர், கோயில்குளம், பார்க்கவேண்டிய ஊர், பிடித்த ஊர், மலைவாச ஸ்தலம் என்று ஊருக்குச் செல்வதும் வருவதுமாக இருப்பார்கள் மக்கள். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, வேகமான இந்த உலகில், போட்டியும் பொறாமையும் அதிகரித்துவிட்ட இந்த உலக வாழ்வில், ஏதாவது ரிலாக்ஸ் கிடைக்காதா என்று அலுப்பும்சலிப்புமாக அல்லாடுகிறவர்களுக்கு, இப்படி ரெண்டுநாள் போய்விட்டு வருவதுதான் மிகப்பெரிய எனர்ஜி.

ஆனால் அப்படிப் போவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது என்பதுதான் வேதனை. சாதாரண நாட்களில், ஓரளவு வாகன ஆதிக்கம், சாலையை ஆக்கிரமிக்கும். ஆனால் இந்தக் கோடையில், தினமும் வாகன ஆக்கிரமிப்புதான்.

‘எவ்ளோ வண்டி வாகனம் போனா என்ன. அதெல்லாம் போயிக்கிட்டேதான் இருக்கப்போவுது. பெருங்களத்தூர்ல பஸ்ஸெல்லாம் நிக்கிது பாருங்க. அதனாலதான் இவ்ளோ டிராபிக்கே... அதை ஒரு கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்தாத்தான், டிராபிக் இல்லாம இருக்கும்’’ என்கிறார்கள் பயணிகள்.

அதுவும் சரிதான்.

பெருங்களத்தூரில் ஒருபகுதி, தாம்பரத்தில் இருந்தோ, கோயம்பேட்டில் இருந்தோ வருகிற பேருந்துகள் நின்று செல்லும் பாதையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து உள்ள பகுதி, தாம்பரத்தில் இருந்தோ கோயம்பேடு பகுதியில் இருந்தோ வருகிற பேருந்துகள், கார்கள், வேன்கள், லாரிகள், டூவிலர்கள் என செல்வதற்காகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே என்ன பிரச்சினை என்றால்... அந்த இரண்டாவது பகுதியில், ஆம்னி பஸ்கள் வரிசைகட்டி நிற்கின்றன. போதாக்குறைக்கு, நண்பர்களை, உறவினர்களை காரில் ஏற்றிவந்துவிடுபவர்களும் அங்கேதான் இறக்கிவிடுகின்றனர். பெருங்களத்தூரில் பஸ் பிடிக்க வீட்டில் இருந்து ஆட்டோவோ, கால் டாக்ஸியோ பிடித்து வருபவர்களையும் அங்குதான் இறக்கிவிடுகின்றனர். போதாக்குறைக்கு வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி, கல்பாக்கம் என்று செல்லும் பஸ்களும் அங்கே நிறுத்தப்படுகின்றன. அதுமட்டுமா? ஷேர் ஆட்டோக்கள் அவர்கள் இஷ்டத்துக்குப் புகுந்து நிறுத்தி ஆட்கள் ஏற்றும் இடமும் அதுதான். யாராவது சாலையோரம் நின்றுகொண்டு, தலையை சொரிவதற்கு கை தூக்கினாலோ, கை வலிக்கிறதே என்று கொஞ்சம் வான் நோக்கி கைதூக்கி ஒருசுழற்று சுழற்றினாலோ, தன்னுடைய ஃபுல் ஹேண்ட் சட்டையை கொஞ்சம் கைநீட்டி, சரிசெய்துகொண்டாலோ... சரட்டென்று நம்மைத்தான் கூப்பிடுகிறார் போல என்று ஷேர் ஆட்டோ அங்கே அனிச்சையாக பிரேக் போட்டு ஓரங்கட்டுவதெல்லாம் சர்வசாதாரணம்.

’’முன்னே, பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் பகுதில மட்டும்தான் பஸ் நிக்கும். ஆனா இப்ப பஸ் ஸ்டாண்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இருக்கிற சிக்னல்லேருந்து ஆரம்பிச்சு,அடுத்த சிக்னலையும் கடந்து, ஸ்ரீராம் கம்பெனி ஐடிகம்பெனின்னு இருக்கற அந்த ஏரியாவுலயும் வரிசையா ஆம்னி பஸ்ஸுங்க நிக்கிது.

ஆயிரம் ரூபா, ரெண்டாயிரம் ரூபா டிக்கெட்டுன்னு புக் பண்ணி, அந்த இருட்டுல, மூத்திர நாத்தத்துல குடும்ப சகிதமா நிக்கணும். கோயம்பேடுல பஸ் எடுத்து ரெண்டரை மணி நேரம் கழிச்சுத்தான் பெருங்களத்தூர் வரும். அதுவரைக்கும் உக்கார இடம் கிடையாது. பாத்ரூம் போகணும்னா எந்த வசதியும் கிடையாது. கர்ப்பிணிங்க, லேடீஸ், வயசானவங்க, புழுதி பறக்கற அந்த ரோட்ல நின்னு மூர்ச்சையாகவேண்டியதுதான்’ என்று புலம்புகிறார்கள் பலரும்.

’ஒரு ஆம்னி பஸ்ஸுக்கு கொடுக்கற சுதந்திரத்தையும் வசதிகளையும், மக்களுக்குக் கொடுக்கறதே இல்லை’ என்று வேதனையுடன் சொல்கிறார்கள் எல்லோருமே!

கோயம்பேடில் இருந்து கிளம்பும் பேருந்துகளும் தாம்பரம் வழியே வருகிற பேருந்துகளும் பெருங்களத்தூரே வராமல், வண்டலூரை அடுத்து உள்ள மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் முறையை இந்தக் கோடையில் பின்பற்ற அரசு தவறிவிட்டது என்று சொல்லி அங்கலாய்க்கிறார்கள் பயணிகள்.

சென்னைக்குள் வேலை, சென்னைக்கு வெளியே வீடு என்றிருப்பவர்களின் நிலை, அதுவொரு வகை பரிதாபம். வீட்டில் இருந்து டூவீலரில், பஸ்சில், காரில் கிளம்பும் போதும், வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போதும். ‘கடவுளே... பெருங்களத்தூர்ல டிராபிக் இருக்கக்கூடாது’ என்று தங்கள் குலசாமிகளிடம் வேண்டிக்கொண்டும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கிறேன் என்றும் கூட பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்.

’அட... என்னடா இது. பெருங்களத்தூரை அப்படீங்கறதுக்குள்ளே தாண்டிட்டோமே. இன்னிக்கி மழை வரப்போவுது’ என்று பெருங்களத்தூர் டிராபிக்கைக் கொண்டே, வானிலை அறிக்கை வாசித்து பெருமூச்சுவிட்டுக்கொள்ளும் நிலையும் டிராபிக்கால், மூச்சே விடமுடியாத நிலையும்... பெருங்களத்தூர் பகுதியின் சாபக்கேடு போல!

இதில் இன்னொரு விஷயம்... தாம்பரம் தாண்டி குடியிருப்பவர்கள் திங்கட்கிழமை காலை, வேலைக்குக் கிளம்பும் வழக்கமான நேரத்தைவிட ஒருமணி நேரம் முன்னதாகவே கிளம்புவார்கள். அப்படிக் கிளம்பினால்தான், பெருங்களத்தூர் டிராபிக்கைக் கடந்து ஒருவழியாய் தப்பித்து, வழக்கமான நேரத்துக்கு வீட்டுக்கு வருவார்கள்.  

பெருங்களத்தூரா... பெருந்துயரத்தூரா? இந்த டிராபிக் கொடுமை தாங்கலடா சாமீ!

 

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close