[X] Close

மூன்றாவது அணி எனும் அபத்தச் சடங்கு!


  • kamadenu
  • Posted: 13 May, 2019 08:22 am
  • அ+ அ-

-ராணிப்பேட்டை ரங்கன்

காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் மூன்றாவது அணிக்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், இந்தியாவில் மக்களவையில் ஆட்சியமைப்பதற்கான சடங்குகள் முழுமை பெறாது; இந்தத் தேர்தல் மட்டும் விதிவிலக்கா என்ன?

2019 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஐந்து சுற்றுகள் முடிந்து, அடுத்த இரண்டு சுற்றுகளுக்கு பாஜகவையும் காங்கிரஸையும் கடுமையாகச் சாடிக்கொண்டே, பல மாநிலக் கட்சிகளின் முதல்வர்களும் - முதல்வர் பதவியை இழக்க இருப்பவர்கள், பதவியைப் பிடிக்க நினைப்பவர்களும் சேர்ந்துதான் – ‘மூன்றாவது அணி’ என்ற ஆட்சிப் பிடிப்புப் பாடலைப் பாடத் தொடங்கிவிட்டனர். 1996-ல் அந்தப் பாடல் மட்டும் படு ஹிட் அல்ல, அணியே படு ஹிட்; ஆமாம், மிக விரைவிலேயே பலத்த அடி வாங்கிச் சிதறியது. ஆனாலும், பழைய கானம் காற்றில் மிதக்கிறது.

யாரெல்லாம் போட்டியில் இல்லை?

மே 21 அன்று டெல்லியில் 21 கட்சிகள் கூடி, அடுத்த அரசு தொடர்பாக ஆலோசிக்கவிருப்பதாக (தேதியும் கட்சிகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருப்பது யாரும் திட்டமிடாமல் தானாக அமைந்தது) வெளியாகியிருக்கும் செய்தியில் தொடர்புடைய 21 பேருமே பிரதமர் கனவுடன் இல்லை என்பது மட்டுமே இப்போதைக்கு இந்தியர்களுக்கான ஒரே ஆறுதல்.

இருப்பவர்களிலேயே எல்லோரும் ஏற்கக்கூடிய சமரச வேட்பாளர் நவீன் பட்நாயக். ஆனால், அவரது உடல் நிலையும் மன நிலையும் ஒடிஷாவைவிட்டு அவரை நகரச் செய்யாது என்பதால், தனக்குப் பிரதமர் கனவு இல்லை என்பதை அவர் நாசூக்காகச் சொல்லிவிட்டார். ஆனால், ‘ஒடிஷாவின் நலனில் அக்கறை கொண்டு திட்டங்களை அனுமதிப்பது யாராக இருந்தாலும் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவு’ என்ற அன்னாரின் கூற்று ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது.

பிரதமர் பதவிப் போட்டியில் தான் இல்லை என்று ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடுவும் அறிவித்திருக்கிறார். ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வருவதே சந்தேகம் என்றாகியிருக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற ரகசியம் அவருக்குத்தானே முதலில் தெரிந்திருக்க முடியும்? எப்படியோ தனது அரசியல் செல்வாக்குக்கு ஏற்ற முடிவை அவர் எடுத்திருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.

முன்னாள் பிரதமரான தேவ கவுடாவுக்கு மீண்டும் பிரதமராகும் ஆசையில்லை என்று கூறிவிட முடியாது. ஆனால், மகன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சர் பதவியில் நீடிப்பதே சந்தேகமாக இருக்கும் நிலையில், மகனைத் தக்கவைக்கப் போராடுவாரா அல்லது பிரதமர் பதவிக்காக முயல்வாரா? மேலும், மனிதரை வயோதிகம் வேறு படுத்துகிறது. ஆகையால், அவர் போட்டியில் இல்லை.

தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத் பவாரும் போட்டியில் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் – வயோதிகம்தான் முக்கியமான காரணம், விரும்பினாலும் கிடைக்காது என்பது மற்றொரு காரணம்.

சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் யாதவின் நிலையும் அப்படித்தான். ‘என் அப்பாகூடப் பிரதமர் பதவிக்கு முற்றிலும் தகுதியானவர்தான். ஆனால், அவர் ஆசைப்படவில்லை’ என்று சொல்லியிருக்கிறார் மகன் அகிலேஷ் யாதவ். அது சரி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடனான கூட்டணியின் அடிப்படை பேரங்களில் ஒன்றல்லவா அது? பிரதமர் வாய்ப்பு என்றால், மாயாவதிக்கே முன்னுரிமை!

வரும் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படக்கூடியவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியும் போட்டியில் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல அவரும் ‘முதல்வர்’ பதவியிலேயே கண் முழுக்கக் கொண்டிருக்கிறார். ஆனால், அன்னாரின் கொள்கையும் அபாரமானது. ஜெகனைப் பொருத்தவரை பாஜக ‘எதிரி’ என்றால் காங்கிரஸ் ‘பங்காளி’; ஆக, மத்தியிலே யார் பிரதமரானாலும் ஆதரித்துவிடுவது என்ற தாராள மனதுடன் இருக்கிறார். நேரத்துக்குத் தகுந்தபடி ஆதரவை மாற்றித்தர அவரால் முடியும்.

இடதுசாரிகளும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. ‘ஸ்… அப்பாடா!’ மேலும், ஒரு ‘வரலாற்றுப் பிழை’க்கான வாய்ப்பு அவர்களுக்குக் குறைந்தது. ஆனாலும், கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு சரிவு ஏற்பட்டாலும்கூட அடுத்த அரசு அமைப்பதிலும் பிரதமர் பதவித் தேர்விலும் இடதுசாரிகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். குறைந்தபட்சம் அறிக்கைகளால் வழிகாட்டுவார்கள்!

யாரெல்லாம் போட்டியில் இருக்கிறார்கள்?

சரி, இப்படியே யாரெல்லாம் போட்டியில் இல்லை என்று பட்டியல் போட்டுக்கொண்டே செல்வதில் என்ன இருக்கிறது? யாரெல்லாம் முக்கியமாகப் போட்டியில் இருக்கிறார்கள்?

முன் வரிசையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இருக்கிறார். ‘பிரதமர் பதவிக்குரிய தகுதியான தலைவர் நான்தான்’ என்று சொல்லித்தான் பிரச்சாரத்தையே அவர் தொடங்கினார். இங்கே ஒரு சுவாரஸ்யமான கற்பனை! ஒருவேளை பாஜக, காங்கிரஸ் இரண்டும் போதிய இடங்களை வெல்லாமல், உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணி பெருவெற்றியும் பெற்று, பாஜக முந்திக்கொண்டு மாயாவதிக்கு ஆதரவு அளிப்பதாகச் சொன்னால், அப்போது மாயாவதி என்ன செய்வார்?

அடுத்த இடத்தில் இருப்பவர் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா. கிட்டத்தட்ட வங்க முதல்வர் பதவிக்கு, அடுத்த வரிசைத் தலைவர்கள் சிலருக்குப் பயிற்சியே அளிக்கத் தொடங்கிவிட்டார். ஆனால், மாயாவதிக்கு உள்ள இரட்டை வாய்ப்பு மம்தாவுக்குக் கிடையாது. ஏனென்றால், மாயாவதியைப் போல பாஜக – காங்கிரஸ் இரண்டையும் சம இடத்தில் வைத்து மம்தா தாக்கவில்லை; அவருடைய பிரதான எதிரி பாஜகவும் மோடியும். அதேசமயம், காங்கிரஸுக்கும் நிபந்தனையற்ற ஆதரவாளர் என்று மம்தாவைச் சொல்லிவிட முடியாது. அவர்களுக்கும் அப்படித்தான்… சிக்கல்தான்!

இவர்களைக் காட்டிலும் பெரிய திட்டங்களுடன் இருப்பவர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ். கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி என்று சந்திப்புகளையே தொடங்கிவிட்டவர், அடுத்து ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், வங்க முதல்வர் மம்தா என்று வரிசையாக எல்லாத் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். மாநில நிர்வாகத்தை மகன், மகள் அல்லது மருமகனிடம் கொடுத்துவிடுவார் என்று தெலங்கானா மக்களிடம் வெளிப்படையாகவே பேச்சு கேட்கிறது.

கடந்த காலமும் நிகழ்காலமும்

ஒரு மாநிலத்தைத் தாண்டி இன்னொரு மாநிலத்திலேயேகூடப் பெரிய செல்வாக்கு இல்லாத நிலையில், இப்படி ஆளுக்கொரு கனவுடன் வீடு கட்டும் மூன்றாவது அணிக்கு வழக்கமாக அறிவுத்தளத்தில் ஆதரவு கிட்டுவது அரிதாக இருக்கும். ஏனென்றால், கடந்த கால வரலாறு அப்படி!

காங்கிரஸ் ஆதரவில் பிரதமர் பதவியில் அமர்ந்தவர்கள் விருந்து முடிந்து கை ஈரம் காய்வதற்கு முன்னால் கவிழ்க்கப்பட்ட கதைகளை சரண்சிங், சந்திரசேகர், குஜ்ரால்கள் வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ளலாம். காலையில் செய்தித்தாளைத் திறந்தால் எந்தக் கட்சித் தலைவர் யார் வரும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டார், யார் – யாருடன் தேநீர் சாப்பிட்டார்கள் என்றெல்லாம் நாட்டு மக்கள் படித்து அதிலிருந்து அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை ஊகிக்க வேண்டியிருந்த அவல நிலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால், இம்முறை கொஞ்சம் மாறுபட்ட குரல்களையும் கேட்க முடிகிறது. மாநிலக் கட்சிகளின் தலைவர்களே திடுக்கிடும்படியான நிறைய ஆய்வுக் கட்டுரைகளை இணைய ஊடகங்களில் படிக்க முடிகிறது. ‘மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் அமையும் அரசுதான் சமூகநலத் திட்டங்களை அதிகம் முன்னெடுத்தன; சமூக நீதியை வழங்கின; ஜனநாயகத் தன்மையுடன் செயல்பட்டன; மக்களுடைய உரிமைகளைக் காத்தன’ என்றெல்லாம் அரசியல் ஆய்வர்களும் பேராசிரியர்களும் அலசி அலசி கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளனர்.

உண்மைதான். சில நல்ல விஷயங்களும் நடந்திருக்கின்றனதான். ஆனால், மறுபுறம் அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. மேலும், அந்தக் காலகட்டத்தையும் இன்றைய காலகட்டத்தையும் ஒப்பிட முடியுமா? முதலில், மூன்றாவது அணியினருக்கு எந்த விஷயத்திலேனும் ஒரு மாறுபட்ட பார்வை இருக்கிறதா? அப்படி எதையும் தேர்தலுக்கு முன்பு தொடங்கி இப்போது வரை வெளிப்படுத்தியிருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டால் தொல்லைதான்!

உண்மை என்னவென்றால், அதிகாரமே ஒரே நோக்கம் என்றபடியால், மூன்றாம் அணி பல ஆலோசகர்கள், பல எஜமானர்கள், பல வழிகாட்டிகளால் நிறைந்தது. கடந்த காலங்களைப் போல அல்லாது இன்று பாஜக எதிர்ப்பு அல்லது காங்கிரஸ் எதிர்ப்பு என்ற குறைந்தபட்ச திட்டவட்ட அடிப்படைக் கொள்கையைக்கூடக் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. இடதுசாரிகள் கணிசமான இடங்களை வென்றுவந்த கடந்த காலத்தில் அவர்களை மையப்படுத்திப் பேசப்பட்ட மூன்றாம் அணி எனும் கருத்துக்கு அன்று குறைந்தபட்சம் ஒரு மையமேனும் இருந்தது. இன்றைக்கு அந்தக் கருத்து அச்சே இல்லாத ஆரக்கால்களைப் போன்றது. ஆனாலும், இந்தியத் தேர்தலில் இப்படி ஒரு அபத்தச் சடங்குக்கு இன்னும் தேவை இருக்கிறது!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close