[X] Close

புதிய பறவை 02: இரவாடிப் பறவையின் ராஜாங்கம்


02

  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:36 am
  • அ+ அ-

-டாக்டர் வி. விக்ரம்குமார்

மழையின் சாரத்தை உட்கிரகித்துக்கொண்டு ஈரமணத்தைக் காற்றில் அனுப்பிக்கொண்டிருந்தன மரங்கள்… ஒரு பக்கம் ஆந்தைகளின் அலறல், மறுபக்கம் பூச்சிகளின் சிணுங்கல், சருகுகளில் ஊர்ந்து செல்லும் ஊர்வனவற்றின் ஓசை… நிலவின் ஒளிச்சிதறல் என இயற்கையின் கரங்கள் இரவுக்கு ஒளி கொடுத்திருந்தன!

கேரள மாநிலம் தட்டக்காடு பறவைகள் சரணாலயம். விடுதிக்கு வெளியே இளைப்பாறிக் கொண்டிருந்தோம். உயிரின ஆர்வலர் சுதீஷ், தட்டக்காட்டுக்குள் இரவுக் காணுலா போகலாம் என்றார். வாய்ப்பிருந்தால் இரவாடிப் பறவைகளையும் உயிரினங்களையும் தரிசிக்கலாம் என்ற ஆர்வத்தில் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தோம்.

பிரகாசமாக்கிய பறவை

இயற்கையின் அதிசயங்களையும் இரவின் அமைதியையும் அனுபவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மரக்கிளை சுட்டிக்காட்டப்பட்டது. ‘சத்தம் எழுப்பாதீர்கள்… அமைதியாய் இருந்தால் ‘பக்கி’ (Great eared night jar) பறவையை ரசிக்கலாம். இது ஓர் ‘இரவாடி’ என்றார் வழிகாட்டி.

அனைவரின் கால்களும் அந்த இடத்திலேயே பூமியில் நிலைகொண்டன! கண்கள் மட்டும் சுட்டிக்காட்டிய திசையில் சட்டென்று திரும்பின! முதன்முறையாக அந்த இரவாடிப் பறவையை மிகமிக அருகில் தரிசிக்க முடிந்தது.

நாங்கள் பக்கியைக் கண்கொட்டாமல் ரசித்ததைப் போலவே, கிளையில் கம்பீரமாக அமர்ந்திருந்த பக்கி, தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியை ரசித்துக்கொண்டிருந்தது. இருளுக்கு நெருப்பு ஒளிகூட்டுவதைப் போல, இருள் சூழ்ந்த அன்றைய இரவைப் பிரகாசமாக்கியது பக்கி!

பகல் நேரத்தில் தனது உருமறைத் தோற்றத்தால் எதிரிகளிடமிருந்து தப்பித்துகொள்ளக்கூடியது இந்தப் பறவை. தரையில் கூடுகட்டுவதற்கு அதன் உடல் நிறமும் உதவுகிறது. அந்தகார இரவிலும் சலிப்பின்றி அமர்ந்திருந்த பக்கியை ரசித்துவிட்டு, அடுத்த இரவாடியைத் தேடி எங்கள் பயணம் தொடர்ந்தது.

கட்டுரையாளர்,

சித்த மருத்துவர் -

இயற்கை ஆர்வலர்,

தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close