[X] Close

ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்ற ஏழைத் தொழிலாளி மகன்: பல்லடம் அருகே அரசுப் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்!


  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:49 pm
  • அ+ அ-

-இரா.கார்த்திகேயன்

ஜேஇஇ நுழைவுத்தேர்வில் ஏழைத்தொழிலாளி மகன் வெற்றி பெற்று, பல்லடம் அருகே கணபதிபாளையம் அரசுப் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

பல்லடம் கணபதிபாளையம் கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி - தனலட்சுமி தம்பதி. கைத்தறித் தொழிலாளர்களான இவர்களின் மகன் பொ. சபரிநாதன். இவர் பல்லடம் அருகே கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதினார். ஏப்ரல் 19-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வில் மாணவர் ப.சபரிநாதன் 573 மதிப்பெண்கள் பெற்றார். திருப்பூர் மாவட்ட அளவில் அரசுப் பள்ளியில் அதிக மதிப்பெண்ணை சபரிநாதன் பெற்றிருந்தார்.

இந்நிலையில், ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்காக சபரிநாதன் படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 8-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வு எழுதினார். இதையடுத்து ஏப்ரல் 29-ம் தேதி வெளியான நுழைவுத்தேர்வு முடிவில் 91.29 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற்றார்.

மாவட்டத்தில் ஒருவரே வெற்றி

இது தொடர்பாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் மாணிக்கம் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

"சபரிநாதன் நன்கு படிக்கக் கூடிய மாணவர். ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின்) எழுத விரும்பினார். இதற்காக பிளஸ் 2 காலாண்டு விடுமுறையின் போது தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட 'தொடுவானம்' மூலம் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சி எடுத்தார்.

தேர்வுக்காக ஆசிரியர்கள் பணம் போட்டு பயிற்சிப் புத்தகங்கள் வாங்கித்தந்தோம். அவரும் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்தார். இன்றைக்கு ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அளவில் 2.24 லட்சம் பேர் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இதில் 28,206-வது இடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு" என்றார்.

ஏழ்மைக் குடும்பம் - அரசுப் பள்ளி மாணவர்

மாணவர் சபரிநாதன் கூறியதாவது:

"மிகவும் ஏழ்மையான நிலையில் தான் படித்தேன். தொடர்ந்து எங்கள் பள்ளி ஆசிரியர்கள் தந்த உற்சாகம் என்னை இந்த அளவு தேர்ச்சி பெற வைத்துள்ளது. வீட்டில் கைத்தறித் தொழில்தான். பெரிய அளவில் வருவாய் இல்லை. மாதம் ரூ. 3000தான்  குடும்ப வருமானம். அதை வைத்துதான் குடும்பம் நடத்த வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் படித்து வந்தேன்.

எதிர்காலத்தில் இஸ்ரோவில் பணிபுரிய விருப்பம் உள்ளது. தற்போது ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போதைய நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்ஐடியில் சேரமுடியும்.

இந்நிலையில் வரும் மே 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத உள்ளேன். அதற்கு தற்போது படித்து வருகிறேன். அதில் வெற்றி பெறும் போது ஐஐடியில் சேர வாய்ப்பு கிடைக்கும். எனக்காக பாடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் பயிற்சிக்கும் நன்றி சொல்கிறேன்" என்றார் சபரிநாதன்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close