[X] Close

நட்சத்திர நிழல்கள் 05: சகுந்தலாவின் பாதையில் வந்த ராதா


05

  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:21 am
  • அ+ அ-

-செல்லப்பா

திரைப்படத்தைக் கண்களால் காணும் தலைமுறைக்குக் காதுகளால் திரைப்படம் கேட்ட கதை தெரியுமோ தெரியாதோ? சினிமாவைக் கேட்ட அனுபவம் கொண்டவர்கள் ஒலிச்சித்திரத்தை நினைவில் தேக்கிவைத் திருப்பார்கள். ‘சரஸ்வதி சபதம்’ கதை, வசனம் ஒலிக்காத தெருக்கள் தமிழகத்தில் இருக்குமா? அதைப் போலவே சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ படமும் கதை, வசனத்தில் கொடிகட்டிப் பறந்தது. அந்த வரிசையில் வைக்கத்தக்க படம் கே. விஜயனின் திரைக்கதை, வசனம், இயக்கத்தில் சுஜாதா, பூர்ணிமா ஜெயராம், மோகன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 1984-ல் வெளியான ‘விதி’.

இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள்கூட இதன் நீதிமன்றக் காட்சிகளைக் கதை, வசனமாகக் கேட்டிருப்பார்கள். இந்தப் படத்தை அறியாத ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தால் சந்தேகமே வேண்டாம் அவர் தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். பெண்ணுரிமையை மையமாகக்கொண்ட இந்தக் கரு, தெலுங்கு எழுத்தாளர் டி.காமேஸ்வரியின் மனத்தில் உதித்தது. அவரது கதையே ‘நியாயம் காவலி’ என்னும் பெயரில் சாரதா, ராதிகா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடித்த திரைப்படமாகி 1981-ல் வெளிவந்தது. இதன் மறு ஆக்க உரிமையைப் பெற்றே தயாரிப்பாளர் கே. பாலாஜி இந்தப் படத்தைத் தமிழில் தயாரித்தார்.

காதலில் விழுந்த நாயகி

ராதா எனும் இளம்பெண்ணை ராஜா எனும் இளைஞன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். தமிழ்ப் பெண்ணான ராதா முதலில் மறுக்கிறாள். வழக்கமாகத் தமிழ் ஆண்கள் எடுக்கும் அதே ஆயுதத்தை ராஜா எடுக்கிறான். அவள் இல்லாவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறான். ராதா அதற்கு இரங்காமல் இருந்திருந்தால் அவனுக்கு இணங்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆனால், ராதாவோ உண்மையிலேயே அப்படிச் செய்துவிடுவானோ எனப் பயந்து அவனைப் பார்க்கச் சென்றுவிடுகிறாள். அங்கிருந்து தொடங்குகிறது அவளது துயரம்.

யாரைக் கல்லால் அடித்துத் துரத்தவைத்தாளோ அந்த ராஜாவைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அவனது தூண்டுதலில் மகாபலிபுரம் செல்கிறாள். இருவரும் கடலில் குளிக்கிறார்கள். ஈர உடையுடன் விடுதியில் அறை எடுத்துத் தங்குகிறார்கள்; சுகம்காண்கிறார்கள். அதுவரையான அவனது சுமை குறைந்துவிடுகிறது; அவளது சுமை கூடிவிடுகிறது.

தன்மானத்தை விட்டுத்தராத உறுதி

திருமணத்துக்காக ராஜாவை ராதா வலியுறுத்துகிறாள். ராஜா நழுவுகிறான். அவனது சுயரூபம் வெளிப்படத் தொடங்குகிறது. ராதாவின் வீட்டில் உண்மை தெரிந்து கலவரமாகிறது. இதனிடையே தான் கர்ப்பமானது தெரிந்து அதிர்கிறாள் ராதா. அதற்காக அப்படியே ஒடுங்கிப்போக ராதாவின் தன்மானம் இடம்கொடுக்கவில்லை. தன்னை நம்பவைத்து ஏமாற்றிய ராஜா போன்ற ஆணின் கயமைத்தனத்தைச் சந்திசிரிக்கவைக்காமல் விடப்போவதில்லை என்ற எண்ணம் அவளது மனத்தை ரௌத்திரப்படுத்துகிறது. கொந்தளிப்பான மனநிலையில் அர்த்த ராத்திரியில் வழக்கறிஞர் சகுந்தலா தேவியை நாடிச் செல்கிறாள். பெண்ணுரிமைக்காகப் போராடுவதற்காகத் திருமணத்தைக்கூடத் தவிர்த்துவிட்டு வாழும் பெண் அவர். ராதாவின் கதையைக் கேட்ட சகுந்தலா துணுக்குறுகிறார். அவளுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார். ராஜாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்கிறார்.

சகுந்தலா கடந்துவந்த பாதையிலேயே ராதாவும் நடந்துவந்திருக்கிறாள். இருவரது மனத்திலும் ஒரே முள் தைத்திருக்கிறது. ராதாவின் கதை சகுந்தலாவின் கதையைப் போலவே இருக்கிறது. சகுந்தலாவும் ஒருவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணே. ராதாவை ஏமாற்றிய அந்த ராஜாவின் தந்தையான வழக்கறிஞர் டைகர் தயாநிதிதான் சகுந்தலாவின் வாழ்வுடன் விளையாடியவர். தான் ஏமாற்றப்பட்ட நேரத்தில் கொதித்து எழ முடியாத சகுந்தலாவுக்கு ராதாவின் தைரியம் நம்பிக்கை அளிக்கிறது. அந்த நம்பிக்கை தந்த துணிச்சலால் எல்லோரும் நிறைந்த நீதிமன்றத்தில் தன் வாதத்தை ஆணித்தரமாக வைக்கிறாள். தான் பலியாடப்பட்ட கதையையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கிறாள். அதுவரை மகளையே வளர்ப்பு மகள் என்று சொல்லிவந்த பரிதாபக் கதையை ஊரறிய உரைக்கிறாள்.

வாதத் திறமையால் ராதாவுக்கு வெற்றி தேடித் தருகிறாள். ராஜாவுக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கிறது. ராஜா ராதாவை மணக்க வேண்டும் என்றும் ராஜாவை மணப்பதும் மறுப்பதும் அவளது விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறுகிறது. ராதாவைப் பொறுத்தவரை அந்த ஏமாற்றுக்காரனைக் காதலனாக வரித்தது தான் செய்த தவறு என்பதால் அதே கயவனைக் கணவனாகக் கொள்வதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் மறுத்துவிடுகிறாள். ஆனால், தன் குழந்தைக்குத் தகப்பன் ராஜாதான் என்பதை அறிவித்த நிம்மதியில் தன் சொந்த வாழ்வைத் தொடர்கிறாள். வழக்கில் வெற்றி தேடித்தந்த மகிழ்ச்சியில் தன் மகள் மேகலையை ராதா கையில் ஒப்படைத்துவிட்டுக் கண் மூடிவிடுகிறாள் சகுந்தலா.

ஆணுக்கு இல்லையா ஒழுக்கம்?

தான் கற்பிழந்துவிட்டதாகவும் களங்கப்பட்டு விட்டதாகவும் ராதா குமுறுகிறார். ஆனால், ஒரு காட்சியில்கூட ராஜா தன் கற்பு பறிபோனதைப் பற்றிக் கவலைப்படவேயில்லை. மீண்டும் மீண்டும் அதைப் பறிகொடுக்க அவன் தயாராகவே இருக்கிறான். இதுதான் நமது சமூகம். இப்படித்தான் இருக்கிறது நமது பண்பாடு. தவறிழைத்த ராஜாவின் குடும்பத்தில் அவனுடைய தந்தை டைகர் தயாநிதி தன் மகனுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மகன் செய்த தவறைப் பெரிதுபடுத்தாமல் அவனுக்காக வழக்கில் ஆஜராகிறார். ராதாவுடைய தந்தையோ குடும்ப மானமே பறிபோய்விட்டதாகப் புலம்புகிறார். தன் பெண்ணை ஒருவன் ஏமாற்றியபோது அது வெளியில் தெரிந்துவிடக் கூடாதே என்பதுதான் அவரது கவலையாக இருக்கிறது. அவளுக்குக் கருக்கலைப்பு செய்து திருமணம் செய்து கொடுத்துவிடவே துடிக்கிறார். அதற்கு ராதா சம்மதிக்காவிட்டால் தான் இறந்துவிடுவதாக மிரட்டுகிறார். எப்படியாவது அதிலிருந்து தன் குடும்பம் தப்பித்தால் போதும் என்ற பரிதவிப்புதான் அதில் மேலிடுகிறது. தன் பெண்ணை ஒருவன் நம்பவைத்துக் கழுத்தறுத்திருக்கிறானே என்ற கோபம் அவருக்குத் துளிக்கூடவரவில்லை.

ஆளுக்கொரு நீதி

சகுந்தலாவை வஞ்சித்த டைகர் தயாநிதியும் வேறொரு திருமணம் செய்துகொள்கிறார்; ராதாவை வஞ்சித்த ராஜாவும் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். ஆனால், சகுந்தலாவும் ராதாவும் தனிமரங்களாகவே வாழ்கிறார்கள். சகுந்தலாவுக்கும் ராதாவுக்கும் தத்தமது குழந்தைகளை வளர்ப்பதே ஆத்ம திருப்தி தரும் பணியாக மாறிவிடுகிறது. அதுவும் வஞ்சித்தவர்களின் வழியாக வந்த வாரிசுகளை. சகுந்தலாவும் ராதாவும் ஏன் வேறொரு திருமணம் செய்துகொள்ளாமலே வாழ வேண்டும்? அவர்கள் செய்த தவறுதான் என்ன?

ராஜா செய்தது தவறு என்று தெரிந்தும் டைகர் தயாநிதி தன் மகனைத் தட்டிக்கேட்டிருந்தால் ராதா நீதிமன்றத்தின் படியேற நேர்ந்திருக்காதே. ஒருவேளை தன் மகளுக்கு ராதா நிலைமை ஏற்பட்டிருந்தால் தயாநிதி என்ன செய்திருப்பார்? சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளுக்குக் காரணம் விதி என்று யாரும் தப்பிக்க இயலாது ஆண் குழந்தையைப் பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தையை வளர்ப்பதில் காட்டும் மெத்தனமே இதுபோன்ற நிலைமைக்குக் காரணமோ என்ற நினைக்கவைக்கிறது ‘விதி’. ஆணுக்கு ஒரு நீதி; பெண்ணுக்கு ஒரு நீதி எனும் இந்த ஓரவஞ்சனை சமூகத்தில் ஏன் தொடர்கிறது எனும் கேள்வியை ‘விதி’ எழுப்புகிறது.

(நிழல்கள் வளரும்)

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள:

chellappa.n@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close