[X] Close

360: வெளிச்சத்துக்கு வரும் காஃப்கா


360

  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:16 am
  • அ+ அ-

பத்து ரூபாய்க்கு பாறை ஓவியங்கள்...

தமிழகத்தில் அதிகளவில் பாறை ஓவியங்களைக் கொண்ட மாவட்டம் கிருஷ்ணகிரி. பண்டைக்கால மனிதர்களின் கலை வெளிப்பாடுகளான இந்த ஓவியங்கள் கல் குவாரிகளால் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன. அவற்றைப் பதிவுசெய்து சிறுவெளியீடுகளாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம். பத்து ரூபாயில் ஒரு புத்தகம் என்று திட்டமிட்டு, தொல்லியல் தொடர்பான 100 புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் இந்நூல் வரிசையின் பதிப்பாசிரியரும் ‘புது எழுத்து’ இலக்கிய இதழின் ஆசிரியருமான சுகவன முருகன். அதன் முதற்கட்டமாக மல்லப்பாடி தொல்கிராமம், காவேரிப்பட்டினம் பட்டயங்கள், அத்திமுகத்து அழகிய சோளீஸ்வரம் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

மாம்பலத்திலும் நுங்கம்பாக்கத்திலும் புத்தகக்காட்சி

கோடை விடுமுறையைப் புத்தகங்களோடு செலவழிக்கும் எண்ணத்தோடுஇருபது நாள் புத்தகக்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்று (மே 11) தொடங்கும் புத்தகக்காட்சி இம்மாத இறுதி வரை தொடர்கிறது. 10-15% தள்ளுபடியில் புத்தக வேட்டையாடலாம்.

இடம் 1: ஸ்டார் நெட், ஆர்ய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை.

இடம் 2: டயானா புக் ஸ்டால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்.

வெளிச்சத்துக்கு வரும் காஃப்கா

ஜெர்மானிய எழுத்தாளர் காஃப்காவின் வெளிவராத கையெழுத்துப் பிரதிகளை வங்கி லாக்கர்களைத் திறந்து இஸ்ரேலிய தேசிய நூலகத்தில் ஒப்படைக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளில் இருக்கும் உள்ளடக்கம் என்னவென்று தெரியவரவில்லை. நண்பரும் பதிப்பாளருமான மாக்ஸ் ப்ராடிடம் தனது எழுத்துகளை ஒப்படைத்துவிட்டு, அவற்றை வாசிக்காமலேயே எரிக்கும்படி கூறி விரைவிலேயே காசநோயால் காஃப்கா இறந்துபோனார். ஆனால், மாக்ஸ் ப்ராட் தனது நண்பரின் விருப்பத்தை மீறி, அவரிடமிருந்த ‘தி ட்ரையல்’,

‘தி காஸில்’ மற்றும் ‘அமெரிக்கா’ நாவல்களை வெளியிட்டார். இந்த வெளியீடுகளின் வழியாகவே காஃப்கா இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளராக அறியப்பட்டார். மாக்ஸ் ப்ராட் தன்னிடம் வைத்திருந்து தனது காரியதரிசியிடம் ஒப்படைத்த வெளியிடப் பெறாத காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் தொடர்பாகத்தான் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. காஃப்கா வாசகர்கள் ஆனந்தக் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சிறுவர் சிறுமிகளுக்குக் கோடை தத்துவ முகாம்

இளம் தத்துவவாதிகளை உருவாக்குவதன் மூலம் இன்னும் மேலான உலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தத்துவப் பேராசிரியர் சுந்தர் சருக்கை, சென்னையில் 6, 7, 8-வது படிக்கும் குழந்தைகளுக்குக் கோடை தத்துவ முகாமை நடத்துகிறார். குழந்தைகளின் விளையாட்டு, வேடிக்கைப் போக்குக்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்தித் தத்துவங்களையும் கேள்விகளையும் அறிமுகப்படுத்தும் இரண்டு நாள் முகாம் இது. ‘இந்து தமிழ்’ நாளிதழும், பேர்பூட் பிலாசபர்ஸ் அமைப்பும் சேர்ந்து நடத்துகிறது. பதிவுசெய்ய admin@barefootphilosophers.org எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

இடம்: ஏ.ஐ.சி.யு.எஃப். ஹவுஸ், நுங்கம்பாக்கம், சென்னை. தொடர்புக்கு: 9840787437

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close