[X] Close

அந்த நாள் 41: சல்வார், சுரிதார் யாருக்கான உடை?


41

  • kamadenu
  • Posted: 07 May, 2019 12:24 pm
  • அ+ அ-

-ஆதி வள்ளியப்பன்

“முகலாயர் கால வீடுகள் பத்தி நீ சொன்னது மூலமா நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது, அந்தக் காலத்துக்கே போய் வந்தது மாதிரி இருந்துச்சு குழலி.”

“இந்த தடவ அந்தக் காலத்தின் இன்னொரு விஷயமான உடைகளைப் பத்திப் பார்க்கப் போறோம். இன்னைக்குப் பெண்கள் அணிஞ்சுகிட்டிருக்கிற  உடைகள் முகலாயர் காலத்துல பிரபலமானவைதான் செழியன்.”

“அப்படியா?”

“ஆமா, ஒரேயொரு சின்ன வித்தியாசம். இன்னைக்குப் பெண்கள் அணியும் கீழுடையான தளர்வான சல்வார் அல்லது இறுக்கமான சுரிதாரைப் போன்ற உடையை முஸ்லிம் ஆண்கள் அன்னைக்குக் கீழே அணிஞ்சிருந்தாங்க. மேலே குர்தா போன்ற உட்சட்டையையும் (Tunic), அதன் மேல் காபா (Qaba) எனப்பட்ட நீண்ட மேலுடையையும் அணிஞ்சிருக்காங்க.”

“ராஜ உடை அவ்வளவுதானா?”

“அதெப்படி இதோட முடிஞ்சிடும்? ராஜ உடையாச்சே, அதிகாரப்பூர்வ நிகழ்வுகள்ல பங்கேற்கும்போது மேலுடையை மார்புப் பகுதில இறுக்கிக் கட்டிக்கிட்டாங்க.

இப்படிக் கட்டுவதற்குப் பயன்பட்ட துணி ‘கமர்பந்த்’னு அழைக்கப்பட்டுச்சு. அந்தப் பட்டில அலங்காரமான குறுவாள் ஒன்றும் செருகப்பட்டிருக்கும்.”

“அதானே, வாள் இல்லாம ராஜ உடையாண்ணு யோசிச்சேன்”

“இன்னொரு விஷயம், அந்தப் பட்டியை இறுக்கிக் கட்டி முடிச்சு போடுறதிலும் சில வழக்கங்கள் இருந்துச்சு. இந்துக்கள் இடதுப்புறமும், முஸ்லிம்களும் ஐரோப்பியர்களும் வலதுப் புறமும் முடிச்சைப் போட்டுக்கிறது வழக்கம்.

அதோட தலைப்பாகையும் அணிஞ்சிருந்தாங்க. முஸ்லிம்களோட தலைப்பாகை வட்டமாவும் வெள்ளையாவும் இருந்துச்சு. இந்துக்களோட தலைப்பாகை பிரகாசமான நிறங்கள்ல, கூர்முனைகளோட உயரமா இருந்துச்சு.”

17.jpg

“ஆனா குழலி, இப்ப நீ சொன்னதெல்லாம் ஆண்களோட உடை பத்தி மட்டும்தானே.”

“முஸ்லிம் பெண்களும் சல்வார், சுரிதார், அங்க்ரகா என்றழைக்கப்பட்ட குர்தாக்களை அணிஞ்சாங்க. இந்த அங்க்ரகா ஒளி ஊடுருவும் பட்டால நெய்யப்பட்டது.

மேலே ரவிக்கை அணிஞ்சிருந்தாங்க. புர்கா (பர்தா) எனப்படும் உடலை மூடும் உடையை அணிந்தே வெளியே போனங்க.

இந்துப் பெண்கள் சேலையும் குட்டைக் கைகள் கொண்ட அங்கியா அல்லது சோளி எனப்பட்ட ரவிக்கையை அணிஞ்சாங்க.

லெஹெங்கா எனப்படும் பாவாடை, ரவிக்கை அணியறதும் வழக்கமா இருந்துச்சு. ‘சுனாரி’ எனப்பட்ட துப்பட்டாவால தலையை மூடிக்கிட்டாங்க.”

“தலையை மூடுறது இருக்கட்டும் காலுக்குச் செருப்பு போட்டாங்களா?”

“காலுக்குச் செருப்பு போட்டுக்கிற பழக்கம் அன்னைக்குச் சாதாரண மக்கள்ட்ட இருந்திருக்கல. இன்னைக்கு மாதிரி மக்கள் நெருக்கடியோ, குப்பையும் கூளமுமான சுகாதாரப் பிரச்சினையோ அன்னைக்கு இருக்கலையே”

“நீ சொல்றது உண்மைதான், குழலி”

“ஆனா, அன்னைக்கு அரசவைல இருந்தவங்க பாரசீக முறைல தயாரிக்கப்பட்ட கூர்மையான அல்லது வளைந்த முன்னங்கால் பகுதிகளைக் கொண்ட தோல் காலணிகளை அணிஞ்சிருந்தாங்க.

காலணிகள்ல பட்டு பூத்தையல், தங்க நூலிழை வேலைப்பாடுகள், விலைமதிப்பற்ற கற்கள் போன்றவையும் பதிக்கப்பட்டிருந்துச்சு, செழியன்.”

“காலணிகள்லயே இவ்வளவு சொகுசா? முகலாயர்கள் ரசனையானவங்கதான், குழலி.”

 

ஆண்டுக்கு 200 ஆடைகள்

# முகலாய மன்னர் ஜஹாங்கிர் தன்னை ஒரு ஆடை வடிவமைப்பாளராகவே கருதிக்கொண்டார். தான் மட்டுமே அணியக்கூடிய சில ஆடைகளையும் அவர் வடிவமைத்துக்கொண்டார். அப்படி அவர் வடிவமைத்தவற்றில் ஒன்றுதான் Nadiri எனப்பட்ட கோட் போன்ற மேலுடை.

# ஒரு முறை போர்த்துக்கீசிய தூதர்களை வரவேற்பதற்காக போர்த்துக்கீசிய பாணியிலான தளர் மேலுடை, ஜாக்கெட்டுகளை அக்பரும் அவருடைய மகன்களும் அணிந்துகொண்டு, அந்நாளைய முகலாயத் தலைநகர் பதேபூர் சிக்ரி அரண்மனையில் ஐரோப்பியர்களைப் போல வலம் வந்திருக்கிறார்கள்.

# பெண்கள் 37 வகையான நகைகளை அணிந்திருந்ததாக ‘அக்பர் நாமா’வை எழுதிய அபுல் பஸல் குறிப்பிட்டிருக்கிறார்.

காதணி, வளையல், கழுத்தணி, கடகம் (பிரேஸ்லெட்), மூக்கு வளையம், தலை நகைகள், கொலுசு, மெட்டி எனப் பல்வேறு நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

# முகலாய அரசர்கள் புதிது புதிதாக உடை அணிய விரும்பினார்கள். ஒவ்வோர் ஆண்டும் 200 புதிய ஆடைகளைத் தைக்க அக்பர் உத்தரவிட்டிருந்தார். அந்த உடைகளில் பல, விருந்தினர்களுக்குப் பரிசாக வழங்கப்படுவதற்காகத் தைக்கப்பட்டன.

இத்தனை உடைகளையும் தைப்பதற்குப் பெரும் தையல்காரர் படையே வேண்டும். ஏனென்றால், அன்றைக்குத் தைப்பதற்கு இயந்திரங்கள் இருந்திருக்கவில்லை.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close