[X] Close

யு டர்ன் 19: ஐடிசி நிறுவனம் உதாரணக் குடிமகன்


19

  • kamadenu
  • Posted: 13 May, 2019 11:24 am
  • அ+ அ-

-எஸ்.எல்.வி.மூர்த்தி

தேவேஷ்வருக்குத் தலை சுற்றியது. திரும்பிய பக்கமெல்லாம் பூதாகரப் பிரச்சினைகள். ஒன்றுக்குத் தீர்வுகண்டு அடுத்ததைக் கவனிக்கலாம் என்பது முடியாது. ஒரே நேரத்தில் தாண்ட வேண்டிய அத்தனை நெருப்பாறுகள். பங்குதாரர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகங்கள், பொதுமக்கள், அரசாங்கம் எல்லோருமே கம்பெனியைக் கிரிமினலாகப் பார்த்தார்கள்.

பிசினஸுக்கு, அதிலும் குறிப்பாக ஃபைனான்ஸ் கம்பெனிகளுக்கு மக்கள் நம்பிக்கைதான் முக்கிய சொத்து. இது தகர்ந்ததால், ஐடிசி கிளாசிக் ஃபைனான்ஸ் கம்பெனி மரண அடி வாங்கியது. நிரந்தர வைப்பு நிதியில் (Fixed Deposit) பத்து லட்சம் பேர் 750 கோடி ரூபாய் போட்டிருந்தார்கள். ஒரே வருடம்.

ஆறு லட்சம் பேர், 550 கோடி ரூபாய் எனக் கரைந்தது. சர்வதேச நிதி கார்ப்பரேஷன் (International Finance Corporation) என்னும் பன்னாட்டு நிதி நிறுவனம், சுமார் 189 கோடி ரூபாய் கடன் தருவதாக உறுதியளித்திருந்தது. தன் கடனுக்குப் பாதுகாப்பில்லை என்று பின்வாங்கியது.

ஜூன் 1997. சவப்பெட்டியின் கடைசி ஆணி. கிளாசிக் ஃபைனான்ஸ் கம்பெனி நஷ்டம் 285 கோடி ரூபாய். பைனான்ஸ் கம்பெனியின் உயிர்மூச்சு பணச் சுழற்சி. வரத்து நின்றது. செலவுகள் தொடர்ந்தன. இதுதான் சான்ஸ் என்று கடன் வாங்கியவர்கள் வட்டி கட்டுவதையே நிறுத்தினார்கள்.

வாராக்கடன்கள் 350 கோடியைத் தொட்டன. எந்த நிமிடமும் கம்பெனி திவாலாகும் அபாயம், ஐடிசி- யின் மானமே கப்பலேறிவிடும். எப்படியாவது கம்பெனியைக் காப்பாற்றவேண்டும். பல ஜப்பானிய, அமெரிக்க, இந்திய நிதி நிறுவனங்களைத் தொடர்பு கொண்டார்.

கூட்டுச் சேருங்கள் அல்லது விலைக்கு வாங்குங்கள் என்னும் வேண்டுகோளோடு. யாருமே தயாராக இல்லை.தேவேஷ்வரின் தொடர் முயற்சிகளால், 1998 –ல் ஒரு கதவு திறந்தது, ஐசிசிஐ நிறுவனம் (Industrial Credit and Investment Corpoarion. ஐசிஐசிஐ வங்கியின் தாய் நிறுவனம்,) ஐடிசி கிளாசிக் ஃபைனான்ஸை விலைக்கு வாங்கிக் கொண்டது.

தேவேஷ்வரின் கழுத்தில் தொங்கிய சுமை இறங்கியது. அதுசரி, நஷ்டத்தில் ஓடும், 350 கோடி வாராக்கடன் உள்ள கம்பெனியை ஏன் ஐசிஐசிஐ வாங்கவேண்டும்? நாடளாவிய 26 கிளைகள், 700 ஏஜென்ட்கள், 6 லட்சம் வைப்பு நிதிக்காரர்கள் என பலமான கட்டமைப்பு ஆகிய பலங்களுக்காகத்தான், ஐடிசி கிளாசிக் ஃபைனான்ஸுக்கு வந்த இந்தச் சிக்கல் நாளை பிற கம்பெனிகளுக்கும் வரலாம்.

ஆகவே, அடிப்படைக் காரணங்களை தேவேஷ்வர் ஆராய்ந்தார். கலால் வரி சமாச்சாரம். 1979 – 1983 காலகட்டத்தில், சிகரெட் பாக்கெட்களில் அச்சிட்டிருந்த விலைகளைவிட அதிக விலைகளுக்குக் கடைக்காரர்கள் விற்றதாகவும், இதற்கு ஐடிசி உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு. தேவேஷ்வர் அரசு ஆணைக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.

அதுவரை, சிகரெட் விற்பனை பாதிக்கப்படாமலிருக்க, அரசு கேட்ட 803 கோடியில் 305 கோடி கட்டினார். வழக்கு ஜெயித்தால், இதைத் திருப்பித்தரவேண்டும் என்னும் கோரிக்கை.

(இந்த வழக்குகொல்கத்தா கோர்ட், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் எனப் பதினேழு வருடங்கள் நீடித்தது. 2003 -ல், உச்சநீதிமன்றம் ஐடிசி-க்கு ஆதரவாக வழக்கைத் தள்ளுபடி செய்தது. கம்பெனிக்கு 305 கோடி திரும்பக் கிடைத்தது.)

அந்நியச் செலாவணி மோசடி – விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக ஐடிசி, சிங்கப்பூரில், குளோபல் ஹோல்டிங் பிரைவேட் லிமிட்டெட் (ITC Global Holding Private Limited) உருவாக்கினார்கள். அமெரிக்காவிலிருந்த சிட்டா

லியாஸ் (Chitalias) என்னும் கம்பெனி மூலமாக அத்தனை ஏற்றுமதிகளும் நடத்தும் ஏற்பாடு. இதன் உரிமையாளர்களான சுரேஷ் சிட்டாலியா, தேவங் சிட்டாலியா இருவரும் ஐடிசி, குளோபல் இயக்குநர்கள்.

ஐடிசி – க்கும் சிட்டாலியா சகோதரர்களுக்கு மிடையே பிரச்சினை வந்தது. ஐடிசி குளோபல், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆகவே, சிட்டாலியா சகோதரர்கள் ஐடிசி மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். சிட்டாலியா சகோதரர்கள் அமெரிக்கக் குடிமக்கள்.

ஆகவே, அவர்கள் தங்களுக்குப் பணபாக்கி என்று ஐடிசி அமெரிக்காவில் வழக்குப் போட்டார்கள். ஐடிசி சிட்டாலியா சகோதரர்களுக்கு 8.5 மில்லியன் டாலர்கள் (அன்றைய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய்) கொடுத்ததாக வழக்கின் ஆவணங்கள் கூறின.

பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவது இந்திய சட்டப்படி குற்றம். இந்த அடிப்படையில்தான், அமலாக்கத் துறையின் அதிரடிச் சோதனைகளும், கைதுகளும். அமெரிக்க, சிங்கப்பூர் கோர்ட்கள் ஐடிசி –க்கு ஆதரவாகத் தீர்ப்புத் தந்தன.

இந்த அடிப்படையில்தான், இந்திய வழக்குபதிவு செய்யப்பட்டதால், இந்திய உச்சநீதி மன்றமும், ஐ.டி.சி–க்கு நிரபராதி முத்திரை குத்தியது.

ஐடிசி-யின் நெறிமுறைகளில் பொதுமக்களுக்கு முழு நம்பிக்கை வரவேண்டும், சந்தேகத்தின் நிழலே கம்பெனிமேல் விழக்கூடாது என்று தேவேஷ்வர் விரும்பினார். லட்சியக் கார்ப்பரேட் குடிமகனாக ஐடிசியை உருவாக்கும் திட்டம்.

நிர்வாகத் திறமையும், நேர்மையும் கொண்ட ராம் தர்னேஜா, வீரராகவன் ஆகியோரை இயக்குநர்களாக நியமித்தார். ராம் தர்னேஜா, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிடும் பென்னட் கோல்மேன் (Bennett Coleman) கம்பெனி இயக்குநர்.

வீரராகவன் தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. பின் கண்காணிப்புத் துறை (Vigilance) கமிஷனராக இருந்தார்.

இவரை கம்பெனியில் பிரதானக் கண்காணிப்பு அதிகாரியாகத் தேவேஷ்வர் நியமித்தார். சட்டமீறல் தொடர்பான எந்தப் பிரச்சினையையும் விசாரிக்கும் சுதந்திரம் இவருக்கு.

இயக்குநர் குழுவுக்கு மட்டுமே இவர் பதில்சொல்லக் கடமைப்பட்டவர். இதனால், தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகள் அத்தனையும் முளையிலேயே கிள்ளப்பட்டன. கார்ப்பரேட்களின் சமுதாயப் பொறுப்பு (Corporate Social Responsibility) என அரசாங்கம் பல விதிமுறைகளை வகுத்திருக்கிறது.

செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, மாசுக் கட்டுப்பாடு, கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை மாற்றிப் புதியன வாங்கும்போது, பழையனவற்றைக் கழிவு (e-waste) நீக்கம் செய்யும் முறை போன்ற இந்தப் பொறுப்புகளைக் கனகச்சிதமாக ஐடிசி செயல்படுத்தியது. தேவேஷ்வரின் இலக்குகள் இவற்றையும் தாண்டியவை.

அவற்றுள் முக்கியமானது இ-செளபால் (e-choupal) என்னும் தொலைநோக்குத் திட்டம். ``செளபால்” என்பது இந்தி வார்த்தை. “கிராமத்தின் சந்திப்பு மையம்” என்று அர்த்தம். எலெக்ட்ரானிக் முறைச் சந்திப்பு என்பதால், electronic என்பதன் e வந்தது.

2001 – ஆம் ஆண்டு. ஐடிசி ஆண்டுக்கு 700 கோடி ரூபாய்க்கும் அதிகமான விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்கள். கிராமப்புறங்களில் கொள்முதல் செய்தார்கள். ஆனால், விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கமுடியாமல், நந்திகளாக இடைத்தரகர்கள்.

இவர்கள் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்தார்கள். வட்டி விகிதம் மிக அதிகம். இதனால், விவசாயிகள் எப்போதும் கடனில், தங்கள் விளைபொருட்களை தரகர்கள் கேட்கும் அடிமாட்டு விலைக்குத் தரும் கட்டாயம்.

ஐடிசியின் வளர்ச்சிக்கு விவசாயிகளின் நலன் அடிப்படையானது என்பதைத் தேவேஷ்வர் உணர்ந்தார். தகவல் தொழில் நுட்பம் (Information Technology) பிசினஸ்களில் பரவலாகப் பயன்பட்டது. கிராமப்புற முன்னேற்றத்துக்கும் இதை ஆயுதமாகப் பயன்படுத்தினால்…

2000–ம் ஆண்டு. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிஸ்ரோட் (Misrod) என்னும் கிராமத்தில் சிவக்குமார் சோதனை ஓட்டம் தொடங்கியது. கிராமத் தலைவரின் வீட்டில் ஒரு கம்ப்யூட்டர், பிரின்ட்டர், இணைய இணைப்பு. இந்தக் கிராமங்களில் மின்வசதிகள் சீராக இல்லை. ஆகவே, இவை அத்தனையும் பாட்டரிகளால் இயங்கும் முறையில்.

மத்தியப் பிரதேச விவசாயப் பல்கலைக் கழகம், வானிலை மையம், அரசு வேளாண்மைத் துறை, வங்கிகள் ஆகியவற்றோடு இந்த இ செளபாலுக்கு ஐடிசி உறவுப்பாலம் அமைத்தது.

உற்பத்தியைப் பெருக்கும் முறைகள், வெற்றி கண்டோரின் அனுபவங்கள், பருவமழை, அறுவடை, பல்வேறு விவசாயப் பொருட்களின் விலைகள் பற்றிய கணிப்புகள், வங்கிகள் வழங்கும் விவசாயக் கடன்கள், அரசு உதவிகள் என அவர்களுக்குத் தொடர்பான விவரங்களை இந்த ஒத்துழைப்பின் மூலமாக வழங்கியது.

விவரங்கள் விரல்நுனியில் இருந்த விவசாயிகளைத் தரகர்களால் ஏமாற்ற முடியவில்லை. பெரும்பாலானோர் விரைவில் ஐடிசி–க்கே நேரடியாக விற்கத் தொடங்கினார்கள். அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டது.

இந்த வெற்றியால், ஐடிசி, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 100 கிராமங்களில் இ-செளபால் தொடங்கினார்கள். இந்த மையங்கள் பல சமூகநலத் திட்டங்களுக்குத் தொடக்கப்புள்ளி ஆயின.

ஐடிசி, இ-செளபால் மூலமாகக் கிராமப் பெண்களுக்குத் தொழிற்பயிற்சி தந்தார்கள். அவர்களுக்குத் தொழில் முனைவர்களாகும் வாய்ப்புக் கதவுகளைத் திறந்தார்கள். சிறுவர், சிறுமியர்க்கு ஆரம்பக் கல்வி அளித்தார்கள். 40,000 கிராமங்களுக்கு இ -செளபால் இணைப்பு வளையம் சமுதாயப் புரட்சியாக விரிந்தது.

இன்று, ஆந்திரா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களின் 35,000 கிராமங்களில் இ- செளபால் மையங்கள் 40 லட்சத்துக்கும் அதிகமான கிராமவாசிகளுக்குத் துணை நிற்கின்றன.

ஐடிசி நேர்மையான நிறுவனம், நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் என்னும் நம்பிக்கையை மக்கள் மனங்களில் இ - செளபால் மீட்டுத் தந்தது.

இதே சமயம், சிகரெட் விற்பனைமீது அரசின் கட்டுப்பாடுகள் இறுகிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும், வரி அதிகமானது. ஊடகங்களில் சிகரெட் விளம்பரங்களைத் தடை செய்தது.புகை பிடித்தல் உயிரைக் கொல்லும், புற்று நோயை உண்டாக்கும் என்னும் எச்சரிக்கைகள் சிகரெட் பாக்கெட்களில் கட்டாயமாக்கப்பட்டன.

சிகரெட் விற்பனை இனி நாளுக்குநாள் சரியப்போகிறது. அது தரைமட்டமாகும் முன், நிலையான வேறு பிசினஸ் தேட வேண்டும். வழி கண்டுபிடிக்க வேண்டும். தேவேஷ்வரின் மனம் நிறையக் கேள்விகள்.

(புதிய பாதை போடுவோம்!)

slvmoorthy@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close