[X] Close

என் உடல் என் உரிமை: குழந்தைப் பிறப்பு நமது தேர்வாக இருக்கட்டும்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:31 am
  • அ+ அ-

-எஸ்.சுஜாதா

பெண்ணின் உடல் அவள் விருப்பம் சார்ந்ததாக இன்றுவரை இல்லை. தாம்பத்தியம், குழந்தைப் பிறப்பு, கருக்கலைப்பு, கருத்தடை போன்றவற்றில் பெண்களின் விருப்பம் பெரும்பாலும் பிரதிபலிப்பதில்லை. பெண்ணின் உடலை இன்பம் துய்க்கும் இடமாகவும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரமாகவுமே இந்தச் சமூகம் கருதுகிறது. அவளுடைய உடல் ஆரோக்கியம் குறித்து யாருமே பெரிதாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை.

100 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இருப்பதைவிட மோசமான நிலையே இருந்தது. உலகப் போரின் விளைவால் வேலையின்மை அதிகரித்தது. ஆனால், பெண்களோ வரிசையாகக் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தனர். குழந்தை பிறப்பில் ஏற்படும் சிக்கலில் நிறையப் பெண்கள் உயிரிழந்தனர். மற்றொருபுறம் வறுமையின் காரணமாகக் குழந்தைகளை வளர்க்க இயலாமல் கருக்கலைப்பு செய்துகொள்ள பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அப்போது பல நாடுகளில் கருக்கலைப்பு சட்டப்படி தவறு என்பதால், பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

குழந்தைப் பிறப்பு தொடர்பான பிரச்சினை களாலும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளாலும் பெண்களின் உயிர் பறிபோவ தைக் கண்டு, பெண்களின் ஆரோக்கியம் சார்ந்து சிலர் அக்கறை செலுத்த ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த மேரி ஸ்டோப்ஸ். சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவர் செயலிலும் இறங்கினார். இங்கிலாந்து முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனைகளைத் தொடங்கினார். ‘என் உடல், என் உரிமை’ என்ற சிந்தனையோடு தீவிரமாகக் களத்தில் இறங்கி, உலகம் முழுவதும் மாற்றம் கொண்டுவரப்படக் காரணமாக இருந்தார். ‘Married Love or Love in Marriage’ என்ற புத்தகத்தை எழுதி, 1918-ல் வெளியிட்டார்! அந்தப் புத்தகம் வெளிவந்து நூறு ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன.

புத்தகமும் புயலும்

தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியையும் ஏமாற்றத்தையும் வைத்து மேரி இந்தப் புத்தகத்தை எழுதினார். “அறிவியல் படித்த எனக்கே திருமணம் குறித்தும் தாம்பத்தியம் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காத பெண்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காகவே இந்தப் புத்தகத்தை எழுதினேன்’’ என்றார் மேரி.

1913-ல் அமெரிக்காவைச் சேர்ந்த மார்கரெட் சாங்கரின் குடும்பக் கட்டுப்பாடு குறித்த பேச்சை மேரி கேட்டார். தன்னுடைய புத்தகத்தை அவரிடம் கொடுத்து, கருத்து கேட்டார். கருத்தடையை ஓர் அத்தியாயமாகச் சேர்க்கச் சொன்னார் சாங்கர். புத்தகத்தை முழுமைப்படுத்தி, பல்வேறு பதிப்பகங்களிடம் பிரசுரிக்கும்படி மேரி கேட்டுப் பார்த்தார். சர்ச்சைக்குரிய புத்தகம் என்பதால் யாரும் பிரசுரிக்க முன்வரவில்லை. இறுதியில் குடும்பக் கட்டுப்பாட்டில் ஆர்வம் கொண்ட ஹம்ப்ரி வெர்டோன் ரோ புத்தகத்தைப் பிரசுரிக்க உதவுவதாகச் சொன்னார். அவரே ஒரு பதிப்பாளரைச் சம்மதிக்க வைத்து, பணத்தை யும் கொடுத்துப் புத்தகத்தை வெளியிட்டார்.       

பெண்ணுக்கும் உரிமை உண்டு

திருமண வாழ்க்கையில் ஆணுக்கும் பெண் ணுக்கும் சம உரிமை இருப்பதை இந்தப் புத்தகம் எடுத்துக் கூறியது. ‘திருமண உறவில் பெண்ணின் விருப்பமும் முக்கியமா?’ என்று அதிர்ந்துபோனது இங்கிலாந்து. ‘தாம்பத்தியத்தில் பெண்ணின் விருப்பமும் முக்கியமானது. தாம்பத்தியம், குழந்தைப் பிறப்பு போன்ற முடிவுகளை எடுப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கும் உரிமை இருக்கிறது. குழந்தைப் பிறப்பு என்பது வாய்ப்பாக இருக்கக் கூடாது; தேர்வாக இருக்க வேண்டும்’ என்பதை இந்தப் புத்தகம் வலியுறுத்தியது. தாம்பத்தியம், கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றை எல்லோருக்கும் புரியும்படி விளக்கவும் செய்தது.

தேவாலயங்களும் மருத்துவ நிறுவனங் களும் இந்தப் புத்தகத்தைக் கடுமையாக எதிர்த்தன. இது எதிர்பார்க்கப்பட்ட எதிர்ப்பு என்பதால் மேரி சற்றும் கவலைப்பட வில்லை. யாருக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று பொறுமையாக இருந்தார். 15 நாட்களில் இரண்டாயிரம் பிரதிகள் விற்று, எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தப் புத்தகம். ஆயிரக்கணக்கான பெண்கள் மேரியிடம் ஆலோசனை கேட்டுக் கடிதம் எழுதினார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லும் விதத்தில் ‘சிறந்த பெற்றோர்’ என்ற தலைப்பில் அடுத்த புத்தகத்தையும் அவர் எழுதினார். ‘மேரிட் லவ்’ புத்தகப் பதிப்பு நடவடிக்கையில் ஹம்ப்ரி – மேரி இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டது. கருத்துகள் ஒத்துப்போயின. அதனால், இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனை

1921-ல் லண்டனில் உள்ள ஹாலோவேயில் இங்கிலாந்தின் முதல் குடும்பக் கட்டுப்பாடு மருத் துவமனையை மேரி ஆரம்பித்தார். தொடர்ந்து இங்கிலாந்து முழுவதும் பரவலாகக் குடும்பக் கட்டுப்பாடு மருத்துவமனைகளை ஆரம்பித்தார். முதல் உலகப் போரின் பின்விளைவாகவும் இரண்டாம் உலகப் போரின் முன்தயாரிப்பாகவும் நகர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் வறுமையில் உழன்றனர். நல்ல உணவு, நல்ல உடையைக்கூடக் குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாமல் தவித்தனர். விருப்பமோ தேவையோ இல்லாத குழந்தைகள் உருவாகிக் கலைப்பதைவிட, கரு உருவாகாமல் தடுத்துவிடுவதில் உறுதியாக இருந்தார் மேரி. அதனால், கருத்தடைச் சாதனங்களை வழங்க ஆரம்பித்தார். மருத்துவமனைகளுக்கு வர முடியாத பெண்களைத் தேடி, குதிரை வண்டியில் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்றார். அவர்களுக்குத் தேவையான ஆலோசனையையும் விழிப்புணர்வையும் வழங்கினார். விக்டோரியா காலத்து கலாச்சாரம் மாறி, குடும்பங்கள் சிறியதாக ஆரம்பித்தன.

அந்த இருபது ஆண்டுகளில்  ஒரு விஞ்ஞானி, சமூக விஞ்ஞானியாக மாறியிருந்தார்!  மத்திய லண்டனில் 1925-ம் ஆண்டு மேரி ஆரம்பித்த மருத்துவமனை இன்றுவரை செயல்பட்டுவருகிறது. தன்னுடைய இறுதி இருபதாண்டுகளில் கவிதைகள் எழுதிய மேரி, 1958-ம் ஆண்டு மறைந்தார்.

மீண்டும் மேரி ஸ்டோப்ஸ்

மேரி ஸ்டோப்ஸின் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை. தேவையற்ற கருத்தரிப்பின் விளைவைப் பார்த்து உணர்ந்த நியூகினியாவில் சுகாதாரத் துறை அதிகாரியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த மருத்துவர் டிம் பிளாக்கும் அவருடைய மனைவியும் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கருக்கலைப்பு போன்றவற்றில் ஏழை எளிய பெண்களுக்கு உதவ முடிவெடுத்தனர்.  அமெரிக்கா சென்று படித்து, மேலும் தன் புரிதலை பிளாக் அதிகப் படுத்திக்கொண்டார். பிறகு இங்கிலாந்துக்குச் சென்றார். அப்போது வரலாற்றுப் புகழ்மிக்க மேரி ஸ்டோப்ஸ் மருத்துவமனை மூடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

1976-ல் ‘மேரி ஸ்டோப்ஸ் இண்டர்நேஷனல்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் இந்தியா உட்பட உலகின் 37 நாடுகளில் மேரி ஸ்டோப்ஸ் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. 12 ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். கருத்தடைச் சாதனங்கள், குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் தவிர கருக்கலைப்பையும் இவர்கள் மேற்கொள்கிறார்கள். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகாவது பெண்களின் உடல் என்பது பெண்களின் உரிமை சார்ந்தது என்ற சிந்தனை வரும்போது மேரி ஸ்டோப்ஸின் லட்சியம் நிறைவேறும். அதற்கு இன்னும் வேகமாகவும் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close