[X] Close

3 வழிகளில் தங்கம் வாங்கலாம்


3

  • kamadenu
  • Posted: 06 May, 2019 12:10 pm
  • அ+ அ-

-ராஜலக்‌ஷ்மி நிர்மல்

அட்சய திருதியை தினத்துக்கு ஒரு மாதம் முன்பாகவே தங்க நகை விற்பனையகங்கள் முன்பதிவை தொடங்கிவிட்டன. ஆண்டு முழுவதும் ஆகும் நகை விற்பனையில் பாதி அளவை அட்சய திருதியை தினத்தன்று விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. பொதுவாக நமது குடும்பத்தினர் தங்கத்தில் முதலீடு என்பது ஆபரணமாக வாங்குவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆபரணங்கள் செய்வதற்கான செய்கூலி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டால் தங்க ஆபரணங்கள் வாங்குவது முதலீடாக இருக்க முடியாது. செய்கூலி, ஆபரணக் கற்கள் உள்ளிட்டவற்றுடன் மறைமுகமாக சேர்க்கப்படும் விலைக்கேற்ற முதலீட்டு பலனை தங்க ஆபரணங்கள் அளிப்பதில்லை என்பதை நிதர்சனம்.

பொதுவாக தங்கத்தை ஆபரணமாக வாங்குவதை பொருளாதார நிபுணர்கள் சரியென கூறுவதில்லை. மேலும் பழைய நகைகளுக்கு விற்பனையகங்கள் ரொக்க பணம் தருவதில்லை. தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வங்கி லாக்கரில் வைத்திருந்தால், லாக்கருக்கு வாடகை செலுத்த வேண்டும்.

வீட்டில் வைத்திருப்பதும் பாதுகாப்பானதாக இல்லை. இத்தகைய சூழலில் அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வேறு சில வழிகளில் முதலீடு செய்யலாம்.

எம்எம்டிசி-பிஏஎம்பி

டிஜிட்டல் மூலமாக தங்கம் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன. மத்திய அரசு நிறுவனமான எம்எம்டிசி (உலோகம், கனிமம் வர்த்தக கார்ப்பரேஷன்) மற்றும் பிஏஎம்பி (சர்வதேச தங்க நகை சுத்திகரிப்பு அமைப்பு) கூட்டு சேர்ந்து டிஜிட்டல் மூலம் தங்கம் வாங்க வழிகாட்டுகிறது.

மோதிலால் ஆஸ்வால் எம்இ கோல்டு நிறுவனமும் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க வழிகாட்டும் நிறுவனமாகும். இந்த இணையதளத்தில் மிகக் குறைந்த அளவாக ஆயிரம் ரூபாய்க்கு 0.3 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அதேபோல உங்களுக்கு பணம் தேவைப் படும் சமயத்தில் அன்றைய சந்தை விலைக்கு விற்க முடியும். வாரத்தில் 7 நாளும் இந்த வசதி உள்ளது.

நீங்கள் எந்த தேதியில் தங்கம் வாங்க நினைக்கிறீர்களோ, அன்றைய தினம் நீங்கள் செலுத்தும் மதிப்புக்கு இணையான தங்கத்தை எம்எம்டிசி-பிஎம்பி உங்கள் பெயரில் வாங்கி அதை தங்களது வர்த்தக சேமிப்பு லாக்கரில் இருப்பு வைக்கும்.

நீங்கள் விற்க விரும்பினால் எந்த தேதியில் விற்கிறீர்களோ அன்றைய தினம் விற்பனை செய்வதற்கான உறுதியை ஆன்லைன் மூலமே அளிக்கலாம். விற்க வேண்டிய தங்கத்தை பெற்று அதற்குரிய பணத்தை மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுவர்.

தங்கமாக வாங்க விரும்பினால் ஒரு கிராம் மற்றும் அதன் மடங்குகளில் செய்கூலி செலுத்தி பெறலாம். நீங்கள் பதிவு செய்துள்ள முகவரியில் தங்கம் டெலிவரி செய்யப்படும்.

பணம் செலுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. பேடிஎம், போன் பே, மொபிக்விக், கூகுள் பே ஆகிய செயலிகள் மூலமும் எம்எம்டிசி-பிஏஎம்பி-யில் தங்கத்துக்கு ஆர்டர் செய்யலாம்.

நீங்கள் ஆன்லைன் மூலம் எம்எம்டிசி-பிஏஎம்பி-யில் வாங்கும் தங்கத்தை அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வைத்திருக்கலாம். ஆன்லைன் கணக்கில் அதிகபட்சம் 18 மாதங்கள் வரை தங்கம் வாங்குவது, விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமலிருந்தால், நீங்கள் முதலில் வாங்கிய தங்கத்துக்கு இணையான தொகை உங்கள் கணக்கில் அன்றைய சந்தை மதிப்புக்கேற்றவாறு கணக்கிடப்பட்டு செலுத்தப்பட்டுவிடும். இத்தகைய இணையதளம் மூலமான பரிவர்த்தனையில் பரிவர்த்தனை கட்டணம் உண்டு.

தங்க பத்திரங்கள்

தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு உரிய வட்டி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தங்க பத்திரங்கள் சரியானவையாகும். இந்த கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி கிடைக்கும். தங்கம் விலை உயரும்போது பத்திரத்தின் மதிப்பு உயரும். வட்டியும் கிடைக்கும்.

இத்தகைய கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ) அல்லாத மற்றவர்கள் அனைவரும் இதில் முதலீடு செய்ய முடியும். இதில் குறைந்தபட்சம் முதலீடு ரூ. 20 ஆயிரம்.

காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலம் இதை வாங்க முடியும். ஒரு கிராம் மற்றும் அதன் மடங்குகளில் பத்திரங்கள் கிடைக்கும். அதிகபட்சம் 4 கிலோ தங்கம் வரை இதில் தனி நபர்கள் முதலீடு செய்ய முடியும்.

ரிசர்வ் வங்கி இந்தக் கடன் பத்திரத்துக்கான விலையை நிர்ணயிக்கும். இவற்றை பொதுத்துறை வங்கிகளில் வாங்கலாம். அல்லது ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா மற்றும் குறிப்பிட்ட சில தபால் அலுவலகங்களிலும் கிடைக்கும்.

மேலும் மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தைகளிலும் கிடைக்கும். கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகளாகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பத்திரங்களை விற்கலாம். முன்னதாகவே விற்க விரும்பும் முதலீட்டாளர்கள் இரண்டாம் நிலை சந்தை மூலம் விற்கலாம்.

தங்க இடிஎப்

தங்க வர்த்தக நிதியங்களில் (இடிஎப்) முதலீடு செய்யலாம். இவை அனைத்தும் பரஸ்பர நிதி திட்டங்களைப் போன்றதாகும். டி-மேட் கணக்கு இருந்தால் இந்த நிதிகளை வாங்குவதும், விற்பதும் சாத்தியம்.

இத்தகைய இடிஎப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது வாங்குவது அல்லது விற்பது போன்ற நடவடிக்கைகள் இருக்கும். சந்தை மதிப்புக்கேற்ப விலைநிலவரம் இருக்கும். அப்போது புதிதாக வாங்க விரும்புவர்களும் அன்றைய விலை நிலவரத்திற்கேற்ப வாங்க முடியும்.

உள்நாட்டு தங்க விலைக்கேற்ப இந்த நிதிகளின் மதிப்பு இருக்கும். பரஸ்பர நிதியின் என்ஏவி மதிப்புக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வர்த்தகமாகும்.

மேலும் தங்கத்தை நேரில் வாங்கும் விலையை விட இத்தகைய யூனிட்டுகளின் விலை குறைவாக இருக்கும். நிதி மேலாண் நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்களுக்கு சேவைக் கட்டணம் தரத் தேவையில்லை. இடிஎப் முதலீட்டுக்கென தனியாக டி-மேட் கணக்கு தொடங்கிவிட்டீர்களானால் நீங்கள் முதலீடு செய்யலாம்.

rajalakshmi.nirmal@thehindu.co.in

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close