[X] Close

இதுதான் 2019 அமெரிக்கா!


2019

  • kamadenu
  • Posted: 09 May, 2019 08:15 am
  • அ+ அ-

-பால் க்ருக்மேன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த 2016 இரவு நான் ஒரு தவறான பொருளாதார ஊகத்தை வெளியிட்டேன்; ‘ட்ரம்ப் அதிபரானால் நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்படும்’ என்று எச்சரித்தேன். அரசியல் வெறுப்பு என் கண்ணை மறைத்ததால் அப்படித் தவறாகக் கணித்துவிட்டேன் என்று உணர்ந்ததால், மூன்று நாள்களுக்குப் பிறகு எனது ஊகத்தைத் திரும்பப் பெற்றேன். “அரசின் வரவைவிட செலவு பெரிதாகி, கொஞ்ச காலத்துக்காவது பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடும்” என்று 2016 நவம்பர் 11-ல் எழுதினேன்.

பற்றாக்குறை எந்த அளவுக்குப் பெரிதாக இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை. ‘வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருக்கும்போது அரசாங்கம் அதிகம் செலவழித்தால் பொருளாதார நடவடிக்கைகள் தூண்டப்படும்’ என்று பொருளாதார மேதை ஜான் மேனார்ட் கீன்ஸின் ஆதரவாளர்கள் இன்றளவும் கூறுவதை – குடியரசுக் கட்சியினர் தடுப்பதை – அமல்படுத்தினார் ட்ரம்ப்.

வேலைவாய்ப்பு எப்படி அதிகரித்தது?

ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் கூறிக்கொள்வதைப் போல பெரிய அளவில் தொழில் துறை எழுச்சி எதையும் நம்மால் பார்க்க முடியவில்லை. கடந்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி வீதம் 3.2%, 2010 முதல் வேலைவாய்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது, இந்தப் போக்கில் 2016-க்குப் பிறகும் மாற்றம் இல்லை. பல பத்தாண்டுகளாக இருந்திராத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தையும் இது குறைத்தது. இது எப்படி நடந்தது, இது நமக்குச் சொல்வது என்ன?

இந்தப் பொருளாதார வளர்ச்சியானது அமெரிக்காவின் வெளிவர்த்தகப் பற்றாக் குறையைக் குறைத்துத் திருப்புமுனையை ஏற்படுத்திவிடவில்லை; பற்றாக்குறை இப்போதும் உச்சபட்சத்தில்தான் இருக்கிறது. தொழில் முதலீட்டிலும் இது பெரிதாக எதிரொலிக்கவில்லை. 2017-ல் வரிவிகிதங்களைக் குறைத்தபோது, அதை ஆதரித்தவர்கள் - தொழில் முதலீடு பெருக இது பெரிதும் உதவும் என்றார்கள், அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அமெரிக்கப் பொருளாதாரத்தை இப்போது இயக்குவது எதுவென்றால் ‘பற்றாக்குறை பட்ஜெட்’ மூலம் செலவழிப்பதுதான்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைத்தால் ‘பற்றாக்குறை’ எந்த அளவுக்கு இருக்கும் என்று கணக்கிட்டு, எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால், எத்தனை சதவீதம் பற்றாக்குறையை அனுமதிப்பது என்று மதிப்பிட்டார்கள். ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் வேலையில்லாத் திண்டாட்டம் 8%-க்கும் அதிகமாக இருந்தபோது எவ்வளவு ரொக்கத்தைப் பணப் புழக்கத்துக்காகச் சுற்றுக்கு விட்டார்களோ அதே மதிப்புக்கு இப்போதும் விட்டிருக்கிறார்கள்.

டிரம்புக்காகத் திறந்துகொண்ட கருவூலம்

வரியைக் குறைத்ததால் மட்டும் ஏற்பட்டதல்ல பட்ஜெட் பற்றாக்குறை. 2010-ல் நாடாளுமன்றத்தைக் குடியரசுக் கட்சியினர் கைப்பற்றியதும், மத்திய அரசைச் செலவைக் குறைத்துச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வைத்தனர்; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகவும், கடனுக்கான வட்டி மிகவும் குறைவாகவும் இருந்த அந்தக் காலத்தில்கூட அரசு செய்யும் செலவுகளைக் கடுமையாகக் குறைத்தார்கள். ஆனால், வெள்ளை மாளிகைக்குள் ட்ரம்ப் குடியேறியதும் அரசு செலவழித்தால் பரவாயில்லை என்று ஆமோதித்தார்கள்.

ஏழைகளுக்குப் பலனின்றி எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாம். ஏழைகள், நடுத்தர மக்களுடைய சமூகப் பாதுகாப்பு, மருத்துவச் செலவு ஆகியவற்றுக்கு அதிகம் செலவிடாமல் – ‘விருப்ப அதிகாரத்தின்பேரில்’ எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடலாம் என்பதே குடியரசுக் கட்சியினர் கட்டளையாக இருந்தது. இதனால், பல ஆண்டுகளாகக் குறைந்திருந்த இச்செலவு வேகமாக வளர்ந்தது.

அரசியல்ரீதியாகக் குடியரசுக் கட்சி மிகவும் பாசாங்குத்தனமானது என்பது நமக்குத் தெரியும். கடன் சுமையால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும், பணவீக்க விகிதம் உயர்ந்து விலைவாசி கட்டுக்கடங்காமல் போகக்கூடியது குறித்தும் ஒபாமா அதிபராக இருந்தபோது தொடர்ந்து அறிவுறுத்திவந்த குடியரசுக் கட்சி, தனது கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் அதிபரானதும், அரசு செலவழிப்பதற்கு விதித்த தடைகளையெல்லாம் விலக்கிக்கொண்டது. இப்போது அரசின் வரவு-செலவு அறிக்கையில் சிவப்பு மையை ஏராளமான இடங்களில் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் என்ன பொருள் என்று எல்லோருக்கும் தெரியும்.

2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமானது. அதிபர் ஒபாமா காலத்தில் அளிக்கப்பட்ட ‘தூண்டல்’ போதுமானதல்ல என்பது நமது கருத்து. பொருளாதார வளர்ச்சிக்கு இப்போது அளிக்கும் நிதி ஆதாரத்தை 2013-லேயே அளித்திருந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் 7.4%-லிருந்து 6% ஆக அப்போதே குறைந்திருக்கும்.

பகாசுர நிறுவனங்களுக்கு வரிச் சலுகை

குழந்தைகளின் நலனுக்கு நாம் அதிகம் முதலீடு செய்ய வேண்டும். அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருக்கவும், சத்துள்ள உணவு வகைகளை உண்ணவும் முதலீடுகளைப் பெருக்க வேண்டும். வறுமையிலிருந்து குழந்தைகளை மீட்க வேண்டும். பயனுள்ள வகையில் எந்தச் செலவையும் செய்ய முடியாமல் குடியரசுக் கட்சியினர் இன்னமும் தடைபோடுகின்றனர். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்வதை மட்டுமல்ல, குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவ வசதி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான முதலீடுகளைக்கூடக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

பகாசுரத் தொழில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பதால் ஏற்படும் பட்ஜெட் பற்றாக்குறைகளே பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை என்பது குடியரசுக் கட்சியின் தரப்பு. அந்த வரிச் சலுகையால் மிஞ்சும் உபரியைப் பயன்படுத்தித் தங்களுடைய பங்குகளையே சந்தையில் அதிக விலைக்கு அவை மீள் கொள்முதல் செய்கின்றன.

இதுதான் 2019-ல் அமெரிக்கப் பொருளாதாரத்தின் நிலை; அமெரிக்காவின் நிலை. இனி அடுத்து ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா நாசமாகிவிடும் வகையில் ‘பற்றாக்குறை பட்ஜெட்’ தயாரிப்பைக் குடியரசுக் கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். அரசின் எந்தச் செலவும் தேவைப்படுவோருக்கு உதவுவதாக இல்லை; எதிர்காலத்தில் நாட்டை வலுவாக்குவதாகவும் இல்லை.

தமிழில்: சாரி,

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close