[X] Close

ஏரோஸ்பேஸ் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்


  • kamadenu
  • Posted: 12 May, 2019 10:07 am
  • அ+ அ-

பிளஸ் 2 முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சேர விரும்புவது இன்ஜினியரிங் படிப்புதான். "இன்ஜினியரிங் படித்துவிட்டு நிறைய பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் அல்லது குறைந்த சம்பளத்தில் வேலைபார்க்கிறார்கள். இன்ஜினியரிங் படிப்புக்கு  இப்போதெல்லாம் மவுசு குறைந்துகொண்டே வருகிறது" என்றெல்லாம் அண்மைக்காலமாக  கூறப்பட்டு வந்தாலும் இன்ஜினியரிங் மீதான ஈர்ப்பு என்னவோ குறைந்துவிடவில்லை. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இன்ஜினியரிங் படிப்பதையே விரும்புகிறார்கள்.  தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பொது கலந்தாய்வு மூலமாக அரசு ஒதுக்கீட்டில் இன்ஜினியரிங் சேருகிறார்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்பவர்கள் எண்ணிக்கை தனி. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேஷன்  இன்ஜினியரிங், ஐ.டி. எனப்படும் இன்பர்மேஷன் டெக்னாலஜி,  கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்  என பொதுவான பாடப்பிரிவுகள் இருப்பினும் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகளும் (Specialized courses) இன்ஜினியரிங்கில் உள்ளன.  அவற்றில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஓசன் இன்ஜினியரிங்,  என்விரான்மென்டல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளும், சமீப காலமாக மிகவேகமாக வளர்ந்து வரும் துறைகளான டேட்டா அனலிட்டிக்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேனிங், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி.. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால், இத்தகைய சிறப்பு படிப்புகளின்  முக்கியத்துவம்  குறித்து பெரும்பாலான மாணவர்களிடையே விழிப்புணர்வு இல்லாததால்  அப்படிப்புகளில் சேர அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிஸேஷன் போன்ற பொதுவான படிப்புகளை இன்றைய கல்விச்சூழலுக்கு ஏற்ப ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற சிறப்பு படிப்புகளாக மாற்றிக்கொள்ளுமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பொறியியல் கல்லூரிகளுக்கு ஏற்கெனவே அறிவுரை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏரோஸ்பேஸ் - ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங்

இன்ஜினியரிங் துறையில் உள்ள சிறப்பு படிப்புகள் வரிசையில் ஏரோஸ்பேஸ் மற்றும் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் குறித்து பார்க்கலாம். ஒருசில மாணவர்களின் லட்சிய படிப்பாக ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் படிப்புகள் உள்ளன. ஏரோஸ்பேஸ் என்பது இன்ஜினியரிங்கில் இருக்கின்ற புகழ்பெற்ற ஒரு துறை. விண்வெளி ஓடம்  (ஸ்பேஸ்கிராப்ட்)  தொடர்பான தொழில்நுட்பம், சாதனங்கள் வடிவமைப்பு, உருவாக்கம் சம்பந்தப்பட்ட படிப்பு  இது. கிளைடர்கள் ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், ராக்கெட்டுகள் போன்ற விஷயங்களை ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்  மாணவர்கள் படிப்பார்கள்.  ஆரம்பத்தில் ஏரோநாட்டிக்கல்  இன்ஜினியரிங்கில் ஒரு பிரிவாக ஏரோஸ்பேஸ் இருந்து வந்தது. இத்துறையில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்டமான வளர்ச்சியின் காரணமாக தனித்துறையாக உருவெடுத்து நிற்கிறது ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங். ஆகாயம், விண்வெளி மீது ஆர்வம் உடைய மாணவர்களுக்கு ஏற்ற அருமையான படிப்பு. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் என்பது விமான வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு தொடர்புடைய படிப்பாகும்.

 ஏரோஸ்பேஸ்  இன்ஜினியரிங் பி.டெக். படிப்புகளாகவும், பிஇ படிப்புகளாகவும் அரசு கல்லூரிகளிலும் முன்னணி தனியார் கல்லூரிகளிலும் வழங்கப்படுகின்றன. ஐஐடி, ஐஐஎஸ்டி போன்ற மத்திய அரசின் உயர் நிறுவனங்களில் சேர வேண்டுமானால் ஜெஇஇ நுழைவுத்தேர்வெழுத வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பொறியல் கல்லூரிகளாக இருப்பின் பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல் மதிப்பெண் அடிப்படையிலும் பொது கலந்தாய்வு மூலமாக சேரலாம். தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களிலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் சேருவதற்கு அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டும். அரசு கல்லூரிகளில் இப்படிப்புக்கு செமஸ்டருக்கு ரூ.50 ஆயிரம் வரை கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக்கட்டணம் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.

பொதுவாக, ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்கள் என்றதும் அவர்களின் பணி எப்போதுமே வான்வெளியிலும், விண்வெளியிலும்தான் என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்கள் மேனேபேக்சரிங் சிஸ்டம் இன்ஜினியர், மெட்டீரியல் இன்ஜினியர், ஆட்டோமேட்டிவ் இன்ஜினியர், புரடக்‌ஷன் இன்ஜினியர் என்ற நிலைகளில் உற்பத்தி நிலையங்களிலும் அவர்கள் பணிபுரிவர்களாக இருப்பார்கள். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், நேஷனல் ஏரோநாட்டிக்கல் லேப், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போது உலகளவில் விண்வெளி  ஆய்வு மிக வேகமாக வளர்ந்து வருவதாலும், எதிர்காலத்திலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதாலும் ஏரோஸ்பேஸ் படிக்கும் மாணவர்களுக்கு பணிவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். பி.டெக். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடிப்பவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளும் உள்ளன. அவர்கள் ஸ்பேஸ் டெக்னாலஜி, ஸ்பேஸ் இன்ஜினியரிங் தொடர்பான பாடப்பிரிவுகளில் ஐஐடி (சென்னை, மும்பை, ஐதராபாத், கான்பூர், கரக்பூர்),  பெங்களூரு ஐஐஎஸ்சி, திருவனந்தபுரம் ஐஐஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சில தனியார் கல்லூரிகளிலும் எம்.டெக். படிக்கலாம். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ஸ்பேஸ் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய மேற்படிப்பு வாய்ப்புகள் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கும் அதிகளவில் உள்ளது. 

ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரி தேர்வு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றனவா, தகுதியும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் உள்ளனரா என்பதை எல்லாம் நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் சேருவது நல்லது.

 பிடெக் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் வழங்கப்படும் அரசு மற்றும் ஒருசில தனியார் கல்லூரிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஐஐடி, மும்பை

ஐஐடி, சென்னை

ஐஐடி, கரக்பூர்

ஐஐடி, கான்பூர்

ஐஐடி, திருவனந்தபுரம்

ஹெச்ஐடிஎஸ், படூர், சென்னை

எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம், சென்னை

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

அமிர்தா விஸ்வ வீத்யா பீடம், கோவை

காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம், கோவை

சென்னை ஐஐடி.யில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பை ஒருங்கிணைந்த பிடெக், எம்டெக் படிப்பாகவும் படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை பின்வரும் கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

எம்.ஐ.டி., குரோம்பேட்டை, சென்னை

விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பெங்களூரு

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), படூர், சென்னை

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (நிகர்நிலை பல்கலைக்கழகம்) வண்டலூர், சென்னை

பாரத் நிகர்நிலை பல்கலைக்கழகம், சேலையூர், சென்னை

வேல் டெக் நிகர்நிலை பல்கலைக்கழகம், ஆவடி

சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், சென்னை

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close