[X] Close

ஆண்களுக்காக 10: ஒரு நல்ல மனைவிக்கான அடையாளம்தான் என்ன?


10

  • kamadenu
  • Posted: 09 May, 2019 16:04 pm
  • அ+ அ-

-பாரதி ஆனந்த்

"புள்ளைங்களுக்காக பொறுத்துக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா இந்தத் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு என்றைக்கோ ஓடியிருப்பேன்" உன்னத இயக்குநர் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தில் லக்‌ஷ்மி (நடிகை அஸ்வினி) பேசும் வசனம் இது.

இந்த வசனத்தை வெளியில் வெளிப்படையாகப் பேசாமல் எத்தனை எத்தனையோ லக்‌ஷ்மிகள் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

நேர்த்தியான உடை, சாதுவான தோற்றம், அமைதியான பேச்சு என்று கனவானாகக் காட்சியளித்தாலும் வீட்டுக்குள் வார்த்தைகளாலும் பார்வைகளாலும் சில நேரம் கைகளாலும் வன்முறை செய்யும் சுந்தரவடிவேலுவைப் போல் எத்தனை கணவன்மார்கள் இருக்கிறார்கள்.

ஒருவேளை தெரிந்தும்கூட குடும்பத்தில் இதெல்லாம் சகஜம்தான் என்று நீங்கள் கடந்திருக்கலாம். இதோ இதே 2019-ல் நான் அப்படியொரு லக்‌ஷ்மியையும் சுந்தரவடிவேலுவையும் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அப்படிக் கடந்து செல்ல இயலவில்லை.

அந்த சுந்தரவடிவேலுவுக்கும் அவரைப் போன்றே உள்ள சில ஆண்களுக்குமானதே இந்தக் கட்டுரை.

பல நூறு லக்‌ஷ்மிக்களின் விசும்பலை வீட்டுச் சுவர் மட்டுமே அறிந்திருக்கிறது என்பதால் இந்தக் கட்டுரை மூலம் செவித்திரைக்குள் துளையிட்டாவது சொல்லிப் பார்ப்போம் என முயற்சிக்கிறேன்.

நான் பார்த்துக் கொண்டிருக்கும் லக்‌ஷ்மியை அந்தச் சிறையில் மீட்டெடுக்கும் முயற்சியை செய்துகொண்டுதான் இதை எழுதுகிறேன். அவள் என் தோழிதான். அவளின் நிஜப் பெயரை சொல்ல முடியாது என்பதால் அவளுக்கு ஒரு தற்காலிகப் பெயர் சூட்டுகிறேன். யமுனா...

யமுனா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். படிப்பில் அவளுக்கு அதீத ஆர்வம். அந்த ஆர்வமே அவளை சிறப்பாகப் படிக்கத் தூண்டியது. பள்ளிக்கூட ஆங்கிலப் புத்தகத்திலிருந்த கேள்விகளை அவள் உரக்க வாசிப்பதை ரசித்த அம்மாவைப் பார்த்ததுமே முடிவு செய்துவிட்டாள் கல்லூரியில் ஆங்கிலம்தான் படிக்க வேண்டுமென்று . விரும்பியதுபோலவே முதல் தலைமுறை பட்டதாரியாகவும் ஆகிவிட்டாள்.

ஆனால், வாழ்க்கை என்ன எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துவிடுகிறதா என்ன?

சற்றும் எதிர்பாராமல் திருமண பந்தத்துக்குள் அவள் தள்ளப்பட்டாள்.  புத்தகங்களில் நிலை கொண்டிருந்த அந்தப் பார்வை அந்தத் திருமணத்துக்குப் பின்னர் இலக்கற்று நிலைகுத்திப் போயின. 'உதிரிப்பூக்கள்' படத்தில் லக்‌ஷ்மிக்கு வைக்கப்படும் முதல் ஃபிரேமிலேயே அவளது கண்கள் இலக்கற்று நிலைகுத்தியிருக்கும். அதுபோலத்தான் என் யமுனாவின் கண்களும்கூட எப்போதுமே இலக்கற்று நிலை குத்தியிருக்கிறது.

லக்‌ஷ்மிக்கும் யமுனாவுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. யமுனா நல்ல வேலையில் கைநிறைய சம்பளத்துடன் இருக்கிறாள். ஆனால், அதுதான்.. அதுவேதான்.. அந்தப் பொருளாதார சுதந்திரம்தான் 'உதிரிப்பூக்கள்' சுந்தரவடிவேலுவிடம்கூட காண முடியாத கோபத்தை, அகந்தையை, ஆக்ரோஷத்தை, வெறுப்பை யமுனாவின் கணவரிடம் காண வைத்தது.

அவளது வேலையை விமர்சிப்பதும் சம்பளத்தைக் கிண்டல் செய்வதும் யமுனாவின் கணவனுக்கு பலே குஷி தரும் பொழுதுபோக்கு. அதுவும் யமுனாவின் அம்மா, அப்பா, உறவினர் யாராவது வீட்டுக்கு வந்துவிட்டால் போதும் யமுனாவை ஏகத்துக்கும் மட்டம் தட்டி பேசி அதிலொரு மகிழ்ச்சி கொள்வார் அந்த சுந்தரபுருஷர். 

யமுனாவும்கூட தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு என்றைக்கோ ஓடியிருப்பாள் அவள் நேசிக்கும் பிள்ளைகள் இல்லாவிட்டால். அந்தப் பிள்ளைகளுக்கு சுந்தரபுருஷரின் லட்சணம் முழுதாகத் தெரியாது. தன் கணவரின் குடிநோய், பெண் வெறுப்பு, அடாவடித்தனம், அடக்குமுறை என யமுனா இளமை முழுவதையும் தொலைத்துவிட்டாள்.

எப்போதாவது என்னுடன் வெளியே வர விரும்புவாள். சில நேரம் குழந்தைகளுடன். சில நேரம் தனியாக. அப்படித்தான் ஒருநாள் யமுனா என்னை போன் போட்டு அழைத்தாள். கருப்பி பாடல் ரொம்பவே பிடிச்சிருக்கு. 'பரியேறும் பெருமாள்' படத்தைப் பார்த்துட்டு வருவோம்... அவர் ஊரில் இல்லை என்றாள்.

படம் முடிந்து திரும்பும்போது நீண்ட மவுனத்துக்குப் பின் பேசினாள். நானும் கருப்பி போலத்தான், நானும் பரியனைப் போலத்தான்.. நான் யார் என்றே தெரியாமலே உழன்று கொண்டிருக்கிறேன். ஓரு சமூகத்தின் சாட்சியை எனது சுய வேதனைக்கு ஒப்பீடாகக் கூறுவது பொருத்தமற்றதாகக் கூட தோன்றலாம் ஆனால் பரியன் நோட்டில் இருக்கும் முட்ட.. முட்ட.. முட்ட... போலத்தான் என் வாழ்க்கையும் இருக்கிறது என்றாள்.

ஜோ மாதிரி எனக்கொரு தேவதை கிடைப்பாளா? என்று கை நீட்டி வேண்டினாள். அடக்குமுறை சாதியால் வந்தால் என்ன பாலினத்தால் வந்தால் என்ன? இரண்டுமே வலி தருவதுதான். யமுனா, உண்மையில் அவளொரு ஆண் தேவதைக்காக எப்போதுமே காத்திருந்தாள் என்பது எனக்குத் தெரியும்.  

அவள் ஏன் அடிமையானாள் என்று அவளுக்கு நிறையவே சொல்ல வேண்டியிருந்தது. உடனே வகுப்பெடுக்க ஆரம்பிக்காமல் விடை பெற்றுவிட்டு சில வாரங்கள் கழித்து யமுனாவிடம் பேசினேன். வாதங்களை எளிதாகப் புரிந்து கொண்டாள். அவளுக்கு ஏற்கெனவே நிதர்சனம் தெரிந்திருந்ததால் அதனை மெனக்கிடலுடன் விளக்க வேண்டிய நிலை இல்லாமல் இருந்தது.

இப்போதெல்லாம் 'உதிரிப்பூக்கள்' லக்‌ஷ்மியைப் போல,  யமுனா புலம்புவதில்லை. எதிர்த்து நிற்கிறாள், துணிந்து பதிலடி கொடுக்கிறாள், தனித்து வாழ்க்கையைத் தொடரவும் ஆயத்தமாகிவிட்டாள். ஆனாலும்கூட தனக்கு என்ன தேவைன்னு தனக்கே தெரியவில்லை என்ற வெறுமை மட்டும் அவளிடம் இருக்கிறது.

யமுனா தனக்கான தேவை என்னவென்பதை தீர்மானிக்க சில காலமாகலாம். அதுவரை அவளது சுற்றமும் நட்பும் அவளுக்கு உறுதுணையாக இருக்கட்டும். என் யமுனா மீண்டு வருவாள்.

என் யமுனாவுக்கு கிடைத்த சுற்றமும் நட்பும்போல் நம்மூரில் எத்தனை யமுனாக்களுக்கு கிடைக்கிறது?

வன்முறைகள் பலவிதம்..

குடும்ப வன்முறைகள் வெறும் சுந்தர வடிவேலு போன்ற வார்த்தை வன்முறையாளர்களுடன் முடிந்துவிடுவது இல்லை. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் என் தோழிகள் பலர் தங்கள் சம்பளப் பணம் விழும் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் கூட தெரியாமல் இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் கணவன்மார்கள் தானே பிராக்ஸியாக பணியாற்றியிருக்கிறார்கள். இவையெல்லாம் கூட வன்முறைதான். மனைவியே என்றாலும்கூட அவள் விருப்பமில்லை பாலுறவு கொள்வது பலாத்காரம் என்றளவுக்கு குடும்ப வன்முறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

யமுனாவின் காயங்கள் மனதோடு, ஆனால் புஷ்பம் உதவி கோரி மறுவாழ்வு மையத்துக்கு வரும்போது ஒரு கண் பார்வை இழந்திருந்தாள். கணவன் குடி போதையில் பாட்டிலை உடைத்து வீசியதில் புஷ்பத்தின் இடது கண் ரெட்டினா சேதமடைந்தது. அவளைவிட அவளது 4 பிள்ளைகள்தான் அதிகமாகக் கதறினர். அப்போதுதான் புஷ்பத்துக்கு பிள்ளைகளுக்காகப் பிரிவதே சரியான முடிவு என்று தோன்றியது. யமுனாவைப் போல் 15 வருடங்கள் யோசிக்கவில்லை. 4 பிள்ளைகளுடன் 6 ஆண்டு திருமண வாழ்விலேயே முடிவைத் தீர்க்கமாக எடுத்துவிட்டாள். இப்போது ஓர் அடுமணையில் வேலையோடு நிம்மதியாக சுயமரியாதையோடு வாழ்கிறார்.

அதிர வைக்கும் ஹவா அக்தாரின் துயரம்..

யமுனா, புஷ்பாவைவிட வன்கொடுமையை அனுபவித்தவர் ஹவா அக்தர். அப்போது அவருக்கு வயது 21 தான். இந்தக் கொடூரம் 2017-ல் நடந்து உலகையே உலுக்கியது. ரஃபிக்குல் இஸ்லாம் என்ற நபர் யுஏஇ-யில் பணியாற்றி வந்தார். கணவர் ஊரில் இல்லாதபோது ஹவா அக்தார் கல்லூரி பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ரஃபிக்குல் மனைவியை எச்சரித்துள்ளார். ஒருமுறை விடுப்பில்வந்த ரஃபிக்குல் மனைவியின் கண்களைக் கட்டி அன்புப் பரிசு ஒன்று தரப்போவதாகக் கூறியுள்ளார். ஹவாவின் வாயையும் டேப்பால் கட்டியுள்ளார். பின்னர் அவரது கையை மேஜை மீது வைக்கச் சொல்லிவிட்டு கசாப்பு கத்தியால் ஹவாவின் கைவிரல்களை துண்டித்துள்ளார். மனைவி படிப்பதில் ஏற்பட்ட பொறாமை காரணமாக இதை செய்ததாக அவரே ஒப்புக் கொண்டார்.

ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறாள் என்றால் தனக்கு ஒரு வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து கொள்கிறாள் என்றுதானே அர்த்தம். துணை என நினைத்து வருபவளை வார்த்தைகளாலும், காம வெறியாலும், பொறாமை, கோபத்தாலும் தண்டிப்பது வெறும் வன்முறை அல்ல தீவிரவாதம்.

ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம் தான் என்ன?

மனைவி படித்திருந்தாலும், பொருளாதார சுதந்திரம் பெற்றிருந்திருந்தாலும், வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும்கூட ஒரு நல்ல மனைவி என்பதற்கு ஆண்கள் (ஒரு சிலர்) சில வரையறைகளை வைத்துள்ளனர். அந்த வரம்புக்குள் வர மறுப்பவர்கள் பிடாரிகள் எனப் பெயர் சூட்டப்படுகிறார்கள். பெண்ணியமா என கட்டைக் குரலில் கர்ஜிக்கிறார்கள். அவள் பேசுவது பெண்ணியம் அல்ல மனிதம். உன் சக மனுஷியை மதிக்கக் கோரும் மனிதம் எனப் புரிந்து கொள்ளுங்களேன்.

சரி, உண்மையிலேயே ஒரு நல்ல மனைவிக்கு அடையாளம் புருஷனோட வார்த்தைக்கு அடிமைப்பட்டு நடப்பதுதான்... இது 'உதிரிப்பூக்கள்' படத்தில் சுந்தரவடிவேலு பேசும் வசனம்.

2019-ல் இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் கணவன்கள் இல்லையென்றாலும் மனைவியின் செல்போனை ஆடிட் செய்வது, ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபேக் ஐடியில் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து ஜொல் விட்டு அவரைப் பரிசோதிப்பது, அவளின் சம்பள கார்டை அபகரிப்பது, சுய சம்பாத்தியமென்றாலும் அவளின் பணத்தை கேட்டுப் பெறச் செய்வது, மனைவியின் உறவுகளை அவமதிப்பது. குறிப்பாக பெற்றோரை அவமதிப்பது என்று நிறைய ஆண்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக குடும்ப வன்முறைகளில் வளர்ந்திருக்கிறார்கள்.

ஒரு நல்ல மனைவிக்கென்று தனிப்பட்ட அடையாளம் ஏதுமில்லை. ஆனால் நல்ல குடும்பத்துக்கு அடையாளம் இருக்கிறது. அவளின் உணர்வுகளுக்கும் அவனின் உணர்வுகளுக்கும் பரஸ்பரம் மரியாதை கொடுத்து, உறவில் உண்மையாக இருத்தலே நல்லதொரு குடும்பம்.

வழிகாட்டிகள் இருக்கிறார்கள் வாருங்கள்..

உலகம் முழுவதுமே பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆசியாவில் அதிகம் ஐரோப்பாவில் குறைவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் குடும்ப வன்முறைக்கான சதவீதம் மட்டும்தான் மாறுகிறதே தவிர எல்லா தேசத்திலும் இத்தகைய வன்முறை நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். சரி ஏன் இத்தகைய வன்முறை நடக்கிறது என ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான நேரங்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் தாங்கள் இயல்புக்கு மாறாக நடந்து கொள்கிறோம் என்பதை உணராமலேயேதான் செயல்படுகின்றனர். தங்களது இணை மீது முழு அதிகாரம் செலுத்த வேண்டும் என விரும்புகின்றனர். இதுதான் நாளடைவில் வன்முறையாக மாறுகிறது. இத்தகைய வன்முறையாளர்களைத் திருத்துவது கடினம். ஆனால், இவர்களிடமிருந்து விடுபடுவது எளிது.

தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதுமே குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சில அமைப்புகள் இருக்கின்றன.

அவற்றின் முகவரி மற்றும் தொடர்பு எண்:

பிசிவிசி அலுவக எண்: 2030, 13வது பிரதான சாலை, பாரதி காலனி, அண்ணா நகர் மேற்கு, அண்ணா நகர், சென்னை, தமிழ்நாடு 600040. தொடர்பு எண்கள்: 044 - 43111143, 18001027282 .

AIDWA அலுவலகம், NO. 13, மசூதி தெரு, சேப்பாக்கம், சென்னை - 600 005. தொலைபேசி எண்: 09489391506, 09442432659

181 சேவை:

பெண்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்திய 181 இலவச தொலைபேசி சேவை கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மனநல ஆலோசகர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் 181 இலவச தொலைபேசி சேவையில் அழைத்து தெரிவிக்கலாம்.

தமிழகம் தாண்டியும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பெண்களின் ஊட்டச்சத்து, கல்வி, ஆரோக்கியம் மேம்பட இயங்கும் அமைப்பு. (Society for Nutrition, Education and Health Action -SNEHA). சினேகா அமைப்பானது மும்பை தாராவி பகுதியில் அதிக அளவில் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவும் வகையில் செயல்படுகிறது. தாராவியில் எல்லா மாநில மக்களுமே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பின் தொடர்பு எண்: +91 9833092463

முதல் புள்ளியே முற்றுப் புள்ளியாக இருக்கட்டும்..

உங்களுக்கு நடக்கும் விஷயங்கள் மன உளைச்சலையோ, விரக்தியையோ கொடுத்தால் அதுதான் வன்முறை. வன்முறைக்கான முதல் புள்ளியிலேயே அதை உணருங்கள். அப்போதே முற்றுப்புள்ளி வைக்க ஆயத்தமாகுங்கள்.

பெண்களில் படித்து நல்ல பணியில் இருப்பவர்கள்கூட இருக்கிறார்கள் அலுவலகத்தில் 300 பேரை நிர்வகிக்கும் பெண்ணாக இருப்பார் ஆனால் வீட்டில் அவர் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருப்பார். கேட்டால் பிள்ளைகளுக்காக எனக் கூறுவார். என் பிள்ளைகளை அப்பாவிடம் இருந்து நான் பிரித்த மாதிரி ஆகிவிடும் என்பார். உண்மையில் எந்த ஒரு பழி உணர்வையும் அவர்கள் சுமக்கத் தேவையில்லை.

உண்மையில் உங்கள் பிள்ளைகளுக்கு அப்பாவைவிட அப்பா இருப்பதால் கிடைக்கும் லைஃப்ஸ்டைலைவிட அமைதி முக்கியம். வன்முறையற்ற வாழ்க்கை முக்கியம். சதா சர்வகாலமும் அம்மாவை அடக்குமுறை செய்யும் அடிக்கும் அப்பாவைப் பார்த்து வளரும் ஆண் பிள்ளைகள்தான் பின்னாளில் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லும் கொடூரனாக மாறுவான்.

சதா வன்முறைச் சூழலில் வளரும் பெண் குழந்தை பின்னாளில் அவளது காதலனோ, நண்பனோ, கணவனோ அடக்குமுறை செய்தால் அதை இயல்பு என நினைப்பாள். வன்முறை தலைமுறை தலைமுறையாக நீண்டு கொண்டே இருக்கும். நீங்கள் அதற்கு தீனி போடும் நபராக மாறிவிடுவீர்கள்.

உங்கள் கணவரைப் பிரிவதால் சமூகம் கேட்கும் கேள்விகளுக்கோ அல்லது பிரிந்து சென்றால் இதைச் செய்வேன் என்று உங்கள் கணவர் கூறும் மிரட்டல்களுக்கோ அஞ்சாதீர்கள். குடும்பத்தை நல்ல முறையில் செலுத்தும் பொறுப்பு மனைவிக்கு மட்டுமல்ல கணவருக்கும் இருக்கிறது. அதை உணர்த்தப் பாருங்கள். அதைவிடுத்து பிள்ளைகளுக்காக என நீங்கள் சொன்னால் அது அவர்களையும் சேர்த்தே ஏமாற்றும் வேலை.

குடும்பத்தை நல்ல முறையில் செலுத்தும் பொறுப்பு மனைவிக்கு மட்டுமல்ல கணவருக்கும் இருக்கிறது.

உரக்கப் பேசுங்கள்:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி, பாலின பேதங்களைப் பற்றியெல்லாம் அரசாங்கம், சமூகம் வெளிப்படையாகப் பேசுகிறது. பள்ளிக் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைப் பற்றி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கிறது. சட்டத்தில் புகார் செய்ய ஷரத்துகள் இருக்கின்றன. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 (Domestic Violence Act 2005) என்று ஒன்று உள்ளது. குடும்ப வன்முறை தண்டனைக்குரிய குற்றம் என்கிறது. குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்ணால் காவல் துறையை நாட இயலும், சமூக இல்லங்களில் பாதுகாப்பாக தங்கிக்கொள்ள இயலும், மருத்துவ உதவிகளைப் பெற இயலும்.

இருந்தாலும்கூட அரசாங்கமும், பொது சமூகமும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களும் நேரடியாக வெளிப்படையாக இத்தகைய கொடூரத்தை எதிர்த்துப் பேசாவிட்டால் இத்தகைய வன்முறைகளில் இருந்து வெளியே வர விரும்பும் பெண்களுக்கு துணிச்சல் கிடைக்காது.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close