[X] Close

முதுமையும் சுகமே 04: முற்பகல் செய்யின் பிற்பகல் முடக்கும்


04

  • kamadenu
  • Posted: 11 May, 2019 12:11 pm
  • அ+ அ-

செல்லப்பன் தாத்தாவுக்கு 75 வயது. அன்றும் வழக்கம்போலத்தான் நடைப்பயிற்சி முடித்துவிட்டுத் தோட்ட வேலைகளைச் செய்துகொண்டிருந்தார். திடீரென உடலில் சிறு தள்ளாட்டம், பலவீனம். மனைவியை அழைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தவர், அப்படியே சோபாவில் சரிந்துவிட்டார்.

பதறிய மனைவி உடனே சுதாரித்துக்கொண்டு ஒருவேளை அவருடைய ரத்த சர்க்கரையின் அளவு தாழ்ந்திருக்கலாமோ (Hypoglycemia) என யோசித்துக்கொண்டே, பழரசம் கலந்து எடுத்துவருவதற்குள் செல்லப்பனின் நினைவு தப்பிப்போனது.

அவருடைய மகனுக்குத் தகவல் தரப்பட்டது. மருத்துவரான மகன் சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டார். அவசர ஊர்தி அனுப்பப்பட்டு மூளையை சி.டி. ஸ்கேன் செய்ததில் செல்லப்பனின் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் களில் ஒருபுறம் அடைப்பும் மறுபுறம் குருதிக்கசிவும் ஏற்பட்டதால் நினைவிழப்பு, வலது கை, கால் செயலிழப்பு, முகவாதம், பேசும் திறனிழத்தல் போன்றவை ஏற்பட்டிருந்தன. இதற்கு பெயர் பக்கவாதம் (Hemiplegia) என்றார் நரம்பியல் நிபுணர்.

சட்டென முடக்கும்

கணநேரத்தில் வாழ்க்கையையே ரணமாக்கிவிடும் கணங்கள். செல்லப்பனுக்குப் பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருந்தாலும், நாவின் சபலத்துக்கும் இனிப்புக்கும் இரையாகாமல் உடற்பயிற்சி, திட்டமிடப்பட்ட உணவு, உட்கொள்ளும் மருந்து என சமரசம் செய்துகொள்ளாதவர்.

மனஉளைச்சல்களைத் தவிர! வீட்டிலும் சமரசம் செய்துகொண்டு சம்சார வாழ்க்கையை, சமுதாய வாழ்க்கையை அறத்தோடு வாழ்ந்தவர்தான். இப்படிப்பட்டவருக்கு ஏன் இப்படி வரவேண்டும்? குடும்பத்தினருக்கு ஆயிரம் கேள்விகள்.

செல்லப்பனைப் போன்ற கட்டுப்பாடாக வாழ்ந்தவர்களுக்கே இப்படி என்றால், நோய்களைக் கட்டுக்குள் வைக்காமல், மருந்து களையும் சரியாக உட்கொள்ளாமல், மன உளைச்சலிலும் அதைத் தணிக்கிறேன் பேர்வழி என்று தண்ணியும் தம்மும் அடிக்கிற அநேகர் முதுமையில் பக்கவாதப் பாதிப்போடு மருத்துவமனைக்கு வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இன்றைய சூழலில் முதியவர்களை மூலையில் முடக்கிப்போடும், தன்னம்பிக்கையை நொறுக்கும் நோய்களில் முக்கியமானது முடக்குவாதம் என்ற Stroke.

அறிவே துணை

முடக்குவாதம் எனப்படும் கை-கால் செயலிழப்புக்கான காரணங்கள் பற்றியும், அதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் முழுப் புரிதலை மூத்த குடிமக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுவே முதுமையில், தனிமை தரும் வெம்மையில், துணையும் தளர்ந்து போய் இருக்கும் காலத்தில் துணிவோடு வலம்வர வாய்ப்பை அமைத்துத் தரும்.

சராசரியாக ஒரு நபருடைய மூளையின் எடை ஆண்களுக்கு 1,300-1,400 கிராம். இதுவே பெண்களுக்கு 100 கிராம் குறைவாக இருக்கும். ஆனால், எடைக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. நம் இதயம் ஒரு நிமிடத்துக்குச் சராசரியாக 5 லிட்டர் ரத்தத்தை உந்தித்தள்ளுகிறது என்றால், அதில் சுமார் 750 மி.லிட்டர் ரத்தம் மூளைக்குத்தான் செல்லும்.

அதாவது 100 கிராம் மூளைக்கு 55-60 மி.லிட்டர் ரத்தம் தேவைப்படும். அது 20-30 மி.லிட்டராகக் குறைந்தாலே மூளைப் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிடும். அதுவே 20 மி.லிட்டருக்குக் குறைந்தால் சரிசெய்ய முடியாத இழப்பை, இறப்பை மூளையின் செல்களுக்கு ஏற்படுத்திவிடும்.

பக்கவாத வகைகள்

முடக்குவாதத்தால் (Stroke) பாதிக்கப்பட இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. 1. மூளைக்குச் செல்லும் சிறு அல்லது பெரு ரத்தக்குழாய்களில் அடைப்பு (Ischemic Stroke) 2. மூளைக்குச் செல்லும் சிறு அல்லது பெரு ரத்தக்குழாய்களில் ரத்தக்கசிவு (Haemorrhagic Stroke). சுமார் 80-85% பேருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பால்தான் கை-கால் செயலிழப்பு ஏற்படுகிறது.

15% பேருக்கு ரத்தக்கசிவால் ஏற்படுகிறது. சிலருக்கு Transient Ischemic Attack என்று சொல்லப்படுகிற கணநேர (அ) சில நிமிடங்கள் வரையிலான அடைப்பு தோன்றி மறைந்தும்விடும். ஆனால், இது எதிர்காலத்தில் பக்கவாதம் வருவதற்கான ஓர் எச்சரிக்கை மணி.

இப்படி அடைப்பு ஏற்பட முக்கியக் காரணம் ரத்தக்குழாய்களில் படிந்து கிடக்கும் கொழுப்போ ரத்தக்கட்டியோ பிய்த்துக்கொண்டு போய் மூளை ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதால்தான்.

எல்லையில் வரும் வலி

ஏன் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது? முதுமையில் இயற்கையாகவே ரத்தக்குழாய்களில் ஒருவித விரைப்பும் தடிப்பும் ஏற்படுவதால், ரத்தக்குழாய்களில் ஏற்படும் கொழுப்புப் படிமானத்தால், பாரம்பரியம் சார்ந்து, கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களால், கொழுப்பு சேர்ந்த உணவு, பேக்கரி பண்டங்கள், கண்ட எண்ணெய்யில் பொரித்த பஜ்ஜி போண்டாக்களைச் சாப்பிடுவது, ‘மாமியார் வீட்டுக்குப் போவதுபோல’ மருந்துகளை எப்பொழுதாவது எடுத்துக்கொள்வது, புகை, மது, மனஉளைச்சல் ஆகியவையே முக்கியக் காரணங்கள்.

பக்கவாதம் வருவதற்கான குறிகுணங்கள் எப்படி இருக்கும் என்றால்… பாதிக்கப்படப்போகும் உடல் பாகங்களில் குறிப்பாக முகம், கை, கால்களில் ஒருவித மதமதப்பு, குத்தல், பலவீனம் ஏற்படலாம். இனம்புரியாத ஒருவிதக் குழப்பம், படபடப்பு, பேசும்போது வாய் குழறுதல், பார்வையில் தடுமாற்றம், மயக்கம், தலைவலி, திடமாகக் காலூன்றி நிற்க முடியாமை (அ) நடப்பதில் தடுமாற்றம் போன்றவை இருக்கலாம்.

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் மூளையில் எச்சரிக்கைச் சிவப்பு விளக்கு எரிய வேண்டும்: உடனே அவசர ஊர்தியை அழைத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் அனைத்து வசதிகளும் இருக்கும் மருத்துவமனைக்கு உதவியாளர் துணையுடன் செல்ல வேண்டும்.

உலகம் முழுவதும் இறப்புக்கு காரணமாக இருக்கும் நோய்களில் இன்றைக்கு இரண்டாம் இடத்தில் முடக்குவாதம் (Stroke) இருக்கிறது. இதைப் பற்றி இன்னும் கூடுதலாகத் தெரிந்துகொள்வோம்.

- டாக்டர் சி. அசோக்

(தொடர்ந்து பேசுவோம்)

கட்டுரையாளர், குடும்ப நல - முதியோர் மருத்துவ ஆலோசகர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close