[X] Close

சூழல் காப்போம்: ஒழிப்பில் வேண்டாமே பாரபட்சம்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 11:15 am
  • அ+ அ-

வேலைக்குச் செல்லும்போது கைப்பையில் எப்போதும் ஒரு துணிப்பையை எடுத்துச் செல்வேன். அன்று அவசரத்தில் துணிப்பையை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். வேலை முடிந்து வீடு திரும்பும்போது குழந்தைகளுக்காகக் கொய்யாப்பழம் வாங்கினேன். கொய்யாப்பழம் விற்ற பெண்ணிடம் துணிப்பை இருக்கிறதா எனக் கேட்டேன். அதற்கு அந்த அம்மா, “எங்கம்மா? பிளாஸ்டிக் ஒழிப்புக் குழுன்னு சொல்லிக்கிட்டு சிலர் வந்து இருந்த பையையெல்லாம் வாங்கிட்டுப் போயிட்டாங்க. பை இல்லாததால நிறையப் பேர் பழம் வாங்காமப் போயிட்டாங்க” என வருத்தத்துடன் சொன்னார். துணிப்பையை மறந்துவிட்டு வந்ததற்கு இந்த அபராதம் தேவைதான் என நினைத்தபடி அருகிலிருந்த கடையில் துணிப்பையை வாங்கி, கொய்யாப்பழத்தை அதில் எடுத்துச் சென்றேன். மறுநாள்  சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அங்கும் அதே வெள்ளைநிறத் துணிப்பை எனது பொருட்களுடன் என்னை நோக்கி வந்தது. அந்தப் பையில் கொய்யாப்பழம் விற்ற அம்மாவின் முகம் தெரிந்தது. வாங்கிய பொருட்களை நான் எடுத்துச்சென்ற மஞ்சள் பையில் போட்டு எடுத்துக்கொண்டு  வீடு வந்துசேர்ந்தேன்.

பிளாஸ்டிக் ஒழிப்பிலும் பாரபட்சமா? அது துணிப்பை அல்ல; செயற்கை இழைப்பை என்பது தெருவோர வியாபாரிகளுக்குத் தெரியாது. ஆனால், அவர்களைத் தண்டிக்கிறவர்கள் பெருவணிக நிறுவனங்களைக் கண்டுகொள்வதே இல்லை. பாரபட்சம் காட்டுவதாலும் சட்டத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததாலும்தான் எங்கு பார்த்தாலும் மீண்டும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் தென்படத் தொடங்கிவிட்டது. ஒரு டீக்கடைக்காரர் பிளாஸ்டிக் ஒழிப்புக் குழுவிடம், “பிளாஸ்டிக் கப்புக்குப் பதில் ஆவின் பால்கவரில் டீ ஊற்றிக் கொடுக்கலாமா?”  என்று கேட்டதாக வந்த வாட்ஸ் அப் செய்தி நினைவுக்கு வந்தது.

- நா. ஜெஸிமா ஹீசைன், திருப்புவனம் புதூர்.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்றாலே பை, பாட்டில், பாத்திரங்கள் போன்றவை குறித்தே பேசுகிறோம். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பிரஷ், பேஸ்ட், சோப்பு டப்பா, ஷாம்பு பாக்கெட் தொடங்கி சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் போன்ற கார்ப்பரேட் பொருட்களின் உறைகள் வரை பிளாஸ்டிக்கைத் தவிர்க்க முடியவில்லையே ஏன்? அதிரடி புரட்சியாக ஒரே நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு சாத்தியமில்லை என்பது இதிலிருந்தே புரிந்துவிடும். நாம் ஒவ்வொருவருமே பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதை நம் அன்றாடக் கடமையாக நினைப்போம். எங்கள் வீட்டில் பிரஷ்ஷைத் தவிர்த்துவிட்டு வேப்பங்குச்சியால் பல் துலக்குகிறோம். பால், தயிர் போன்றவற்றைப் பாக்கெட்டுகளில் வாங்குவதில்லை. சிறிய மண் பாத்திரத்தில் உறை ஊற்றிவைக்கிறேன்; சுவை அபாரம். ஷாம்பூவைத் தவிர்த்துவிட்டுச் சீயக்காய்க்கு மாறிவிட்டேன். இப்படி ஒவ்வொருவராக மாறினாலே பிளாஸ்டிக்கை நாம் ஒழிக்க வேண்டியதில்லை. அதுவே ஒழிந்துவிடும்.

- மல்லிகா அன்பழகன், சென்னை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close