[X] Close

வாசிப்பை நேசிப்போம்: உத்வேகம் தரும் புத்தகங்கள்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:29 am
  • அ+ அ-

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்த குடும்பத்தில் பிறந்த எட்டுப் பேரில் ஒருத்தி நான். பள்ளிப் படிப்பை முடித்த எனக்குக் கல்லூரிப் படிப்பு கைகூடவில்லை. மின் வசதி இல்லாத கிராமத்தில் சிறு வயதில் நாவல்களைப் படித்துக்காட்டித் தூங்கவைப்பார் எங்கள் அப்பா. அப்போதே எங்கள் மனத்துக்குள் வாசிப்பை விதைத்துக்கொண்டோம். தொடக்கப் பள்ளியைத் தாண்டி உயர்நிலைக் கல்வியைத் தொட்டதுமே நாவல்கள் வாசிக்கும் பழக்கம் எனக்கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. கோடை விடுமுறை வந்துவிட்டால் இடைவிடாத வாசிப்பால்தான் எங்கள் பகல் பொழுதுகள் கழியும். சாண்டில்யன் எழுதிய வரலாற்று நாவல்களான ‘மன்னர் மகள்’, ‘யவன ராணி’, ‘கடல் புறா’ போன்றவற்றோடு கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்றவற்றையும் படிப்போம். எஸ்.ஏ.பி., பி.எஸ்.ராமையா, ரா.கி.ரங்கராஜன் போன்றோரின் சமூக நாவல்களும் தமிழ்வாணனின் மர்ம நாவல்களும் எங்கள் வாசிப்புக்குச் சுவைகூட்டின.

அதன் பிறகு எண்பதுகளில் தொடங்கி தொண்ணூறுகள்வரை மணியனின் பயணக் கட்டுரைகளையும் சிவசங்கரி, வாஸந்தி, ஜெயகாந்தன், பட்டுகோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளும் தொடர்கதைகளும் வெளியான வாரப் பத்திரிகைகளையும் வாசித்துத் தீர்த்தோம். தற்போது 70 வயதைக் கடந்த நிலையிலும் வாசிப்புப் பழக்கம் குறையவே இல்லை. வீட்டு வேலைகளுக்கு நடுவிலும் வாசிப்பே எனது சுவாசிப்பாக இருக்கிறது.

காரைக்கால் தல புராண வரலாற்றைச் சமீபத்தில் படித்தேன். நாரதருடன் இருக்கும் தும்புருவின் மகள் சுமதி என்பவள்தான் மறுபிறவியில் காரைக்கால் அம்மையாராகப் பிறந்தார் எனும் செய்தியை அறிந்துகொண்டேன். நா. பார்த்தசாரதி எழுதிய ‘பொன்விலங்கு’ நாவலில் வரும் சத்தியமூர்த்தி, மோகினி, பாரதி ஆகியோர் முக்கோணக் காதலைச் சுமந்தபடி நாவல் முழுக்க நடமாடும் உணர்வுமிகு பாத்திரப் படைப்புகளாக உள்ளனர். ஒவ்வொரு நாளையும் சலிப்பின்றிக் கடக்க வாசிப்புதான் கைகொடுக்கிறது. எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அது தருகிறது.

- எஸ். ஞானபூங்கோதை, சென்னை.

தினம் ஒரு பக்கம்

நாள் முழுவதும் சமூக ஊடகங்களில் மூழ்கிப் பொழுதைக் கழிக்கும் இன்றைய இளைய தலைமுறையைப் போல் அல்ல எங்களது இளமைக்காலம். அது வாசிப்பால் நிறைவுகண்ட பொற்காலம். மனத்தையும் வாழ்க்கையையும் நெறிப்படுத்தும் வல்லமை பெற்றவை புத்தகங்கள். அதனால்தான் இப்போதும் வாசிப்பைக் கைவிடாமல் இருக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய ‘உடையார்’ நாவலைத் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் உருவான வரலாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி இவ்வளவு பெரிய கோயிலை உருவாக்கினார்கள் என்பதை நாவலில் விவரித்துள்ளார் பாலகுமாரன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளோடு தஞ்சை, அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களின் உணவு, உடை, பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க வியப்பே மேலோங்குகிறது. இந்த நூலைப் படித்தபிறகு தஞ்சைப் பெரிய கோயிலைத் தரிசிக்கும்போது கோயில் மட்டுமல்ல; அதைக்

கட்டியெழுப்ப நடந்த அனைத்தும் நம் நினைவுக்கு வந்து நம்மை வேறோர் உலகுக்கு அழைத்துச்செல்லும்.

வாசிப்புக்கு நேரமில்லை எனச் சொல்வது சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடு. தினம் ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பத்தால் போதும்; நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடும். பிறகு நாம் வாசிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

- கிருஷ்ணவேணி, ராஜபாளையம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close