[X] Close

தன்னையே சரிசெய்து கொள்ளும் கான்கிரீட்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 12:09 pm
  • அ+ அ-

-ஜி.எஸ்.எஸ்

பல இடங்களில் நாம் பார்க்கும் காட்சிகள்தாம் இவை. வெடிப்புகளுடன் காணப்படும் பாலங்கள், எந்த நேரம் எது நடக்குமோ என்ற பயத்தை உண்டாக்கும் சுவர் வெடிப்புகளைக் கொண்ட கட்டிடங்கள், கான்கிரீட் சாலைகள்கூட ஆங்காங்கே வாய் பிளந்து நிற்பதைப் பார்த்திருப்போம்.

கான்கிரீட் என்பது கட்டுமானங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதில் காலப்போக்கில் விரிசல்களும் வெடிப்புகளும் உண்டாகும்போது அவை அந்தக் கட்டுமானத்தைப் பலவீனப்படுத்துகின்றன.

நம் உடலில் சிறு காயங்கள் ஏற்படும்போது அவற்றை மருந்தால் குணப்படுத்துகிறோம். மருந்துகளே இல்லாதபோதும் தானாகவே அந்தக் காயங்கள் காலப்போக்கில் ஆறிவிடும். இது மனித உடலின் அற்புதம்.

இதேபோல கான்கிரீட்டில் விரிசலோ வெடிப்போ ஏற்படும்போது அது தானாகவே சரியாகி மீண்டும் அந்தப் பகுதி பழைய உறுதியோடு செயல்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

‘இதெப்படிச் சாத்தியம்?’ என்ற கேள்விக்குச் சாத்தியம்தான் என்ற பதிலை உறுதிபட அளித்து வருகின்றன நவீனத் தொழில்நுட்பங்கள். ‘தானாகவே தன்னைச் சரி செய்து கொள்ளும் (Self-healing) முறை’ கான்கிரீட் கட்டிடத்தின் ஆயுளை அதிகமாக்குகிறது. இதனால் நேரமும் பணமும் மிச்சப்படுகிறது.

இந்த நவீன கான்கிரீட் எப்படிச் செயல்படுகிறது?

இதற்கான ஆராயச்சி இரண்டு வழிகளில் நடைபெற்றது. ஒன்று கான்கிரீட்டிலேயே ஹைட்ரேட்களைச் சேர்ப்பது. இதன் மூலம் காலப்போக்கில் விரிசல் உண்டாகும்போது அதை இந்த ஹைட்ரேட்கள் ஓரளவு அடைத்துவிடும் (இது நெடுங்காலமாக நடைபெற்று வருகிற ஒன்றுதான்).

இதை முழுமையான நவீனத் தொழில்நுட்பம் என்று கூறிவிட முடியாது. சில பழங்காலக் கட்டிடங்கள், மிகக் குறைவான பராமரிப்புடன் மிக நீண்டகாலம் எந்தவிதச் சேதமுமின்றிக் கம்பீரமாகக் காட்சிதருவதை நாம் பார்த்திருப்போம். இதன் அடிப்படைகூட அதை எழுப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டில் சிலவகை வேதியல் பொருட்கள் கலக்கப்பட்டிருப்பதுதான்.

15.jpg 

ஆனால், சமீபகாலமாக ஈரச்சத்தற்ற (Non hydrated) சிமெண்ட் குறைவான அளவிலேயே கிடைப்பதால், தானாகவே சரி செய்து கொள்ளும் தன்மை கான்கிரீட்டுக்கு இல்லாமல் போகிறது.

இப்படி இயல்பாகவே கான்கிரீட் தன் விரிசலை சரி செய்து கொள்ள வேண்டுமானால் பல காரணிகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். வெப்பநிலை, பாதிப்பின் அளவு, கான்கிரீட் உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது போன்றவைதாம் அந்தக் காரணிகள்.

செயற்கை முறையில் மனிதனால் அறிமுகப்படுத்தப்பட்ட தானாகவே சரி செய்து கொள்ளும் கான்கிரீட் 1994-ல் உருவாக்கப்பட்டது. ஒருவித இணைப்பானை சிறு காப்ஸ்யூல் வடிவில் கான்கிரீட் நடுவே பொருத்திவிடுவார்கள்.

கான்கிரீட்டில் விரிசல் உண்டாகும்போது இந்தக் காப்ஸ்யூல் உடைந்து உள்ளிருக்கும் ‘விரிசலைச் சரி செய்யும் பொருள்’ வெளிப்படும்.

காலப்போக்கில் இணைப்பான்களுக்குப் பதிலாக வேறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் பாக்டீரியா தொடர்பான செயல்முறை சமீபத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இன்னொரு வழிமுறை கான்கிரீட்டில் சிலவகை பாக்டீரியாக்களைக் கலந்து விடுவது.

கான்கிரீட்டில் விரிசல் உண்டாகும்போது அதன் வழியாகக் கொஞ்சமாவது தண்ணீர் உள்ளே செல்லும். தங்கள்மீது தண்ணீர் பட்டதும் அதுவரை செயலற்று இருக்கும் பாக்டீரியா செயல்படத் தொடங்கும். ஒருவித கால்சைட் எனப்படும் வேதியல் பொருளை இது வெளிப்படுத்தும். இதன் காரணமாக விரிசல் அடைபடும்.

இந்த வகை கான்கிரீட்டை பயோ-கான்கிரீட் என்றும் கூறுகிறார்கள் (பயோ என்றால் உயிர் தொடர்பான என்று பொருள். பாக்டீரியா உயிருள்ளவை. அவற்றை கான்கிரீட்டில் கலப்பதால் இதை பயோ-கான்கிரீட் என்கிறார்கள்). தண்ணீர் விட்டதும் செயல் வடிவம் பெறும் பாக்டீரியா கால்ஷியம் கார்பனேட்டை உருவாக்குகிறது. இது விரிசலைச் சரி செய்கிறது.

பாலிமர்களைக் கொண்டு தன்னையே சரிசெய்து கொள்ளும் கான்கிரீட்களை உருவாக்குகிறார்கள். நேரடியான வெப்பமோ மின் அலையோ தன்னைத் தீண்டும்போது இந்த பாலிமர்கள் தங்களைச் சுருக்கிக் கொள்கின்றன. இதன் தொடர் விளைவாக விரிசலும் தன்னை மூடிக் கொள்கிறது.

தன்னையே சரி செய்து கொள்ளும் கான்கிரீட்டின் விலை அதிகம்தான். ஆனால், காலப்போக்கில், குறைவான பராமரிப்பு செலவு போன்ற காரணங்களால் இந்த அதிகப்படி விலை ஏற்கத்தக்கதாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நவீன கான்கிரீட்டைப் பயன்படுத்தும்போது பாக்டீரியா அல்லது பாலிமர் போன்றவை செயல்படும்போது அந்தப் பகுதி பலவீனமடைந்து விடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. விரிசலைச் சரி செய்யும்போது வழக்கமான கான்கிரீட் 15 சதவீகிதம் அதிகம் உறுதி பெறுகிறது என்றால், தன்னையே சரி செய்து கொள்ளும் கான்கிரீட் செயல்படும்போது அந்தப் பகுதியின் உறுதி 25 சதவிகிதம் அதிகமாகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதிக அளவில் இந்த நவீன கான்கிரீட் உற்பத்தி செய்யப்படுவதில்லை. என்றாலும் இதன் உற்பத்தி வருங்காலத்தில் பெருகவே செய்யும். காரணம் அது காலத்தின் கட்டாயம்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close