[X] Close

மொத்த வாழ்வும் பாட்டாளிக்கு...


  • kamadenu
  • Posted: 08 May, 2019 08:17 am
  • அ+ அ-

அன்று சென்னை ராஜதானியில் இருந்த மலபார் மாவட்டம், இலையாவூர் கிராமத்தில் செரியம்மா - சாந்துநாயர் தம்பதிக்கு 1918, அக்டோபர் 10 அன்று மூன்றாவது புதல்வராகப் பிறந்தவர் சிந்தன். அவரது அண்ணனும் அண்ணியும் காங்கிரஸில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பணியாற்றியவர்கள். அதைக் காட்டிலும் தனது அக்கா தேவகியின் தீவிர அரசியல் செயல்பாடும் ஆழ்ந்த அரசியல் புலமையுமே தான் அரசியலுக்கு வர ஆதர்சமாக இருந்தது என்று சொல்வார் சிந்தன்.

காந்தியின் அறைகூவலை ஏற்று கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெற்றதிலிருந்துதான் சிந்தனின் அரசியல் தொடங்கியது. ஹரிஜன சேவா இயக்கத்தில் அக்காவுடன் சேர்ந்து உழைத்துவந்தவர் அந்தப் பகுதிக்கு காந்தி வந்தபோது அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்டிருக்கிறார். காந்தியோ பதிலுக்கு சிந்தனிடம் போராட்ட நிதி தருமாறு கோருகிறார். சிந்தனின் அக்கா தன்னுடைய இரு கைகளிலும் உள்ள வளையல்களைக் கழற்ற, சிந்தன் தன்னுடைய கைக்கடிகாரத்தையும் கழற்றி, தங்கள் பங்களிப்பாக காந்தியிடம் வழங்கினார்கள்.

கம்யூனிஸ்டாக மாறிய காந்தியர்

1934-ல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டபோது மலபார் பகுதியில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, கிருஷ்ணப்பிள்ளை, ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டார் சிந்தன். அவர் பங்கெடுத்த இயக்கங்களின் பெயர்கள் வெவ்வேறாக இருப்பினும், சமத்துவத்துக்கான தேட்டமே அவருடைய அரசியலாக இருந்தது; கம்யூனிஸ்ட் கட்சியே பிற்பாடு அவருக்கான களமாக இருந்தது.

ஏராளமான அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கிறார்.

1939-லேயே ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைக் கைதிகளின் உரிமைக்காகக் குரல் எழுப்பியதால், சிறையில் கடும் தடியடித் தாக்குதலுக்கு உள்ளாகி மண்டை உடைந்தது. 1942-ல் விடுதலையான பிறகு கட்சிப் பணியாற்றுவதற்காகத் தமிழகம் வந்தார். சிறிது காலம் சென்னையில் கட்சிப் பணியாற்றியவர் பின்னர் ராமநாதபுரம், திருநெல்வேலி என்று தென் மாவட்டங்களில் தொடங்கி மாநிலத்தின் கிராமங்கள்தோறும் அலைந்து கட்சிப் பணியாற்றினார். சென்னை வந்த அவர் மீண்டும் தொழிற்சங்கப் போராட்டங்களில் குதித்தார். நகரசுத்தித் தொழிலாளர் போராட்டத்தில் கைதாகி சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் தடைசெய்யப்பட்ட பின்னணியில் மூன்று ஆண்டுகள் மீண்டும் சிறை வாழ்க்கை. சிறையில் பல முறை மிகக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகிறார். புதுவையில் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டபோதுதான், பாரதிதாசன் உடன் ஏற்பட்ட நட்பு அவர் பெயர் மாற்றத்துக்குக் காரணமானது. சிண்டன் என்ற மலையாளப் பெயரை பாரதிதாசன் சிந்தன் என்று மாற்றினார். சிந்தன் என்றால் ஞானி என்று பொருள்.

தொழிலாளர்களின் பெருந்தலைவர்

போராட்டத்திலேயே 24 மணி நேரமும் கழித்ததால் நாற்பதாவது வயதில்தான் சிந்தனுக்குத் திருமணம் நடந்தது. சாரதா என்ற சங்கீத ஆசிரியையைத் திருமணம் செய்துகொண்டார். 1962-ல் இந்திய, சீன மோதலைத் தொடர்ந்து வி.பி.சிந்தன் மீண்டும் கைதானார். 1966-ல் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தை சென்னையில் தொடங்கிட அயராது பாடுபட்டார். பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தலைமைதாங்கி சென்னை தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவராக உருவெடுத்தார்.

1975-ல் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் வி.பி.சிந்தன் மீண்டும் தலைமறைவானார். நாட்டில் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்தபோது இடைவிடாத போராட்டங்களில் ஈடுபடலானார். 1987-ல் மாஸ்கோவில் நடைபெற்ற மே தின விழா அணிவகுப்பைப் பார்வையிடச் சென்றார் சிந்தன். மே 8 அன்று ஸ்டாலின்கிராடில் யுத்த வீரர்களின் நினைவிடத்தைக் காணச்சென்றபோது மாரடைப்பால் காலமானார்.

சிந்தனின் வாழ்வை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், பாட்டாளிகளுக்காகவே வாழ்ந்து மறைந்த போராளி என்று சொல்லலாம். தமிழ்நாடு மறக்க முடியாத, மறக்கக் கூடாத தலைவர்களில் ஒருவர் அவர்!

- க.உதயகுமார்

தொடர்புக்கு: udayakumarvpp@gmail.com

மே 8: வி.பி.சிந்தன் நினைவு தினம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close