[X] Close

இது ‘லேஸ்’சான விஷயமல்ல!


  • kamadenu
  • Posted: 06 May, 2019 12:24 pm
  • அ+ அ-

-ஜெ.சரவணன்

சாமான்ய மக்களின் மீது பன்னாட்டு பெரு நிறுவனங்கள் நிகழ்த்தும் பொருளாதார ரீதியிலான தாக்குதல்கள் ஏதோ ஒரு மூலையில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், அவை பெரும்பாலும் வெளிச்சத்துக்கு வருவது இல்லை. அதிசயமாக எப்போதாவது சில விவகாரங்கள் மட்டும் கசிந்துவிடுகின்றன.

அப்படி சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததுதான் குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் போட்ட வழக்கு. பெப்சி நிறுவனத்தின் இந்த வழக்கு, சொச்சம் மிஞ்சியிருக்கும் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், சுதந்திர இந்தியாவின் இறையாண்மையையும் கேள்விக்குட்படுத்துகிறது.

பெப்சி குளிர்பான நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த 9 விவசாயிகள் மீது காப்புரிமை விதிமீறல் வழக்கைப் பதிவு செய்தது. பெப்சி நிறுவனத்தின் பிரபல பிராண்டான லேஸ் சிப்ஸ் உற்பத்திக்கு பிரத்யேக FC5 ரக உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரக உருளைக்கிழங்குக்கு பெப்சி நிறுவனம் காப்புரிமைப் பெற்றுள்ளது. இந்த உருளைக்கிழங்கை குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் நிறுவனத்தின் அனுமதியின்றி விளைவித்துள்ளதாக அவர்கள் மீது பெப்சி நிறுவனம் வழக்குப்பதிவு செய்தது. அதற்கு நஷ்ட ஈடாக ஒரு விவசாயி ரூ. 1 கோடி வீதம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.

விவசாயிகள் பாதிப்பு

ஏற்கெனவே பல்வேறு வாழ்வா சாவா பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இது பேரிடியாக அமைந்தது. விதைகளுக்கான உரிமையை விவசாயிகளிடமிருந்து பறிப்பதை விட வேறு கொடுமையான விஷயம் இருக்க முடியுமா என்ன?

‘‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’’ என்பார்கள். எந்தவொரு லாபமும் இல்லாவிட்டாலும் விவசாயிகள் இங்கே இன்னும் உழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

வியாபாரிகளும், வர்த்தகர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் விளைபொருட்களை வைத்து அடையும் லாபம் பல ஆயிரம் மடங்காக இருக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு கடன் சுமையும், தற்கொலை கதைகளுமே மிஞ்சுகின்றன.

இந்தியாவில் பெப்சி நிறுவனம் தனது பிரத்யேக உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்ய 24 ஆயிரம் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அவர்களிடமிருந்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட விலையில் நேரடியாக இந்த உருளைக்கிழங்குகளை கொள்முதல் செய்துகொள்கிறது.

இந்த உருளைக்கிழங்கானது பிற ரகங்களை விட தண்ணீர் குறைவாக உள்ள, பிராசஸிங் செய்ய ஏதுவான உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கிலிருந்து தயார் செய்யப்படும் சிப்ஸ்களைத்தான் உலகம் முழுவதும் லேஸ் என்ற பிராண்டின் பெயரில் விற்பனை செய்துவருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகம்

இந்த உருளைக்கிழங்குக்கு மட்டுமல்ல இந்தியாவில் 151 விவசாயப் பொருள்களுக்கு காப்புரிமை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை PPV&FR சட்டம் வழங்குகிறது. பெப்சி நிறுவனத்தைப் போலவே பல நிறுவனங்கள் பல்வேறு விதைகளுக்கான காப்புரிமைகளை வைத்துள்ளனர்.

இந்தச் சட்டத்தின்படி காப்புரிமை பெற்றவர் அந்த குறிப்பிட்ட ரகத்தை விளைவித்து விற்கவோ, பரிமாறிக்கொள்ளவோ, விதைகளை விற்கவோ அனுமதி அளிக்கிறது. ஆனால், பிராண்ட் பெயரில் விதைகளை விற்பனை செய்யக்கூடாது எனக் கூறப்படுகிறது. இந்த சட்டமெல்லாம் என்னவோ விவசாயிகளின் உரிமைகளைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டதாக எண்ணிவிடாதீர்கள். அனைத்துமே பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டவை.

இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள விவசாயப் பொருட்களுக்கான காப்புரிமைகளில் பெரும்பாலானவை பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தனி விவசாயிகளுக்கோ, விவசாய அமைப்புகளுக்கோ இல்லை. இதுபோன்ற காப்புரிமை சட்டங்களுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பின்னாளில் எல்லா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டது.

அதன் பிறகே, புரட்சி புரட்சி என்று மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை சந்தையில் குவித்தன பெரு நிறுவனங்கள். விதைகளை வியாபாரம் ஆக்கினார்கள், பாரம்பரிய விதைகள் அழிந்தன, உரத்தைக் கொடுத்து மண்ணையும் வீணாக்கினார்கள்.

வேலைவாய்ப்பு தருவதுபோல் தந்து, ஆரம்பத்தில் அதிக லாபம் தருவதுபோல் தந்து, இடத்தையும், தொழிலையும் சந்தையையும் கைப்பற்றிய பிறகு, இடம் கொடுத்தவன் தலை மீதே ஏறி அமரத் தொடங்கிவிட்டார்கள்.

2011-ல் இருந்து பெப்சி இந்த உருளைக்கிழங்கை இந்தியாவில் பயிரிடுகிறது. ஆனால், 2016-ல் தான் பெப்சி இதை காப்புரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்தது.

தேர்தல் சமயம் என்பதால் உருளைக்கிழங்கு விவகாரம் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியது. இல்லையெனில் இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வராமலே போயிருக்கவும் வாய்ப்புள்ளது. பெப்சி நிறுவனத்தின் நடவடிக்கைக்கு விவசாய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

தேர்தல் சமயம் என்பதால் தேசிய கட்சிகளான இரண்டுமே விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளன. மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. பெப்சி நிறுவனத்தின் வழக்கு அரசியல் களத்திலும் மிகுந்த எதிர்ப்பை கிளப்பியதால், காப்பரேட் புத்தி சற்றே பின்வாங்க முடிவு செய்தது.

 விவசாயிகளை சமரசத்துக்கு அழைத்தது. இந்நிலையில் வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்குள் மாநில அரசுக்கும், பெப்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்வதாக அறிவித்தது பெப்சி.

ஆனால் அதேசமயம், விதையின் காப்புரிமையையும், பெப்சியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க நிறுவனம் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளைத் திட்டமிடும் என பெப்சி தரப்பு கூறியுள்ளது.

எதிர்காலம் கேள்விக்குறி?

காற்று நிரப்பப்பட்ட ஐந்து ரூபாய் ‘லேஸ்’ சிப்ஸ் பாக்கெட்டில் அதிகபட்சம் ஒரு உருளைக்கிழங்கு கூடமுழுதாக இருக்காது. பல வண்ணங்களில், பல சுவைகளில் என ஒரு உருளைக்கிழங்கை ஐந்து ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கும் பெப்சி நிறுவனத்திடம் ஏழை விவசாயிகள் மீது கரிசனம் எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்தான். விளைவிப்பவனுக்கே விதைகளுக்கான உரிமை இல்லை எனில், வேறு எந்த உரிமையை இந்த சுதந்திர நாட்டில் நம்மால் எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

விவசாயம் கார்ப்பரேட் மயமாகிக் கொண்டிருப்பதன் விளைவுதான் இது. எதிர்காலத்தை நினைத்தும், வருங்கால சந்ததிகளை நினைத்தும் இப்போதே நெஞ்சம் பதறுகிறது. வளர்ச்சி, வசதி மற்றும் வாய்ப்புகள் என்ற பின்னணியில் நடத்தப்படும் இதுபோன்ற துரோகங்கள் இன்னும் எத்தனை காலங்களுக்குத் தொடரப் போகிறதோ?

saravanan.j@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close