[X] Close

இந்தியாவை அறிவோம்: கேரளம்


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:26 am
  • அ+ அ-

மாநில வரலாறு

தமிழ்நாட்டை ஒட்டி அமைந்துள்ள மாநிலம் என்பதாலும், நமக்கும் அவர்களுக்கும் பொது வரலாறு ஒன்று இருக்கிறது என்பதாலும் கேரளத்தைப் பற்றி நாம் அதிகமாக அறிவோம். சேரர்கள்தான் கேரளத்தை முதன்முதலில் ஆண்ட பேரரசர்கள். ஆய் பேரரசு போன்ற அரசுகளும் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியம் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் பொதுவானது என்பது எப்படிப்பட்ட கலாச்சாரப் பிணைப்பை நாம் கேரளத்துடன் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்தும். கேரளத்தில் உள்ள வாசனைத் திரவியங்களுக்காகத்தான் போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்குள் 15-ம் நூற்றாண்டின் இறுதியில் நுழைந்தார்கள். எனினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே கேரளம் உலகத்தோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் கேரளமானது திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி ராஜ்ஜியமாகவும் இருந்தது. மலபார் பகுதி அப்போதைய மதராஸ் மாகாணத்துடன் இணைந்திருந்தது. மாநில மறுசீரமைப்புச் சட்டம்-1956-ன் கீழ் எல்லாம் இணைக்கப்பட்டு கேரள மாநிலம் பிறந்தது.

புவியியல் அமைப்பு

தென்னிந்தியாவில் உள்ள கேரளம், நாட்டின் 22-வது பெரிய மாநிலம். பரப்பளவு 38,863 சதுர கிமீ. (தமிழகத்தின் பரப்பளவு 1.30 லட்சம் சதுர கிமீ). 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி கேரளத்தின் மக்கள்தொகை 3.34 கோடி. மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 860. (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிமீக்கு 555). இந்துக்கள் 54.73%, முஸ்லிம்கள் 26.56%, கிறிஸ்தவர்கள் 18.38%. உட்பிரிவுகளில் பட்டியலின சமூகத்தினரின் எண்ணிக்கை 9.8%, ஈழவர்கள் 20.9%, நாயர்கள் 12.1%, பிராமணர்கள் 2%.

சமூகங்கள்

கேரளத்தில் நம்பூதிரிகளின் செல்வாக்கும் நாயர்களின் செல்வாக்கும் கலாச்சாரம், அரசியல் போன்ற தளங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அரசியலைப் பொறுத்தவரை சாதிகளைப் போலவே மதங்களும் தேர்தல் கணக்குகளைத் தீர்மானிக்கின்றன. மற்ற மாநிலங்களை விட அதிக அளவில் சிறுபான்மையினர் இங்கு காணப்படுவதால் கேரள அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிபிஐ(எம்), காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சிறுபான்மையினர்களை உள்ளடக்கியே செயல்படுகின்றன.

ஆறுகள்

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் இந்தியாவிலேயே கேரளத்தில்தான் அதிகம். மொத்தம் 41 நதிகள் இவ்விதம் பாய்கின்றன. மூன்று ஆறுகள் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. பெரியாறு, பாரதப்புழை, பம்பா நதி, சாளியாறு, சாலக்குடியாறு, கபினி ஆறு, கல்லாட நதி, மணிமாலா ஆறு போன்றவை கேரளத்தில் பாயும் முக்கியமான நதிகளாகும்.

kerala.JPG 

காடுகள்

கேரளத்தில் காடுகளின் பரப்பளவு 11,309 சதுர கிமீ. இது அம்மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பரப்பில் 29.1%. இந்தக் காடுகளில் காப்புக்காடுகள் 9,107.2 சதுர கிமீ அளவுக்குக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் நடுவே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கேரளத்துக்கு இருக்கும் ‘கடவுளின் தேசம்’ என்ற பெயருக்கு வலுவூட்டுகின்றன. உலகின் 34 உயிர்ப்பன்மை கேந்திரங்களுள் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்று. இமய மலையை விட மேற்குத் தொடர்ச்சி மலைகள் காலத்தால் முந்தியவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன, நன்னீர் மீன்கள், பூச்சிகள் என்று 5,100-க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயிர்வாழ்கின்றன.

நீராதாரம்

கேரளத்தில் மொத்தமாகச் சேர்த்து 80 நீர்த்தேக்கங்கள், அணைகள் உள்ளன. இவற்றுள் மிகவும் பழமையானது முல்லை பெரியாறு அணை. இது பெரியாறு நதிக்குக் குறுக்காக 1895-ல் பென்னி குயிக் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இந்த அணையில் நீர் தேக்கிவைக்கப்படும் உயரத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடும், அப்படி உயர்த்தினால் அணை உடைந்துவிடும் என்று கேரளமும் கூறிவந்த நிலையில், ‘அணை பாதுகாப்பாக இருக்கிறது; உயர்த்தினால் உடைவதற்கு வாய்ப்பில்லை’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

கனிம வளம்

கேரளத்தில் இரும்பு, பாக்ஸைட், கிராஃபைட், தங்கம், சீனக் களிமண், சுடுகளிமண், சிலிகா மணல், பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக் கல், மாக்னஸைட் போன்றவையும், கனரகத் தாது மணல்களான இல்மனைட், ரூட்டைல், ஸிர்கான், மோனாஸாஇட், சில்லிமனைட் போன்றவையும் கிடைக்கின்றன. தாது மணலும் சீனக் களிமண்ணும் இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த கனிம உற்பத்தியில் 90% பங்களிப்பு செய்கின்றன.

பொருளாதாரம்

கேரளத்தின் ஜிடிபி ரூ.7.73 லட்சம் கோடி. 2014–2015 காலகட்டத்தில் இந்த மாநிலத்தில் தனிநபர் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு ரூ.1,63,000. தண்ணீர் வளம் மிக்க மாநிலம் என்பதால் விவசாயமும் அது சார்ந்தவையுமே இங்கு பிரதானத் தொழில்கள். இதில், தென்னையின் பங்கும் குறிப்பிடத்தக்கது. கேரளம் 590 கிமீ கடற்கரையைக் கொண்டது. இதனுடன் 4 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு நீர்நிலைகளைக் கொண்டது. சுமார் 2.2 லட்சம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் உள்ளதால் இந்தத் தொழில் கேரளப் பொருளாதாரத்துக்கு முக்கியமான பங்களிப்பு செய்கிறது. கேரளத்திலிருந்து சென்று வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்கள் அனுப்பும் பணம் இந்த மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்கிறது.

2015-ன்படி வளைகுடா நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கேரளத்தவர்கள் அனுப்பிய தொகை சுமார் ஒரு லட்சம் கோடி. இது தேசிய அளவில் ஏழில் ஒரு பங்கு என்பதை வைத்துப் பார்க்கும்போது வளைகுடா பொருளாதாரம் கேரளத்துக்கு எவ்வளவு முக்கியமானது என்பது புரியும்.

அரசியல் சூழல்

சுதந்திரத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸின் ஆதிக்கமே சில தசாப்தங்களாக நீடித்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத ஒரு அரசாங்கத்தை 1957-ல் அமைத்து சிபிஐ ஆட்சியமைத்தது. ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதல்வரானார். உலகிலேயே தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் அவர். அன்றிலிருந்து கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளும் மாறி மாறி கேரளத்தை ஆண்டுவருகின்றன. கேரளத்தில் துளிர்க்கும் கனவுடன் சமீப காலமாக பிரம்ம பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறது பாஜக.

முக்கியப் பிரச்சினைகள்

இந்தியாவிலேயே அதிக அளவில் கல்வியறிவு (94.65%) பெற்ற மாநிலமாகக் கேரளம் இருந்தாலும் தொழில்துறை வாய்ப்புகள் இங்கு குறைவு என்பதால் பெரும்பாலானோரும் வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் நிலைதான். பொதுத் துறை நிறுவனங்களும் பெருநிறுவனங்களும் ஏனைய மாநிலங்களில் உள்ளதுபோல் கேரளத்தில் இல்லை என்பது ஒரு முக்கியக் காரணம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close