[X] Close

அன்றொரு நாள் இதே நிலவில் 05: அவிழ்க்க முடியாத முடிச்சு


05

  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:33 am
  • அ+ அ-

-பாரததேவி

மறுவீடு வந்துவிட்டது. ஓலைப் பெட்டிகளில் பண்டம், பலகாரமெல்லாம் தயாராகிவிட்டது. கறிக் கொழம்பு வாசம் வீடெங்கும் மணந்தது. காலையிலிருந்தே இன்னைக்கு மறுவீடு என்று பட்டுக்கரை வேட்டியும் சட்டையும் போட்டவாறு குதித்து, குதித்து நடந்துகொண்டிருந்தான் கணேசன். சந்தோசம் அவன் முகத்தில் சூரிய வெளிச்சமாகப் பிரகாசித்தது.

பாக்கியத்தையும் அழகாகச் சோடித் திருந்தார்கள். காடுகளிலிருந்த தாழம்பூவைப் பிடுங்கி வந்து தாழம்பூச்சரக் கொண்டை போட்டிருந்தார்கள். கைகளில் சிவப்பும் கறுப்புமாய் முழங்கைவரை வளையல்கள் கண்ணுக்கு அழகாய் நிறம் கொடுத்தன.  காதில் ஓசி தண்டட்டி, முடிச்சி, பாம்படம் போட்டதில் அவள் முகமே ஒரு நகையாக மின்னியது. காலில் கொலுசும் தண்டையும் சேர்ந்து அவள் நடக்கும்போதெல்லாம் தாளமிட்டன. இனி, தாலி பிரித்துக் கட்டவேண்டியதுதான் பாக்கி. கல்யாணத்தன்று கட்டிய தாலியைப் பிரித்து மறுவீடு அன்று புதுத்தாலி கட்டுவார்கள். அதுவும் நாத்தனார்தான் பிரித்துக் கட்ட வேண்டும்.

சோர்ந்துபோன புதுப்பெண்

பாக்கியம் நடுவீட்டுக்குள் உட்கார்ந் திருந்தாள். நாத்தனார் வடிவு வந்து தாலியின் முடிச்சை அவிழ்த்தாள். கணேசன் கோபத்தில் ‘படி முடிச்சி’ (இறுக்கி) போட்டிருந்ததில் அதை அவளால் அவிழ்க்கவே முடியவில்லை. மற்ற நாத்தனார் முறை வேண்டியவர்களும் அவிழ்த்துப் பார்த்தார்கள். யாராலும் அவிழ்க்க முடியவில்லை. நல்ல நேரமோ போய்க்கொண்டே இருந்தது. ஊர்ப் பெரியவர்கள் குறுக்கும் மறுக்குமாகப் பெண்களைச் சீக்கிரம் சீக்கிரம் என்று அவசரப்படுத்திக்கொண்டு அலைந்தார்கள். கல்யாணமாகி மூன்று மாதமானதால் புதுத்தாலிக் கயிறு தண்ணிப்பட்டு, தண்ணிப்பட்டு ஏற்கெனவே கணேசன் இறுக்கிக் கட்டியதில் ரொம்பவும் இறுகிப்போய்விட்டது.

ஆபத்துக்குப் பாவமில்லை என்பதுபோல் பெரிய ஆட்களும் வந்து முடிச்சை அவிழ்த்துப் பார்த்தார்கள். யாருக்கும்  அவிழ மறுத்து சண்டித்தனம் செய்தது. பாக்கியம் காலையிலிருந்து குனிந்தே கிடந்ததால் அவளுக்குப் பொடதி வலியே வந்துவிட்டது. காலையில் மஞ்சள்பூச்சில் பொலிவு கண்ட அவள் முகம் இப்போது நெற்றியில் வைத்த குங்குமத்தோடு வியர்த்து வழிந்ததில் முகத்தில் புதுப்பெண் கோலமே இல்லாமல் முகம் பொசுங்கிக் கிடந்தாள்.

மணமகனுக்குக் கிடைத்த தீர்ப்பு

சரி, முடிச்சிப்போட்டவனையே அவிழ்க்கச் சொல்லுவோம் என்று கணேசனைக் கூப்பிட்டு அவிழ்க்கச் சொன்னார்கள். அவனும் அவிழ்த்துப் பார்த்துவிட்டு முடியாமல் குறுக்கு (இடுப்பு) வலியோடு குனிந்துகொண்டே போனான்.  பழைய தாலியை எப்படியும் கழற்றி, புதுத்தாலியைக் கோத்த பிறகுதான் மறுவீடு போக வேண்டும். இவன் போட்ட முடிச்சை யாராலும் அவிழ்க்க முடியாததால் எல்லோரும் தவித்து, தவையோடிப்போனார்கள். கணேசன் மீது எல்லோருக்கும் கடுங்கோபம். 

கடைசியில் எந்த முடிச்சி என்றாலும் சாதாரணமாக அவிழ்த்துவிடும் ‘முடிச்சவிக்கி’ முருகேசனைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். அவன் எப்படிப்பட்ட முடிச்சிகளையும் சுலபமாக அவிழ்த்துவிடுவான் என்பதால் முருகேசன் என்ற அவன் பெயரே மாறி இப்போது அவனை ‘முடிச்சவிக்கி’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். காட்டில் வேலை செய்துகொண்டிருந்த அவனைக் கூப்பிட்டு வந்து பாக்கியத்தின் கழுத்தில் கிடந்த முடிச்சை அவிழ்க்கும்போது இருட்டி ஒருநாழி ஆகிவிட்டது. அதன்பிறகு, நல்ல நேரமில்லை என்பதால் யாரும் மறுவீடு போகவில்லை. அதோடு, சம்பிரதாயத்தை மீறி மூணு முடிச்சிப்போடுவதற்குப் பதிலாக ஏழெட்டு முடிச்சி போட்டதற்காக நம்ம ஊரு அம்மன் கோயிலை மூணு மாதத்துக்குக் கூட்டிப் பெருக்கி சுத்தம் பண்ண வேண்டுமென்று ஊர் நாட்டாமையிலிருந்து  ஊர்க்காரர்கள் வரை தீர்ப்பு கூறிவிட்டார்கள். பாக்கியமோ, “என் தாலிக் கயிற்றின் முடிச்சை அவிழ்க்கிறேன் என்று ஊர் ஆணும் பெண்ணும் என் கழுத்தில் கைவைத்ததால் நான் இனி அவனோடு சேர்ந்து வாழ மாட்டேன்” என்று சொல்ல கணேசன் நொந்து நொறுங்கிப்போனான்.

ராசியாகிவிட்ட தம்பதி

நாட்டு வைத்தியர் ஒரு பக்கம் அமுதாவுக்கும் துரைச்சாமிக்கும் பச்சை இலைகளை அரைத்துக் கட்டினாலும் அமுதாவின் அம்மா, மகளும் மருமகனும் படுத்துவிட்டதில் ரொம்பவும் நொந்துபோனாள்.

‘நேத்து கல்யாணம் முடிச்சிதுகள்ல்லாம் சோளக்காட்டுலயும் கம்பங்காட்டுக்குள்ளயும் சேத்திக்காரிகளவச்சு கண்ணுவப்பும் கையலப்புமா பேசிக்கிட்டு இருக்கையில நம்ம புள்ளைக மறுவீடு போன அன்னைக்கேவில்ல இப்படி விழுந்து படுத்த படுக்கையா கெடக்குக. வைத்தியரு ஒரு பக்கம் மருந்து கொடுத்துக்கிட்டு இருக்கட்டும் நம்மளும் நமக்குத் தக்கன கைவைத்தியம் செய்வேம்’ என்று நினைத்தாள். காட்டு மொச்சி என்று ஒரு இலை இருக்கிறது. அது கால் ஒடிவுக்கு, கை ஒடிவுக்கு நல்ல மருந்து. அத்தோடு குப்பைமேனி இலை, சிறு வெங்காயம் எல்லாவற்றையும் நன்றாக உரலில் இட்டு இடித்துத் தேங்காய் எண்ணைய்யிட்டு வதக்கி அதோடு மணலையும் போட்டுச் சூடாக வறுத்து மருமகனுக்கும் மகளுக்கும் தினமும் காலையும் மாலையும் தவறாமல் ஒத்தடம் கொடுக்க, முதலில் துரைச்சாமி எழுந்து பய்ய, பய்ய நடக்க ஆரம்பித்தான்.

கொஞ்சம் நடக்க ஆரம்பித்த உடனே தினமும் மறக்காமல் அமுதாவைப் போய்ப் பார்த்துவிட்டுக் கண்களில் காதலும் கனிவுமாகப் பேசிவிட்டு வருவான். புருசன் தன்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போகும்போது அமுதாவும் அவன் கூடவே போக வேண்டுமென்று துடியாகத் துடித்தாள். இதனாலேயே எழுந்து நடக்க மூணு மாதம் ஆகும் என்று வைத்தியர் சொன்னதைப் பொய்யாக்கி அமுதாவும் துரைச்சாமியும் வரப்பேறி, வாய்க்கா ஏறி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வண்ணார்களுக்கும் நல்ல தொடர்பு இருந்தது. ஏனென்றால் எந்தப் பெண் தலைக்கு ஊற்றினாள், எந்த வீட்டுப் பெண் தலைக்கு ஊற்றாமலிருக்கிறாள் என்பதை வண்ணார்கள்தாம் கண்டறிந்து சொல்வார்கள். அப்போதெல்லாம் தலைக்கு ஊற்றிய பெண்கள் அந்நேரத்துக்கே இன்னொரு பெண்ணை எழுப்பி இந்த விஷயத்தைச் சொல்ல அவள் வாளியும் கயிறுமாக வர இரண்டு பேரும் அது நடுச்சாமமாக இருந்தாலும் பக்கத்திலிருக்கும் கிணற்றை நோக்கிப் போவார்கள்.

சேலை சொல்லும் சேதி

தலைக்கு ஊற்றிய பெண் தன் சேலையை நன்றாகச் சுருட்டிப் படப்பு மறைவிலோ விறகுகள் அடுக்கியிருக்கும் அடர்விலோ யார் கண்ணுக்கும் புலப்படாமல் வைத்துவிடுவாள். பிறகு உடன்வந்தவள் கிணற்றில் தண்ணீர் இறைத்து ஊற்ற, குளித்துவிட்டுத்தான் வீட்டுக்குள் நுழைவார்கள். இப்படி மறைவாகயிருக்கும் சேலையை வண்ணார் கையால் தொடமாட்டார். அதிலும் பெண்கள் அந்தத் துணியை எடுத்துக்கொண்டு துறைக்குக் (துவைக்கும் இடம்) கொண்டு போவார்கள். அப்படிப் போகும்போது எதிரில் வருபவர்களிடம் அது பெண்ணாக இருந்தால், “ஏத்தா நானு திரும்பி வாரையில ‘முட்டு’த் துணியோட இந்த வழிதேன் வருவேன். நீரு செத்த மறவா இரும்” என்பான் (செக்).

ஆண்களாக இருந்தாலோ, “எப்பச்சி நான் கசடமுக்குச் சீலைய எடுத்துக்கிட்டு இந்த வழியாத்தேன் வருவேன். நீரு மாத்து வழியா போறது நல்லதப்பச்சி” என்று சொல்லிவிட்டுச் சேலை இருக்கும் திக்கம் நோக்கி நடப்பார்கள். அவன் சொன்னபடியே அவர்களும் அப்படிப்பட்ட சேலையின் பார்வையில் படாமல் வழியை மாற்றிவிடுவார்கள்.

ஒவ்வொரு பெண்கள் கல்யாணமாகி வந்ததும் தாங்கள் மாசமாகயிருப்பதை வீட்டில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்துவிடுவார்கள். அதை வண்ணார்கள்தாம் அவர்கள் வீட்டில், “ஏத்தா உமக்கு விஷயம் தெரியுமா? இந்த மாசம் நம்ம வீட்டுத்தாய் சீலய சுருட்டி வைக்கல. உமக்குப் பேரனோ பேத்தியோ பொறக்கும் பொலுக்கோ” என்று சொல்ல வீட்டுக்காரர்களுக்குச் சந்தோசம் பொறுக்காது. உடனே அவனுக்கு வயிறு நிறையப் சோறு போட்டு கையில் கருப்பட்டியோடு வாழைப்பழமும் ஒன்றோ இரண்டோ ரூபாயும் கொடுத்து அனுப்புவார்கள். பிறகுதான் மகளிடமோ மருமகளிடமோ கேட்டு அந்த விஷயத்தை நிச்சயப்படுத்திக்கொள்வார்கள்.  அதேபோல் கல்யாணம் முடிக்காத பெண்களும் காதலில் விழுந்து கர்ப்பமாக ஆவதும் உண்டு. அதையும் இந்த வண்ணார்தான் வீட்டுக்காரப் பெண்களிடம் வந்து, “ஏத்தா நம்ம தாயி ரெண்டு மாதமா சீலயவே ஒதுக்கி வைக்கல. ஏதோ கோளாறு நடந்திருக்கும் பொலுக்கோ” என்று சொல்வார். அவ்வளவுதான் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள் வயிற்றில் தீப்பிடித்ததுபோல் பதறிப்போவார்கள்.

(நிலா உதிக்கும்)

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close