[X] Close

மார்க்ஸ் கண்ட கனவு!


  • kamadenu
  • Posted: 07 May, 2019 10:54 am
  • அ+ அ-

-ம.சுசித்ரா

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள்: மே 5

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை! கட்டப்பட்டிருக்கும் உங்கள் அடிமை விலங்குகளைத் தவிர!” என்ற எழுத்துகளுக்காக ஒரே நேரத்தில் உலகப் புகழடைந்தவர், நாடுகடத்தப்பட்டவர் கார்ல் மார்க்ஸ்.

முதலாளித்துவத்தைக் குறுக்குவெட்டு ஆய்வுக்கு உட்படுத்துவதை மட்டுமே தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டிருந்த சிந்தனையாளர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, பேச்சாளர் அவர்.

லாபத்துக்காகப் பொருட்கள் உற்பத்தி செய்யும் முறையை மாற்றிப் பயன்பாட்டுக்கான உற்பத்தி முறையைக் கொண்ட சமூகத்தை உருவாக்கக் கனவு கண்டார் மார்க்ஸ்.

அத்தகைய சமூகத்தை உழைக்கும் வகுப்பினரால் மட்டுமே நிறுவ முடியும். அது சுதந்திரமான சம உரிமை வாய்ந்த சமூகமாக ஒளிரும் என்ற நிலைப்பாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

சமகாலத்திலும் நம்மை உலுக்கும் கேள்விகளான, ‘ஏன் பணம் அனைத்திலும் வலிமையானதாகிறது?’, ‘ஏன் பொருளாதார நெருக்கடிகள் உருவாகின்றன?’, ‘உழைப்பின் விளைவு ஏன் பண்டமாக மாறுகிறது?’, ‘மூலதனம் எவ்வாறு உருவாகிறது?’ உள்ளிட்டவற்றுக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பே பதில் கண்டடைந்து அவர் உரக்க உரைத்தார்.

சித்திரவடிவில் புரட்சி

கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையும் எழுத்துகளும் அவர் பிறந்து 200 ஆண்டுகள் தாண்டியும் கொண்டாடப்படுகின்றன. இவ்வேளையில் மார்க்சியத்தின் வாசம் தெரியாதவர்கள்கூட வாசித்துப் புரிந்துகொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும், விடியல் பதிப்பகத்தின் ‘மார்க்சியம் இன்றும் என்றும்’ மூன்று நூல்களில் ஒன்றான ‘மூலதனம்’ குறித்த ஒரு பார்வை இதோ:

பெரியார், அம்பேத்கர் நூல்கள் வரிசையில் விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் அடங்கிய தொகுப்பு ‘மார்க்சியம் இன்றும் என்றும்’. டேவிட் ஸ்மித் எழுத்தில், ஃபில் இவான்ஸ் உருவாக்கிய சித்திரவடிவங்களோடு ஆங்கிலத்தில் 2014-ம் ஆண்டில் ‘Marx’s Capital Illustrated’ வெளியிடப்பட்டது.

அதன் தமிழாக்கம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மார்க்ஸின் வாழ்க்கை, கோட்பாடுச் சிந்தனை, அவருடைய வாழ்நாள் புத்தகமான, ‘மூலதனம்’ ஆகியவை இதில் சித்திரக் கதை வடிவத்தில் விளக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பயணம்

கார்ல் மார்க்ஸ் என்ற இளைஞனைப் புரட்சியை நோக்கித் தள்ளியது எது என்பதை, ‘கார்ல் மார்க்சை நாம் சந்திக்கிறோம்’ பகுதி விளக்குகிறது. ஜெர்மனியில் பிறந்து வளர்ந்து படித்து தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸ், தன்னுடைய தேசம் சர்வாதிகார ஆட்சியில் சிக்குண்டு மிகவும் பின்தங்கிய நிலையில் தவிப்பதை மாற்ற முடி வெடுக்கிறார்.

24 வயதில் ‘ரைனிஸ் கெசட்’ பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்குகிறார். அவருடைய எழுத்துகளைக் கண்டு அச்சத்தில் ஜெர்மனி அரசு அவரை நாடு கடத்துகிறது. அந்தத் தருணத்தில்தான் மார்க்ஸின் வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது. பிரான்ஸ் சென்று தீவிரப் பாட்டாளி அமைப்பான ‘கம்யூனிஸ்டுகளின் கழக’த்தில் இணைகிறார்.

அங்கு எங்கெல்ஸும் அவருடன் கைகோக்கிறார். அப்போது உருவானதுதான் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’. 1848-ல் வெளியான இதைப் படித்து பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, உள்ளிட்ட பல நாடுகளில் தொழிலாளர்கள் புரட்சியில் ஈடுபடுகிறார்கள்.

அதன்பிறகும் பத்திரிகையாளர் வேட்கை ஓயாமல் மீண்டும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் ஜெர்மனிக்கு வருகிறார்கள். ‘புதிய ரைனிஸ் கெசட்’ பத்திரிகையை வெளியிடுகிறார்கள். இம்முறை மார்க்ஸ் மீது தேசத் துரோக வழக்கு போடப்படுகிறது.

நீதிமன்றத்தில் அவரே அபாரமாக வாதாடி விடுதலை பெறுகிறார். இருப்பினும், மார்க்ஸும் அவருடைய இணையான ஜென்னியும் மீண்டும் ஜெர்மனியைவிட்டு வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறித் தங்களுடைய எல்லையில்லாப் பணியை முன்னெடுக் கிறார்கள்.

2.jpg

வாழ்நாள் புத்தகம்

சொல்லப்போனால் தனது 22 வயதில் ‘மூலதனம்’ நூலை எழுதத் தொடங்கிவிட்டார் மார்க்ஸ். அதன் முதல் தொகுப்பு வெளிவரவே 16 ஆண்டுகள் (1867) ஆனது. அவருடைய இறுதி நாட்கள்வரை பல தொகுப்புகளாகத் தொடர்ந்து எழுதியும் முடிக்கப்படவில்லை.

மார்க்ஸின் இறப்புக்குப் பிறகு அவருடைய உற்ற தோழரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் தொகுத்து வெளியிட்டார்.பொருளின் விலை, லாபம், கூலி, வேலைநேரம் என நவீனச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் ‘மூலதனம்’ நூல் ஆய்வு செய்கிறது.

‘நாம் உண்ணும் உணவே புற்றுநோயை உண்டாக்குகிறதே!’, ‘உயிர் காக்கும் மருந்தே விஷமாகிவிடுகிறதே!’, ‘குழந்தைகள் சாப்பிடும் உணவே அவர்களுக்கு ஆபத்தாக இருப்பதேன்!’ போன்ற நம் அன்றாட வாழ்க்கை சார்ந்த அச்சங்களுக்குப் பின்னால் ஒரு கருத்தியல் ஒளிந்திருப்பதை உற்றுநோக்கும் விமர்சனப் பார்வையை ஊட்டும் நூல் இது.

படித்துப் புரிந்துகொள்ள மிகவும் கடினமானதாகக் கருதப்படும் ‘மூலதனம்’ புத்தகத்தின் சாராம்சத்தை எளிய உதாரணங்கள், கதைகள் ஊடாக விளக்குகிறது, ‘மார்க்சியம் இன்றும் என்றும்’.

ஒரு மீனைக் கண்டவுடன், ‘நான் இதை உண்ண முடியும்!’ என்று உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் சாமானியர். ‘நான் இதை விற்க முடியும்!’ என்று யோசிப்பதே முதலாளித்துவத்தின் அடிப்படை என்கிறது, ‘பண்டம்’ அத்தியாயம்.

இதைவிட எளிமையாக விளக்க முடியாது எனும் அளவுக்கு ‘பண்டம்’ என்ற கருத்தாக்கத்தின் வரலாறு, சமூகப் பொருளாதார அரசியல் இதில் விளக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ‘பணத்தைப் பற்றி வெறுமனே எழுதுவதைக் காட்டிலும், நீ ஏதாவது பணம் சம்பாதிக்கலாம்!’ என்று மார்க்ஸைத் திட்டிய அவருடைய தாய் என்ரீட்டாவின் சித்திரமும் கேலியாக வரையப்பட்டுள்ளது.

 ‘மூலதனத் திரட்சி’ என்ற அத்தியாயத்தில் பணம், லாபம் ஆகியவை எதைத் தொட்டாலும் பொன்னாக மாறிவிடும் ‘மிடாஸ்’ கதையின் ஊடாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒப்புரவு சமூகம் உருவெடுக்கும்!

பண்டம், பணம் ஆகியவற்றை விளக்கியதை அடுத்து மார்க்ஸ் அளித்த மிக முக்கியமாக விளக்கம், ‘உபரி மதிப்பு’. தயாரிக்கப்படும் பண்டம் அதிக விலையில் விற்கப்பட்டால் மட்டும் உபரி மதிப்பு உருவாகிவிடாது என்கிறார் மார்க்ஸ். அது தொழிலாளியின்  உழைப்பைச் சுரண்டுவதன் மூலமாகத்தான் கிடைக்கிறது.

இதை அவர் சுட்டிக்காட்டிய பிறகுதான் 18 மணிநேரம்வரை வேலை பார்க்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலைத் திட்டத்தை நோக்கிப் புரட்சியில் இறங்கினர்.

நியாயமான வேலை நேரத்திற்குரிய நியாயமான ஊதியம் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல மார்க்ஸ் கண்ட கனவு. “உண்மையான தொழிலாளர்கள் ஜனநாயகத் தன்மையுடன் கூடிய, சமமான, நாடு கடந்த, ஒருங்கிணைந்த உற்பத்திக்கு வேண்டி ஒன்று சேரவேண்டும்” என்றார் அவர்.

அதாவது, விற்பனைக்காகவோ லாபத்துக்காகவோ இடம்தராமல் பயன்பாட்டுக்கு மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுவது. அங்கு அனைத்தும் ஒற்றுமை உணர்வோடு பகிர்ந்துகொள்ளப்படும் ‘ஒப்புரவு சமூகம் உருவெடுக்கும்’ என்றார்.

ஒரு கண்டுபிடிப்போ சிந்தனையோதான் உலகின் போக்கை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது. ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிறகு தொழிற்புரட்சி பரவி ஐரோப்பியத் தொழிற்சாலைகளில் வேகமாக உற்பத்தி நடைபெறத் தொடங்கியது. அதுபோல் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸின் தத்துவக் கோட்பாடுதான் உழைப்பு, உழைப்பளர்கள் குறித்த உலகின் பார்வையைப் புரட்டிப்போட்டது.

 

‘மார்க்சியம் இன்றும் என்றும்: மூலதனம்’ - சித்திரவடிவில்

டேவிட் ஸ்மித்

தமிழில்: ச.பிரபுதமிழன், சி.ஆரோக்கியசாமி

விடியல் பதிப்பகம்

23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு,

உப்பிலிபாளையம் அஞ்சல்,

கோயம்புத்தூர் - 641 015.

தொலைபேசி: 0422 - 2576772, 9443468758

விலை: ரூ.500 (மூன்று நூல்களும் சேர்த்து)

 

தொடர்புக்கு:

susithra.m@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close