[X] Close

ஆட்டத் திருப்பர்கள்: பவன் கல்யாண்- காப்புகளின் இரண்டாவது அத்தியாயம்!


  • kamadenu
  • Posted: 09 May, 2019 08:18 am
  • அ+ அ-

ஆந்திரத்தில் 2014-ல் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது தெலுங்கு தேசம் கட்சி. தேர்தலில் பங்கேற்காவிட்டாலும், அந்தக் கூட்டணியை ஆதரித்துநின்றது அப்போது தொடங்கப்பட்ட பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி. ஐந்தாண்டுகளில் காட்சிகள் முழுவதுமாக மாறிவிட்டன.

ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி, கடந்த ஆண்டு பாஜக கூட்டணியிலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு, மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலைத் தனியாகவே சந்தித்திருக்கிறார். 2014 தேர்தலில் தான் ஆதரித்த பாஜக, தெலுங்கு தேசம் இரண்டையுமே எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார் பவன் கல்யாண். தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டும் பிரதானப் போட்டியாளர்களாகக் களத்தில் நிற்க, தேசியக் கட்சிகளான காங்கிரஸையும் பாஜகவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது போட்டியாளராகக் களம் காண்கிறார் பவன் கல்யாண்.

அண்ணன் காட்டிய வழி

காப்புகளின் ஆட்சியதிகாரக் கனவில் இது இரண்டாவது அத்தியாயம். பவன் கல்யாணிண் அண்ணனும் திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி தொடங்கிய முதல் அத்தியாயம் தோல்வியில்தான் முடிந்தது. 2008-ல் பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கிய சிரஞ்சீவி, மூன்றே ஆண்டுகளில் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2014-ல் ஆந்திர பிரதேசம் பிரிக்கப்பட்டபோது, அதையே காரணம்சொல்லி அரசியலிலிருந்து விலகியும்விட்டார். தெலுங்கு திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம்வந்த சிரஞ்சீவியே அரசியலை விட்டு ஒதுங்கியிருக்கும்போது அவரது நிழலில் நடிகரான பவன் கல்யாண், அரசியலில் வெற்றிபெறுவாரா என்றும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

காப்புகள் சாதி பார்த்து வாக்களிப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. 2009 சட்டமன்றத் தேர்தலில் திருப்பதி, பாலகொல்லு என்று இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் சிரஞ்சீவி. திருப்பதியில் மட்டும்தான் அவர் வெற்றிபெற்றார். காப்புகள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வசிக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலகொல்லு தொகுதியில் சிரஞ்சீவியால் வெற்றிபெற முடியாமல்போனது. ஆனாலும், 16.2% வாக்குகளுடன் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது பிரஜா ராஜ்யம். அத்தேர்தலில் தெலுங்கு தேசத்தை எதிர்த்து ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி பெற்ற வெற்றியில் பிரஜா ராஜ்யத்துக்கு முக்கியப் பங்குண்டு.

கம்மா, ரெட்டி, காப்பு ஆகியவை ஆந்திரத்தின் முக்கியமான விவசாயச் சமூகங்கள். கோதாவரிப் படுகையில் காப்புகள் பெருமளவில் வசிக்கிறார்கள். கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள். மாநிலம் முழுவதும் விரவிப் பரந்திருக்கிறார்கள்.

ஆந்திரத்தில் 16% ஆக இருந்த காப்புகளின் எண்ணிக்கை தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு தற்போது 25% ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரையில், ரெட்டிகளும் கம்மாக்களும்தான் மாறி மாறி ஆந்திரத்தின் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்ற மனக்குறை காப்புகளுக்கு இருந்தது. இப்போது, நான்கில் ஒரு பகுதி எண்ணிக்கை இருப்பதால் ஆந்திர அரசியலில் தங்களை வலுவாக நிறுவிக்கொண்டுவிட முடியும் என்று நம்புகிறார்கள். பவன் கல்யாணுக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கு அதுவே காரணம்.

தெலுங்கு தேசத்துக்கு நெருக்கடி

அண்ணன் சிரஞ்சீவி அரசியலிலிருந்து விலகியதும்தான் தம்பி பவன் கல்யாண் அரசியலுக்கு வந்தார். 2014-ல் ஜன சேனா கட்சியைத் தொடங்கிய பவன் கல்யாண் அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததோடு சரி. 2014 சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றிபெற்றது.

நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குப் பிரதானப் போட்டியாளர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டிதான். ஆனால், சந்திரபாபு நாயுடுவுக்கு பவன் கல்யாணின் அரசியல் எழுச்சி நிச்சயம் ஒரு தலைவலி. காப்புகளும் ரெட்டிகளும் தங்களது வாக்குகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்புகளே அதிகம். 1921-ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பில் காப்புகளின் உட்பிரிவில் ஒன்றாகவே ரெட்டிகளும் இடம்பெற்றிருந்தார்கள். எனவே, காப்புகளுக்குக் கம்மா சமூகத்தினரை விடவும் ரெட்டி சமூகத்தினரோடுதான் நெருக்கம் அதிகம்.

காப்புகளின் அரசியல் எழுச்சியை தெலுங்கு தேசமும் தீவிர கவனத்தோடுதான் அணுகிவருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 10% இடஒதுக்கீட்டில் 5%-ஐ காப்புகளுக்கு வழங்க தெலுங்கு தேசம் தலைமையிலான அரசு கடந்த பிப்ரவரியில் முடிவெடுத்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இந்த அறிவிப்பு காப்புகளைக் கவரவில்லை. காப்புகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பதாகச் சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதியை தெலுங்கு தேசம் காப்பாற்றத் தவறிவிட்டது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

கூட்டல் கணக்கு

பவன் கல்யாண் தொடங்கிவைத்திருக்கும் காப்புகளின் இரண்டாவது அரசியல் அத்தியாயம் வெற்றிபெறுமா என்பதையெல்லாம் உடனடியாகச் சொல்லிவிட முடியாது. அரசியலுக்குப் புதியவர் என்றாலும் திரைப்படத் துறையில் இருந்தபோதே ஏழைகளுக்கு உதவுபவர் என்ற தோற்றத்தை உருவாக்கிக்கொண்டவர் பவன் கல்யாண். அது அவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக இருக்கிறது.

நடந்து முடிந்திருக்கும் ஆந்திர பிரதேச மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கிறார் பவன் கல்யாண். ஆந்திரத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டமன்றத் தொகுதிகள். ஜன சேனா 140 சட்டமன்றத் தொகுதிகளிலும் 18 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கிறது. கஜுவாகா, பீமாவரம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் பவன் கல்யாண் போட்டியிட்டிருக்கிறார். கஜுவாகா விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. பீமாவரம் தொகுதி, காப்புகள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது.

பவன் கல்யாணின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கி சிறியதாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்திருப்பதால் பிரதானக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவுகள் மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close