[X] Close

எண்ணித் துணிக!: லட்சிய கனவு நனவாக...


  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:57 am
  • அ+ அ-

-சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

தொழில் துவங்குபவர்கள் குழந்தையை போல் தூங்குவார்கள் என்பார்கள். அப்படியா என்று அவசரப்பட்டு ஆச்சரியப்படாதீர்கள். இரண்டு மணிக்கு ஒரு முறை எழுந்து அழுவார்கள் என்பதைத்தான் அப்படி கூறுகிறார்கள்.

தெளிவான குழப்பம், தெளிவில்லாத பாதை, நிச்சய டென்ஷன், நிச்சயமில்லாத வெற்றி என்று தெரிந்தும் கண்ணில் கனவோடு உறக்கமில்லாமல், உள்ளத்தில் உணர்வோடு உணவில்லாமல் இஷ்டப்பட்டு கஷ்டப்பட ஒரு பெயர் உண்டு. அதன் பெயர் பிசினஸ் ஸ்டார்ட் அப்!

வெளியிலிருந்து பார்க்கும் போது பிரகாசமாய் தெரிந்தாலும் புது தொழிலை ஸ்டார்ட் செய்தவர்களுக்குத்தான் தெரியும், அதன் உள்ளிருக்கும் விவகாரமும் வில்லங்கமும், இருட்டும் இடர்ப்பாடுகளும்.

அதனாலேயே பல ஸ்டார்ட் அப் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் வந்து நகர முடியாமல் நிற்க மற்றவை முக்கி முனகி முன்னேற முடியாமல் மல்லுகட்டி எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று தவிக்கின்றன. இத்தனை இருந்தும், முட்டி மோதி பிசினசில் முன்னேறி வெற்றி பெற்றவர்களின் கதைகள் நம்மை வசீகரிக்கவே செய்கிறது.

கடலூரில் பிறந்து கடல் தாண்டி கலகல வென்று கலக்கும் ‘கெவின்கேர்’ கம்பெனி கண்ணைக் கவர்கிறது. ஓரமாய் பிறந்து நாடெங்கும் ஓஹோவென்று ஓடும் ‘ஓலா’ சக்சஸ் ஒளிர்கிறது. பிரசவம் வலிதான்.

ஆனால் வலியின் விளிம்பில் ஜனிக்கும் மழலையின் அழுகை `ஆல் இஸ் வர்த் இட்' என்பதுபோல் பிசினஸ் பேஜார் என்றாலும் அதில் மூச்சுமுட்ட மூழ்கி முத்தெடுப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது!ஒரு நாடு முன்னேற அஸ்திவாரம் ஸ்டார்ட் அப்ஸ்.

அமெரிக்காவின் வளர்ச்சியை, வளமையை கண்டு பொறாமைப்படுகிறோம். சமயத்தில் திட்டுகிறோம். ஆனால் அமெரிக்க ஸ்டார்ட் அப் கலாச்சாரம் நமக் கெல்லாம் ஒரு பாடம். ஸ்டார்ட் அப்ஸ்க்கு அள வெடுத்து ஆர்டர் செய்த நாடு அது. அந்த நாட்டில் தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு ஸ்டார்ட் அப்பில் தான் விழவேண்டும்.

அமெரிக்கா போல் ஆகிறோமோ இல்லையோ அதன் வளமையை நோக்கி பயணிக்க விருப்பமிருந்தால் அதற்கு வழி ஸ்டார்ட் அப்ஸ்! நம் நாட்டில் வருடத்திற்கு ஒரு கோடி வேலை வாய்ப் புக்கள் உருவாக்கவேண்டுமாம். என்ன செய்வது? அரசு வேலை இல்லையா என்று கேட்காதீர்கள்.

தேவைக்கதிகமாக ஆட்கள் எடுத்துதான் பல அரசாங்க அலுவலகங்கள் நகர முடியாமல் நொண்டுகின்றன. அவர்களும் ஷட்டரை மூடி எஸ்கேப் ஆகாமல் ஆளே இல்லாத கடையில் யாருக்கோ டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய கம்பெனிகள் ஆள் எடுக்காதா என்று கேட்காதீர்கள்.

ரோபோடிக்ஸ், ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்று இருக்கும் ஆட்களை குறைக்கும் வழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் பத்து மில்லியன் பணிகள் பிறக்க என்னதான் வழி?சாட்சாத் ஸ்டார்ட் அப்ஸ். சின்ன சைஸில் டைலர்கடை, அதை விட சின்ன ரேஞ்சில் பீடா கடை திறப்பதல்ல இது. அவையும் தொழில்தான்.

 இருந்துவிட்டு போகட்டும். ஸ்டார்ட் அப் பெரியது. செய்யும் தொழிலில் அல்ல. செய்பவர் காணும் கனவில்! ஸ்டார்ட் அப் என்று ஒரு புதிய தொழிலை அழைப்பதற்கு முக்கிய தேவை அதன் வளரும் திறன். வளர்ச்சியின் மீது வைக்கப்படும் அபரிமிதமான ஆசை தான் சிறிய தொழிலுக்கும் ஸ்டார்ட் அப்பிற்கும் உள்ள வித்தியாசம்.

தெருவோரம் சிறிய சைஸில் கசாப்பு கடை துவக்கி காலமெல்லாம் அதையே கட்டிக்கொண்டு அங்கேயே கறியை வெட்டிக் கொண்டு வாழ்வதல்ல ஸ்டார்ட் அப். கடன் உடன் வாங்கி, ஃப்ரீஸர், தேர்ந்த தொழில்நுட்பம் மூலம் ஊரெங்கும் ஏசி வசதியுடன் கடை திறந்து அதுவும் பத்தாமல் வெப்ஸைட், ஆப்ஸ், ஃபோன் மூலம் மீனும் மாமிசமும் ஆர்டர் செய்தால் தொன்னூறு நிமிடங்களில் ஐஸ் பேக்கில் ஆர்டர் செய்த ஐட்டத்தை ஃப்ரெஷ்ஷாக ஹோம் டெலிவரி செய்து சில நூறு பேருக்கு வேலை தந்து சென்னையின் லீடிங் ப்ராண்ட் ஆகியிருக்கும் ‘டெண்டர் கட்ஸ்’ போன்ற கம்பெனிக்குப் பெயர் தான் ஸ்டார்ட் அப்ஸ்!

உங்களுக்கும் நீங்கள் யாராக ஆசைப்பட்டீர்கள் என்பதற்கும் உள்ள வித்தியாசம் நீங்கள் வாழ்க்கையில் சாதித்தது என்பார்கள். ஸ்டார்ட் அப் கஷ்டம் தான். டென்ஷன் தான். அதனால் என்ன. காதல் வாழ்க்கை கஷ்டம் தான்.

கிரிக்கெட் மாட்ச் டென்ஷன் தான். இரண்டும் இல்லாத வாழ்க்கை நமக்குப் பிடிப்பதும் இல்லை. அப்படி வாழ்வதில் ஒரு பிடிப்பும் இருப்பதில்லை.

நம் இறுதி நாட்களில் நாம் வாழ்ந்த வாழ்க்கை நம் கண்முன் ஒரு படம்போல் விரியுமாம். அப்படத்தை ரசித்துப் பார்க்கும்படி செய்ய சில வழிகள் உண்டு. அதில் ஒன்று உலகம் என்றும் நம் பெயர் சொல்லும் ஒரு ஸ்டார்ட் அப்பை துவக்குவது!

ஒரு நாடு முன்னேற அஸ்திவாரம் ஸ்டார்ட் அப்ஸ். அமெரிக்காவின் வளர்ச்சியை, வளமையை கண்டு பொறாமைப்படுகிறோம்.

சமயத்தில் திட்டுகிறோம். ஆனால் அமெரிக்க ஸ்டார்ட் அப் கலாச்சாரம் நமக்கெல்லாம் ஒரு பாடம். ஸ்டார்ட் அப்ஸ்க்கு அளவெடுத்து ஆர்டர் செய்த நாடு அது.

 

satheeshkrishnamurthy@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close