[X] Close

மும்பை அருகே மின்சாரம் இல்லாமல் வாழும் 79 வயது பேராசிரியர்: பறவைகளும் மரங்களுமே இவரது நண்பர்கள்


79

  • kamadenu
  • Posted: 08 May, 2019 13:02 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

கோடையின் தகிப்பு வாட்டி வதைக்கும் இந்நாட்களில் சில வாரங்களாவது நம்மால் மின்சாரம் இன்றி இருக்க முடியுமா? குறைந்தபட்சம் சில நாட்களாவது? உண்மையில் இதற்கான பதில் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்பதுதான்.

தன் வாழ்நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமலேயே ஒருவர் வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

மகாராஷ்டிராவில் மும்பை அருகே, புனேவின் புத்வார் பேத் வீட்டில் வசித்து வரும் டாக்டர் ஹேமா சானேவுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை. இவர் இப்படி, மின்சாரம் உபயோகிக்காமல் போனதற்குக் காரணம் அவர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீதும் கொண்டுள்ள காதல்தான் என்கிறார்.

டாக்டர் ஹேமா சானே (79) ஒரு முன்னாள் பேராசிரியர். புனே போட்டரியில் உள்ள சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்தவர். பல ஆண்டுகாலம் புனே சார்வார் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

சுற்றுச்சூழல் புத்தகங்களின் ஆசிரியர்

புனேவின் புத்வர் பெத் பகுதியில் ஒரு சிறிய குடிசையில் நீண்டகாலமாகத் தனியே வாழ்ந்துவருகிறார். அதை சிறிய வீடென்றும் அழைக்கலாம். வெவ்வேறு வகையான மரங்களும் பறவைகளும் அவர் வீட்டைச் சுற்றி இருக்கின்றன.

டாக்டர் சானே தாவரவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து நிறைய புத்தகங்களை பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ளார். இவை ஏற்கெனவே வெளியிடப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன.

மின்சாரம் இன்றி வாழும் தனது தனிமை வாழ்க்கைப் பற்றி அவர் தெரிவிக்கையில், ''உணவு, உறைவிடம், துணிமணிகள் அனைத்தும் அடிப்படைத் தேவை. சில காலங்களுக்கு முன்பு சற்று தாமதமாகத்தான் தோன்றியது மின்சாரம் இன்றி வாழ முடியுமே என. இந்த இடமும் வீடும் என்னுடைய வளர்ப்பு நாய், இரண்டு பூனைகள், ஒரு கீரி மற்றும் ஏராளமான பறவைகள் வாழ்வதற்காக இருக்கிறது. இந்த சொத்து என்னுடையதல்ல. எல்லாம் இவற்றுக்காகத்தான். அவற்றைப் பராமரித்து கவனிப்பதற்காக மட்டுமே நான் இருக்கிறேன்.

மக்கள் என்னை முட்டாள் என்கிறார்கள். அவர்கள் பார்வையில் நான் பைத்தியமாகக் கூட இருக்கலாம். அதுகூட ஒரு பிரச்சினையில்லை. ஏனென்றால் இதுதான் என் விதி செலுத்தும் வாழ்க்கைப் பாதை.

மின்சாரம் இன்றி எப்படி வாழ்கிறீர்கள்?

என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால் எப்போதாவது எனக்கு மின்சாரம் தேவை என்று ஒருநாளும் நான் கவலைப்பட்டதில்லை. மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள். நீ எப்படி மின்சாரம் இல்லாமல் வாழ்கிறாய்? என்று.. நான் அவர்களைப் பார்த்து திருப்பிக் கேட்கிறேன். மின்சாரத்தோடு எப்படி வாழ்கிறீர்கள் என்று?

இந்தப் பறவைகள் என் நண்பர்கள். என் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் அவை என்னருகே வந்துவிடும். மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் இன்னொரு கேள்வி, ''நீ எப்போது இந்த வீட்டை விற்கப் போகிறாய். அதனால் உனக்கு நிறைய பணம் கிடைக்கும்'' என்கிறார்கள்.

அவர்களிடம் நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன், ''நான் போய்விட்டால் இந்தப் பறவைகள், மரங்களை யார் பார்த்துக்கொள்வார்கள். எனவே நான் வேறெங்கும் செல்வதாக இல்லை. நான் அவற்றுடன்தான் வசிப்பேன்'' என்று சொல்லிவிட்டேன்.

நான் யாருக்கும் எந்தச் செய்தியும் சொல்லமாட்டேன். மாறாக, புத்தர் சொன்ன ஒரு கருத்தையே இங்கு எதிரொலிக்க விரும்புகிறேன். அவர் சொல்கிறார், ''வாழ்க்கையில் உனக்கான பாதையை நீ  தேர்ந்துகொள்.''

இவ்வாறு ஹேமா சானே தெரிவித்தார்.

இனிய பறவைகளின் கீதங்களுடன் அவரது காலைப்பொழுதுகள் தொடங்குகின்றன. ஒளிரும் அகல் விளக்குகளின் பிரகாசத்தோடு ஒவ்வொரு நாள் மாலையும் முடிவடைகிறது.

இதற்கிடையில் வீட்டில் தனியாக இருக்கும்போது, அவர் புதிய புத்தகங்களை எழுதிக்கொண்டிருக்கிறார். சுற்றுச்சூழலைப் பற்றிய அவரது ஆய்வு பெரும்பாலும் புதியதாக ஒன்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் அவருக்குத் தெரியாத ஆனால் கேள்விப்பட்ட ஏதேனும் பறவை அல்லது மரத்தைப் பற்றியதாகவே இருக்கும்.

தமிழில்: பால்நிலவன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close