[X] Close

ஆய்வுகளின்படி மக்கள் எதிர்பார்ப்பிற்கும் பிரதமர் மோடி தலைமை பாஜகவின் வாக்குறுதிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி?


  • kamadenu
  • Posted: 07 May, 2019 16:10 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சு, பிற உரைகளில் திரும்பத் திரும்பப் பேசப்பட்ட விஷயமாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு 24 விஷயங்களை அடையாளப்படுத்தியது.

 

இதில் பாதுகாப்பு, பாகிஸ்தான், ராணுவம் உள்ளிட்டவைகள் திரும்பத் திரும்பப் பேசப்பட நாட்டை உலுக்கும் மருத்துவம், சுகாதாரம், அத்யாவசிய தேவையான குடிநீர் பற்றி பிரதமர் பேச்சில் வரவில்லை என்பது அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

 

வாக்களர்கள் விரும்புவது என்ன, தேவைகள் என்ன என்பது பற்றி ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற சமூகநல நிறுவனம் நடத்திய மிகப்பெரிய தேர்தல் ஆய்வில் வேலை வாய்ப்பு பற்றி பெரும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளின் பிரதான் அளவுகோலாக முன் வைக்க, இரண்டாவது இடம் மருத்துவம், சுகாதாரம் வாக்காளர்களின் கவலைப்பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக சுகாதாரம், குடிநீர் பற்றிய கவலைகள் வாக்காளர்களிடம் இருந்துள்ளது, இதில் தீர்வு காணும் அரசுக்குத்தான் வாக்களிப்போம் என்று இந்த அமைப்பின் ஆய்வில் தெரியவந்தது. ஆனால் பிரதமர் மோடியோ, திரும்பத்திரும்ப புல்வாமா, பாலகோட், பாகிஸ்தான் என்று ராணுவம் தொடர்பான விஷயங்களையே பேசி வந்துள்ளார்.

 

வாக்காளர்கள் தேவை என்ன என்பதற்கும் பாஜகவின் வாக்குறுதிகளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையேயான இடைவெளி உள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக இதற்காகக் கொள்கைகளை வகுக்கவில்லை என்று கூற முடியாது. தூய்மை இந்தியா, உஜ்வாலா திட்டம், ஜன் அவுஷதி போன்றவை குறிப்பிடத்தகுந்தவைதான், ஆனால் இவையெல்லாம் மருத்துவ தேவைகளை ஓரளவுக்கு கருத்தில் கொண்டாலும் இவையெல்லாம் சுகாதார அமைச்சகத்தினால் நிதியளிக்கப்பட்டோ, நேரடியாகவோ நடத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

இவையெல்லாம் ஏதோ ஒரு விதத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டு பாஜகவினால் வளர்க்கப்பட்டது.

 

இது குறித்து அப்சர்வர் ஆராய்ச்சிக் கழகத்தின் மருத்துவ தலைமை  உமன் குரியன் என்பவர் தி ஒயர் ஊடகத்திடம் கூறும்போது, “நடப்பு ஆட்சியின் தொடக்கக் காலக்கட்டங்களில் மருத்துவம் அல்லது சுகாதாரம் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறைதான். ஆனால் கடந்த அரசின் பணியின் மூலம் சில பயன்களை இது தனக்காக திரட்டிக் கொண்டு ஓரளவுக்கு பாராட்டக்கூடிய எதிர்காலத் திட்டத்தையும் வகுத்தது.

 

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மருத்துவத்துறை செயல்பாடுகள் கடந்த 5 ஆண்டுகளில் யுபிஏ 3 எனவும் 2019 தேர்தல் அறிக்கையில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் யுபிஏ-4 எனவும் அழைக்கப்பட தகுதியானது” என்கிறார். 2014, 2015, 2016 பட்ஜெட் உரைகளை எடுத்து நோக்கினால் சுகாதாரம் அல்லது மருத்துவத்தில் எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த புதிய அளவுகோல்களை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

2019 பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத்துக்கு ரூ.6400 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட், திட்டங்கள் எல்லாம் ஒன்றும் எழும்பவில்லை என்கின்றனர் இந்தத் துறை சார்ந்த நோக்கர்கள். மருத்துவ சிகிச்சையை எல்லோராலும் எளிதில் அணுக முடிகிறதா என்பதுதான் இன்றைய கேள்வி.

 

பொதுமருத்துவச் சேவையின் அலட்சியம்தான் செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 2014ம் ஆண்டில் பெண்டாரியில் சட்ட விரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 1 3 பெண்கள் மரணமடைந்தனர்.  6 மணி நேரத்தில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் சுமார் 83 நடந்ததாக பத்திரிகைகள் செய்திகளில் அலறின.

 

இத்தகைய சட்டவிரோத அறுவைசிகிச்சைக்குக் காரணமான மருத்துவ அதிகாரி ஆர்.கே.குப்தா என்பவரை விசாரணை செய்ய மாநில அரசு அனுமதி கொடுக்காததால் அவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.  ஆகஸ்ட் 2017-ல் உ.பி. கோரக்பூரில் அரசு நடத்தும் பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் 23 குழந்தைகள் பலியாகின.

 

இதனை ஆக்சிஜன் சப்ளைக் குறைபாடினால் அல்ல மூளைவீக்க நோயினால் ஏற்படும் சகஜமான மரணம் என்று உ.பி. பாஜக அரசு வர்ணித்ததும் பெரிய சர்ச்சையானது. ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.63 லட்சம் வரை நிலுவைத் தொகை இருந்ததால் அவர்கள் சப்ளையை நிறுத்திவிட்டனர் என்று தெரியவந்தது. இதிலும் விசாரணையின்றி கோப்பு மூடப்பட்டது.

 

அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் தூய்மைக் கேடு, லஞ்ச லாவண்யங்கள், ஊழலில் சிக்குண்டு சின்னாப்பின்னமாகை நோயாளிகளை வறுத்தெடுக்கிறது என்றால் தனியார் மருத்துவத் துறை கொள்ளைக்கூட்டமாகவே மாறிவிட்டது. இங்கும் கூட பணம் இருந்தால் சிகிச்சை இல்லையேல் அலட்சியம் என்பதாக ஆங்காங்கே மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சோதனை, அந்தச் சோதனை என்று அப்பாவி மக்களிடம் பணக்கொள்ளை அடிப்பது, தேவையற்ற அறுவை சிகிச்சைகளுக்காக நோயாளிகள், உறவினர்களை அச்சுறுத்தி பயனடையும் மருத்துவர்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

 

நவம்பர் 2017-ல் குர்குராமில் மேதாந்தாவில் டெங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 7 வயது குழந்தை இறந்தது. காரணம் இவர்கள் ஏழைகள், இதனால் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை இந்த விவகாரத்தை தி ஒயர் எழுதும்போது குடும்பத்தினர் சாவைப் பெரிது படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு நிர்வாகம் பணம் கொடுத்தது இதற்கு ஏற்பாடு செய்தது சுகாதார அமைச்சகம் என்று அம்பலப்படுத்தியிருந்தது.

 

இந்திய மருத்துவ உலகம் தனியாராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் ஊழலில் மிதந்து வருகிறது என்பதை ஒருவரும் மறுக்க முடியாது.

 

மாரடைப்பு நோய்க்கு வைக்கப்படும் ஸ்டண்ட்கள் விலையை குறைத்ததாக மோடி அறிவித்தார், ஆனால் உச்சபட்ச விலைகள் குறித்து அரசு கவனிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே விலைக்குறைப்பு அரங்கேறியது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் லாபி செய்யப்பட்டது.

 

மருத்துவ உபகரணக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பற்றிய செய்திகளும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன, இது பற்றிய அரசின் நடவடிக்கைகள் எல்லாம் கண் துடைப்பாகவே இருந்து வந்துள்ளது.. காரணம் தரமற்ற மருத்துவ உபகரணங்களுக்காக ஒரு நிறுவனத்தை நிதியளவில் தண்டிப்பது இந்திய சட்டங்களில் முடியாதது, காரணம் நேரடியான அப்படிப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. உதாரணமாக ஒரு நிறுவனம் இதே வழக்கிற்காக இந்திய கோர்ட்களில் இழப்பீடு தர முடியாது என்று வாதிட்டு வருகிறது, ஆனால் இதே நிறுவனம் இதே காரணங்களுக்காக அமெரிக்காவில் கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கி வருகிறது என்ற நிலைதான் உள்ளது.

 

இந்திய மருத்துவ உலகம் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஊழலை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய மோடியின் பாஜக தலைமை அரசு இதுவரை இந்த மருத்துவத் துறையில் மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே இருண்ட உண்மை.

 

ஆயுஷ்மான் பாரத் பிரைமரி ஹெல்த்கேர் என்பதை மேம்படுத்த உருவாக்கப்பட்ட அளவில் வரவேற்கத் தக்கது. ஆனால் 100 மில்லியன் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் காப்பீட்டு உறுதி அளித்தது. இதன் மூலம் 500 மில்லியன் இந்தியர்களைத்தான் கவர் செய்ய முடியும். மீதமுள்ள 700 மில்லியன் குடும்பங்களுக்கு என்ன இருக்கிறது? இது மிகப்பெரிய இடைவெளி, ஆனால் அரசோ  உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று கூறிக்கொள்கிறது.

 

மருத்துவம் மட்டுமல்ல ஆரம்பக் கல்வி, குடிநீர் போன்றவற்றில் இந்த 5 ஆண்டுகளில் தீர்க்கதரிசனத்துடன் இந்த அரசு செயல்பட்டதா என்பது ஆய்வுக்குரியதே.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close