[X] Close

சங்கம் வைத்து ஜனநாயகம் வளர்த்த கதை


  • kamadenu
  • Posted: 11 May, 2019 12:05 pm
  • அ+ அ-

எனக்கும் எல்லா வசதிகளுடன் கூடிய நல்ல வீடு வாங்கும் ஆசை உதித்தது. பல நிறுவனங்களின் கட்டுமானங்களைப் பார்த்து, அறிந்து, தெரிந்து, தரம் பற்றி உணர்ந்து எனக்கேற்றாற்போல் ஒரு வீட்டை முன்னணி நிறுவனத்திடம் வாங்க முடிவுசெய்தேன். பெரிய நிறுவனம் சொன்னதைச் சொன்னபடி செய்வார்கள் என நினைத்தேன்.

ஆனால், எல்லாம் அவர்கள் விருப்பபடி அரங்கேறியது. நாள் பார்த்து நல்லது செய்ய வாய்ப்பற்ற நிலை. வங்கி அலுவல் நேரம் முடிய ஒரு மணிநேரமே இருந்த நிலையில், முதல் நாள் மாலை அழைத்தார்கள் மறுநாள் பத்திரப்பதிவுக்கு, வரைவுக் காசோலையுடன் வரச் சொன்னார்கள்.

நாள்தான் பார்க்கவில்லை நேரமாவது பார்க்கலாம் என்றால் அதையும் அவர்களே தீர்மானித்தார்கள். நல்லபடியாக (அவர்களுக்கு) எல்லாம் முடிந்து சாவியைப் பெற்றுக்கொள்ள அழைத்தனர். கனவு இல்லமாயிற்றே குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு சென்றேன். பெரிய சாவி, பூங்கொத்துடன் அளிப்பார்கள் என நினைத்தேன்.

ஆனால், சாவியை ஒரு பிளாஸ்டிக் வளையத்தில் போட்டுத் திணித்துவிட்டார்கள். அதில் என் கனவையும், வாழ்நாள் சம்பாத்தியத்தையும் அடக்கினர். என் மனைவியைப் பார்த்தேன். இருவரின் மனநிலையும் ஒரே மாதிரிதான் இருந்தது. ‘அவ்வளவுதானா’ என்று ஸ்தம்பித்து நின்றோம். அனைத்தையும் தாண்டி ஒரு வழியாக என் பிறந்தநாளில் குடிபுகுந்தோம்.

ஆசை காட்டிய கட்டுமான நிறுவனம்

புது இடம், புது மனிதர்கள் எல்லாம் பழகக் கால தாமதமாகும் என்றெண்ணிய எனக்கு அழகிய நண்பர் வட்டம்  ஒன்று கிடைத்தது. அவர்களில் பலர் நான்கு வருடத்துக்கு முன்னரே பணம் கட்டியும் கட்டுமான நிறுவனம் வீட்டைப் பதிவுசெய்துதராமலும் வீட்டை முழுமையாக ஒப்படைக்காமலும் இருப்பது தெரியவந்தது. அதனால் மீதமிருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் என்னை விட்டு அகன்றது.

கட்டுமான நிறுவனம் உறுதி அளித்தும் கொடுக்கத் தவறிய சில அடிப்படை வசதிகள், கூடுதல் வசதிகள் குறித்து நிறுவனத்துடனான கூட்டத்தில் பட்டியலிட்டுக் கேட்டோம். ஆனால், அவர்கள் அனைத்துக்கும் சிறிதும் செவி சாய்க்கவில்லை. மாதங்கள் கடந்தன.

ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அடிப்படை வசதிகளைப் பெறுவதற்குச் சங்கம் அமைப்பது அவசியம். அப்படி அமைக்கும்போதுதான் நமக்கான தேவைகளை நாம் வலியுறுத்திப் பெற முடியும் என முடிவெடுத்தோம்.

சங்க நிர்வாகக் கூட்டமைப்புக்கான தேர்தல் குழு அமைக்கப்பட்டுத் தேர்தல் விதிமுறைகளை வடிவமைத்தோம். தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. எங்கள் நண்பர் வட்டம் ஒரு குழுவாகப் பொறுப்பை ஏற்கத் தயாரானார்கள்.

இறுதிக் கட்டத்தில் என்னையும் ஒரு சிறு பதவிக்கு அழைத்தனர். ராமருக்கு அணில் உதவியதுபோல நானும் ஏதாவது நன்மை செய்யலாம் என ஒப்புக்கொண்டேன். இறுதியில் எங்கள் குழு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒன்பது பேர் கொண்ட குழுவாக எங்கள் சங்கம் ஒருவானது. பதவி ஏற்ற தினத்திலிருந்தே பிரச்சினைகளும் அதைச் சமாளிப்பதும் சவாலாக இருந்தன.

சங்கக் கூட்டத்துக்கே பல மணிநேரம் செலவிடப்பட்டது. கட்டுமான நிறுவனம் கொடுக்கத் தவறிய அடிப்படை, கூடுதல் வசதிகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அதேநேரம் சங்கத்தைப் பலப்படுத்த அதைப் பதிவுசெய்யும் ஏற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவேறின. கட்டுமான நிறுவனத்தினர் ‘யானைப் பசிக்குச் சோளப்பொறிபோல’ சில சிறு பணிகளைச் செய்து கொடுத்தனர். அதற்குப் பின் திடீரெனக் கட்டுமான நிறுவனத்தினர் முன்கூட்டியே வசூலித்த ஒரு வருடப் பராமரிப்புக் கட்டணம் முடிவுக்கு வருகிறது என அறிவித்தனர்.

அனைவரின் கோபத்தின் வெளிப்பாடாகக் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அவர்களின் மேலான்மை இயக்குநர் அல்லது அதற்கு இனையான பொறுப்பில் இருப்பவர்கள் வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். காவல்துறைக்குத் தகவல் கொடுத்து எங்களைக் கலைத்தனர்.

பல மின்னஞ்சல்கள் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஒரு இனிய காலைப் பொழுதில் பராமரிப்புப் பணியில் இருந்த அனைத்து ஆட்களையும் கட்டுமான நிறுவனத்தினர் திரும்பப் பெற்றுக்கொண்டனர். சலசலப்பு அதிகரித்தது. தண்ணீர் இல்லை. நீர் மோட்டாரை இயக்க யாருக்கும் தெரியவில்லை. சங்கத்தைக் குடியிருப்பு வாசிகளான உறுப்பினர்கள் சாடத் தொடங்கினர்.

கைப்பேசியில் மேலாளருடனும் முதன்மை நிதி அலுவலரிடமும் நீண்ட உரையாடல் நடத்தி ஒரு வழியாக உடன் கூட்டம் நடத்த ஒப்புக்கொண்டார்கள். மறுநாள் நடந்த கூட்டத்தில், எங்களது கோரிக்கையைச் சட்டைசெய்யாமல் சிறிதும் சலனமின்றிப் பராமரிப்புக் கட்டணத்தை கட்டுமான நிறுவனத்தினர் அதிகரித்தனர்.

மூன்று மாதக் காலத்துக்குப் பின் எங்கள் குடியிருப்பு நலச் சங்கமே  பராமரிப்புப் பணியையும் ஏற்று நடத்த வேண்டும் என்ற முடிவோடு வேலையில் இறங்கினோம். பல நிறுவனத்திடமிருந்து விலை மேற்கோள்கள் பெற்றோம். அதில் தரம், விலை ஆகியவற்றின் அடிப்படையில் சிலரைத் தேர்வு செய்தோம்.

நிறுவனம் வசூலித்ததைவிடக் குறைவான கட்டணத்தை நிர்ணயித்தோம். உறுப்பினர்கள் கரவொலி ஓசையுடன் ஒப்புதல் அளித்தனர். இப்போது எங்களை நாங்களே நிர்வகித்து வருகிறோம். உண்மையான ஜனநாயகத்துக்கான எடுத்துக் காட்டை வீட்டிலிருந்து தொடங்கியிருக்கிறோம்.

சங்கத்தில் பூசல்

பொதுவாக குடியிருப்போர் நலச் சங்கத்தில் சில சச்சரவுகள் வரும். எங்கள் சங்கமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு கட்டத்தில் பூசலுக்கும் பிரச்சினைக்கும் பதில் கூறவே நேரம் தொலைந்தது. சிலர் கட்டணம் செலுத்த மறுத்தனர். இருப்பது அவர்கள் வீடு என்ற எண்ணமில்லாமல் அதற்குப் பல காரணங்களைக் கூறினர்.

சங்கத்தின் உட்பூசலைத் தீர்க்கத் தெரியாது அதை உறுப்பினர்களிடம் சிலர் எடுத்துச் செல்ல, அவசரக் கூட்டம் என்ற பெயரில் பழி சுமத்தினர். சங்கம் இரு பிரிவானது, வேலைகள் முடங்கின. நண்பர்கள் எதிரியானார்கள். பதவி மனிதநேயத்தை மண்ணில் புதைத்தது. சிரிப்பு சிக்கனமானது. வெறுப்பு வெளியே தெரிந்தது. மொத்தமாக அன்பு அடங்கி அனல் பறந்தது.

குடியிருப்போர் நலச் சங்கம் என்பது ஒரு தொண்டுப் பணிக்கு நிகரானது. அதன் மகத்துவத்தைப் புரிந்து சங்க நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும். அதே நேரம் சங்க நிர்வாகிகளை நம்மில் ஒருவராகக் குடியிருப்போர் கருத வேண்டும்.

அவர்கள் தங்களுக்கான பிரநிதிகள்தாமே தவிர, அவர்கள் வேலையாட்கள் அல்ல என்பதையும் குடியிருப்போர் உணர வேண்டும். இந்த இரு புரிதலும் அவசியம் வேண்டும் என்பதையே எனது அனுபவம் உணர்த்துகிறது. இது குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் அனைவருக்கும் பொருந்தக்கூடியது.

- ராமசாமி

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close