[X] Close

தொடர் சிறைக்கு அஞ்சாத போராளியின் வரலாறு: மு.ராமநாதன் நினைவலைகள்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 21:29 pm
  • அ+ அ-

-கா.சு.வேலாயுதன்

அநேகமாக கலைஞர் மு.கருணாநிதி இருந்திருந்தால் ஒரு காவியமே வரைந்திருப்பார்.  கோவை தென்றலென கட்சியினரால் விளிக்கப்பட்டவர், மேடைக்கு மேடை கொங்குமண் மணம் கமழ ஓயாது பேசி திமுகவின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் மு.ராமநாதனின் மறைவு அக்கட்சியின் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. பார்க்கத்தான் முரட்டுத்தனமாக இருப்பார். நெருங்கிப் பேசினால் குழந்தை போல் கொஞ்சுவார்.

வாசிப்பை நேசித்தவர் திராவிட இயக்கத்தில் தற்போது அருகி வரும் வாசிப்பை கடுமையாகவே விமர்சிப்பவர். எந்த போராட்டமென்றாலும் முதல் ஆளாக இருந்து முதல் ஆளாக சிறை செல்வது அவரது மரபு. அப்படியானதன் உச்சம்தான் அவரின் இந்தி எதிர்ப்பு போராட்டப் பங்களிப்பு.

1965 ஜனவரி 26-ம் தேதி இந்தி ஆட்சி மொழி என நேரு அறிவித்து விட்டார்.  அதை எதிர்த்த அண்ணா 1963 மற்றும் 1964 ஆம் ஆண்டுகளிலேயே முன்னோட்டமான போராட்டங்களை தமிழகமெங்கும் முடுக்கிவிட்டார். அந்தப் போராட்டங்களில் ஒன்றாக இந்தி ஆட்சிமொழி சட்டப் பிரிவு நகலை  தீயிட்டுக் கொளுத்த அண்ணாவிடம் பெயர் கொடுக்கிறார்கள் இளைஞர்கள். அதில் பெயர் கொடுத்த இளைஞர்களில் ஒருவரை 1964 ஜனவரி தொடக்கத்தில் கட்சியினர் இரண்டாயிரம் பேர் மாலையிட்டு கோவை ஒப்பணக்கார வீதியிலிருந்து வழியனுப்புகிறார்கள். வந்தவர்கள் போலீஸாரால் தடுக்கப்படுகிறார்கள். போராளி ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுகிறார். அவர் திமுக கொடியேந்தியபடி செல்கிறார்.

m1.jpg 

கோவை நகராட்சி அலுவலகக் கட்டிடம் நிற்கிறார். தோளோடு தோளாக திமுக கொடியை சாற்றிக் கொண்டு தன் கையில் வைத்திருந்த இந்தி ஆட்சி சட்ட(மொழி)ப்பிரிவு காகித நகல்களை தீயிட்டுக் கொளுத்துகிறார். போலீஸார் சூழ்கிறார்கள். அந்த இளைஞரைக் கைதும் செய்கிறார்கள். தொடர்ந்து கோவை சிறை வாசம். 3 மாதம் விசாரணைக் கைதி. பிறகு 6 மாதம் தண்டணைக் கைதி.

வெளியே வந்த பிறகும் சும்மாயிருக்க மாட்டார் இவர். திரும்ப அண்ணாவின் போராட்ட அறிவிப்பு. வெளியே வந்தவர் மறுபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுகிறார். 15 நாள் காவலில் வைக்கப்படுகிறார். திரும்ப விடுதலையாகிறார். திரும்ப நடந்தது ஒரு மொழிப்போர் கலவரம். அதில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் மீண்டும் சிறை. 2 ஆண்டுகாவல் கடுங்காவல் தண்டனை. இப்படி தொடர் சிறைக்கு அஞ்சாத போராளிதான் மு.ரா.

m2.jpg 

1964-ஆம் ஆண்டில் முதல் போராட்டத்திற்குப் பெயர்  கொடுத்து விட்டு வந்தது தெரியாமல் குடும்பத்தவர் இவருக்கு கிணத்துக்கடவில் பெண் பார்த்து நிச்சயித்து விட்டார்கள். மாப்பிள்ளை சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு பெறப்போகிறார் என்று தெரிந்ததும் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு. நிச்சயம் மட்டும் செய்துவிட்டு போராட்டங்கள் முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ளவே அவர்கள் இறுதியில் சம்மதித்தார்கள்.

அப்படி 1964 டிசம்பர் மாதம் சிறை மீண்டவர் மீண்டும் 1965 ஜனவரி 14-ல் கைது செய்யப்பட்டு சிறை சென்று, ஜனவரி 27-ல் வெளிவந்து, 1965 பிப்ரவரி 25-ல் திருமணம் செய்து கொண்டு, மூன்று நாளில் 28-ம்தேதி கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார்.  இந்த முறை கோவை திரையரங்கு ஒன்றை மு.ராவும் ராஜமாணிக்கமும் தீயிட்டுக் கொளுத்தியதாக வழக்கு. அந்த வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனை. 

‘‘மணப் பெண்ணை நிச்சயத்துவிட்டு... சட்டப்பிரிவை எரித்து சிறை சென்று... 9 மாதம் சிறை  வாழ்வு கழித்து... சிறையிலிருந்து வந்து அப்பெண்ணையே திருமணம் செய்துவிட்டு... திரும்ப 3-ம் நாள் சிறை சென்று... மீண்டும் 2 ஆண்டு காலம் தண்டனை வாங்கிய அது ஒரு புரட்சிக்காலம்...!’’ என்றுதான் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டிக்காக அணுகியபோது ஒரு குழந்தை போல் அந்த நிகழ்வை என்னிடம் வர்ணித்தார் மு.ரா.

இன்றைக்கு இதுவெல்லாம் கேட்பதற்கு கதை போல் இருக்கும். ஆனால் அன்றைக்கு அதுதான் வரலாறு. அந்த திராவிட இயக்க வரலாறு அவருக்கு பின்னாளில் எம்.எல்.சி, எம்.எல்.ஏ, எம்.பி என பல பொறுப்புகளை அளித்து இருக்கிறது. உடல் என்பது மறைந்தாலும், வாழ்க்கை என்பது வரலாறு. அந்த பேறு சிலருக்கு மட்டும்தான் வாய்க்கிறது. திராவிட இயக்க வரலாற்றில் அந்த வாய்ப்பு மு.ராவுக்கும் கிடைத்திருக்கிறது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close