[X] Close

மறதியில் மறையாத நட்பு!


  • kamadenu
  • Posted: 12 May, 2019 10:01 am
  • அ+ அ-

-கண்ணன்

தோப்பில் மீரானுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது அவரது இளம் பதிப்பாக இருந்த அவரது மகன் ஷமீமைப் பார்த்து உரையாடினேன். களந்தை பீர்முகம்மதுவும் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவும் என்னுடன் இருந்தார்கள். துக்கம் விசாரிக்க வந்த பலரையும் கவனித்தபடியே இடையில் வந்து ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார் ஷமீம். சில மாதங்களாக சில முறை திருவனந்தபுரத்துக்குக் காரில் சென்று கீமோதெராபி வைத்தியம் பார்த்துவந்துள்ளார் தோப்பில். அது நினைவுகளில் தடுமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாகச் சென்றுவந்தபோது காரோட்டியிடம் “நாகர்கோவிலில் சுந்தர ராமசாமியைப் பார்க்க வேண்டும், அவர் வீட்டுக்குப் போ” என்று பணித்துள்ளார். காரோட்டி என்ன விஷயம் என்று புரியாமல் நெல்லைக்குப் போகவும் கைத்தடியைக் காட்டி மிரட்டினாராம்.

தோப்பில் அவரது முதல் நாவலான ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யுடன் சுராவைப் பார்க்க வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அவருடைய எதோ ஓர் அம்சம் சுராவைக் கவர்ந்திருக்க வேண்டும்; உடனே படித்தார். பல நண்பர்களுக்கும் அந்நாவலை அவசியம் படிக்கும்படிக் கடிதம் எழுதினார். அவருடைய பரிந்துரையில் ‘நெய்தல்’ அமைப்பு அந்நாவலைப் பற்றி ஒரு கூட்டம் நடத்தியது. வ.அய்.சுப்ரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுராவும் நாவலைப் பாராட்டிப் பேசினார். 1990-ல் இந்தியா வந்திருந்த எம்.ஏ.நுஃமான் சுராவின் ஏற்பாட்டில் தோப்பிலை நெல்லை பேட்டையில் சென்று சந்தித்து எழுதிய கட்டுரை ‘காலச்சுவடு’ ஆண்டு மலரில் (1991) வெளிவந்தது.

இந்த நினைவுகளைத் தோப்பில் எப்போதும் மனத்தில் வைத்திருந்தார். 1990-களில் மிளகாய் வத்தல் வியாபாரத்துக்காக ஒவ்வொரு வாரமும் அவர் திருவனந்தபுரம் செல்வார்; போகும் அல்லது வரும் வழியில் சுராவைச் சந்திக்க வருவார். அக்காலகட்டத்தில், ‘இந்தியா டுடே’ தமிழ் இதழில் (1990) சுராவின் ‘விகாசம்’ சிறுகதை வெளிவந்தது. சற்றே முற்காலத்தில் நடக்கும் கதை. ராவுத்தர் வீட்டுக்குக் கதைசொல்லி போகும் கட்டத்தில் ஒரு வரி இது: ‘சாணி மெழுகிய தரையில் வஸ்தாது மாதிரி ராவுத்தர் சப்பணம் கூட்டி அமர்ந்திருந்தார்.’

சாணி மெழுகிய தரை என்று குறிப்பிட்டிருந்ததால், ‘இந்தியா டுடே’வுக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பல கண்டனக் கடிதங்கள் வந்தன. அவற்றை ஆசிரியர் வாஸந்தி ஒரே கட்டாக சுராவுக்கு அனுப்பினார். சுரா படித்துவிட்டு என்னிடம் சொன்னார். “என் சிறுவயதில் ஒரு முஸ்லிம் வீட்டில் சாணி மொழுகப்பட்டிருப்பதை நான் பார்க்கவில்லையென்றால் என் கதையில் அது வராது. தோப்பிலிடம் கேட்போம்.” ஓரிரு வாரங்களில் தோப்பில் வந்தார். விஷயத்தைக் கேட்டதும் தன் சிறுவயதில் முஸ்லிம் வீடுகளில் அவ்வாறு சாணி மொழுகப்பட்டிருந்தது சகஜம் என்றும், பின்னர்தான் அது ஹராம் ஆனது என்றும், முற்காலக் கதையில் அப்படி இருப்பதில் பிழையில்லை என்றும் தெளிவுபடுத்தினார். சுராவுக்கு நிம்மதி.

சுராவின் மறைவை அடுத்த காலங்களில் தோப்பில் உடல்நலம் குன்றியது. பயணங்கள் குறைந்தன. அதிகமும் மனைவியுடன் பயணித்தார். சில மாதங்கள் முன்னர் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். மரணம் நெருங்குவதாக நினைக்க எந்தக் காரணமும் இருக்கவில்லை. பின்னர், உடல்நிலையில் ஏற்பட்ட சரிவை அவர் நண்பர்களிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளவில்லை. ஒரு எழுத்தாளராகவும் குடும்பத்தலைவராகவும் நிறைவான வாழ்வுதான் தோப்பிலுடையது. அடையாளம் தெரியாமல் அவர் தோற்றம் மாறியிருந்ததுதான் அதிர்ச்சியாக இருந்தது.

கண்ணன், ‘காலச்சுவடு’ பதிப்பாளர், தொடர்புக்கு: kannan31@gmail.com

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close