[X] Close

உள்ளே வெளியே: பன்னீர்செல்வத்தைச் சுற்றி என்ன நடக்கிறது?


  • kamadenu
  • Posted: 06 May, 2019 06:44 am
  • அ+ அ-

-கே.கே. மகேஷ்

அடுத்து பன்னீர்செல்வம் என்ன செய்வார்? அதிமுகவுக்குள்ளும் வெளியிலும் புகைந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்வி அர்த்தமற்றது அல்ல. வாராணசி சென்று மோடி, அமித் ஷா இருவரையும் சந்தித்துவிட்டு திரும்பிய பன்னீர்செல்வம், ‘பாஜகவில் இணைகிறார் பன்னீர்செல்வம்’ என்ற பேச்சை உறுதியாக மறுத்ததோடு, “உயிர்போகும் நாளில்கூட அதிமுகவின் கொடி என் மீது போர்த்தப்படுவதையே பெருமையாகவும் லட்சியமாகவும் கொண்டு வாழும் இந்த எளியவனைக் கட்சி மாறப்போகிறேன் என்றெல்லாம் சொல்வது வடிகட்டிய பொய், வதந்தி” என்றெல்லாம் உருக்கமாக அறிக்கை வெளியிட்டார். பொதுவாக, இத்தனை உணச்சிவசப்பட்டு வார்த்தைகளை விடுபவர் அல்ல பன்னீர்செல்வம். இப்போது மட்டும் ஏன் இந்த பலமான மறுப்பு?

அதிமுகவுக்குள் இரண்டு விதமான பேச்சு அடிபடுகிறது. “கட்சிக்கு பன்னீர், ஆட்சிக்கு பழனிசாமி என்று இந்த ஆட்சியும் கட்சி நிர்வாகமும் சீராகத் தொடந்துகொண்டேபோவது எதிர்க்கட்சிகளைப் பெருத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. எதையாவது செய்து இருவருக்கும் இடையே விரிசல் உண்டாக்கிவிட முடியாதா என்று தவிக்கிறார்கள். பன்னீர்செல்வம் மெல்ல பாஜக பக்கம் சாய்வதாகக் கொளுத்திப்போட்டது அவர்கள்தான். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் வந்துவிடும் என்பதால்தான் பன்னீர்செல்வம் உறுதியாக மறுத்தார்” என்பது அவருடைய ஆதரவாளர்களின் வாதம். அதேசமயம், “தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, அதிமுகவுடனான தனது உறவுகளை பாஜக மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது பன்னீர்செல்வத்தைத்தான் தங்கள் கருவியாக்கிக்கொள்ள முயல்வார்கள். அதற்கான முன்னோட்டம்தான் இந்தத் தகவல்கள்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

நழுவிய வரலாற்று வாய்ப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்துக்கு எதிராகக் கட்சியை உடைத்துக்கொண்டு நின்றபோது முதல்வர் பதவியை இழந்தாலும், தமிழ்நாட்டின் அடுத்த பெரிய தலைவர் என்ற ஓரிடத்தை நோக்கி நகரும் பெரும் செல்வாக்கை மக்கள் மத்தியில் பெற்றார். ஆட்சியை இழந்தாலும் பன்னீர்செல்வம் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் வளர்ந்துவருவதை உணர்ந்தே முதல்வர் பழனிசாமியைப் புறந்தள்ளி பன்னீர்செல்வத்துக்கு முன்னுரிமையை அளித்தது பாஜக; தனித்துச் சந்திக்க நேரம் ஒதுக்கினார் பிரதமர் மோடி. ஒருபுறம் மக்கள் செல்வாக்கு; இன்னொருபுறம் டெல்லி செல்வாக்கு என்றிருந்த பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் முதல்வர் பழனிசாமி திணறிய காலமும் இருந்தது.

நல்ல தலைவர்கள் வரலாற்றுத் தருணத்தை இழக்க மாட்டார்கள். தற்செயல் வாய்ப்புகளின் வழியாகவே மூன்று முறை முதல்வர் பதவியையும், போதுமான அளவுக்கு அதிகாரங்களையும் செல்வ வளத்தையும் பார்த்துவிட்ட பன்னீர்செல்வம் ‘அரசியலை விட்டுவிட்டு ஊரோடு போய்விடலாம்’ என்ற யோசனையிலும்கூட இருந்த நாட்கள் உண்டு; பின்பு கிடைத்த இந்த மக்கள் செல்வாக்கானது அவர் உள்பட எவரும் எதிர்பார்த்திடாத கூடுதல் வாய்ப்பு; இனிவரும் காலத்தையேனும் தன்னை நம்பிய மக்கள் நலனுக்கு என்று ஒதுக்கிவிடலாம் என்ற முடிவெடுத்திருந்தால் அவருடைய உயரம் எங்கேயோ சென்றிருக்கும். ஆனால், அப்படி ஒரு முடிவை அவர் எடுக்காமல் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதில் பாதுகாப்பான வழிமுறையையே தேடினார் பன்னீர்செல்வம்.

இணைப்போடு தொடங்கிய சரிவு

போட்டி கட்சி நடத்திக்கொண்டிருந்த பன்னீர்செல்வம், முதல்வர் பழனிச்சாமியுடன் பணியாற்றும் திட்டத்துக்கு உடன்பட்டபோதே தொண்டர்கள் செல்வாக்கை இழக்கலானார். அதுபற்றிக் கவலைப்படாமல் இணைப்பு குறித்துப் பேசியவர் குறைந்தபட்சம் ‘கட்சி எனக்கு, ஆட்சி உனக்கு’ என்ற அடிப்படையிலாவது பிசிறில்லாமல் ‘பங்கு’ போட்டிருக்க வேண்டும். ஆட்சியில் துணை முதல்வர் பதவிக்கு அவர் ஆசைப்பட்டதன் விளைவு கட்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கும், அந்த இடத்தில் பழனிசாமி அமர்வதற்கும் வித்திட்டது. கூடவே, தன்னை நம்பி வந்தவர்களின் உரிமைகளையும் அவர் பொருட்படுத்தாததன் விளைவு கட்சியின் கீழ்நிலை வரை அவருக்கு என்று திரண்ட கூட்டம் கலைய வழிவகுத்தது.

பிரதமர் மோடியுடன் தனித்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரான மைத்ரேயன் தொடங்கி பன்னீர்செல்வம்தான் எதிர்காலத் தலைவர் என்று கணக்கிட்டு அவரிடம் வந்த பாண்டியராஜன் வரை இன்று யாரும் அவருடன் பழைய நெருக்கத்தில் இல்லை. பழனிசாமி அணியிலும் இவர்கள் இணைய முடியவில்லை. விளைவாக, பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்கள் இன்று ஓரங்கட்டப்பட்டவர்கள் ஆகிவிட்டார்கள்.

பழனிசாமியின் காய் நகர்த்தல்கள்

கட்சிக்குள் தன்னை வலுப்படுத்திக்கொண்டுவிட்ட பழனிசாமி, டெல்லியிலும் தனக்கென்று செல்வாக்கை உருவாக்கிக்கொண்டுவிட்டார். மாறாக, பன்னீர்செல்வத்துக்கோ சிக்கல்கள்தான் வலுக்கும்போல!

பன்னீர்செல்வம், அவருடைய மனைவி, இரு மகன்கள், மகள் என்று ஒட்டுமொத்த குடும்பத்தினர் மீது வருமானத்துக்கு மீறி சொத்துக்குவித்த குற்றச்சாட்டை முன்வைத்தது திமுக. ‘பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன?’ என்று நீதிமன்றமே கேள்வி கேட்ட நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் இதைக் கையில் எடுத்தனர். நீதிமன்றத்தின் கேள்வியையே காரணமாக்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்கக் காவல் துறைக்கு வழிவிட்டிருக்கிறது அரசு.

சொத்துக்குவிப்பு வழக்கில் பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் திரட்டப்பட்டிருக்கும் விவரங்கள், பழனிசாமி மட்டும் அல்ல; அடுத்து யார் ஆட்சியில் அமர்ந்தாலும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக வலுவான ஆயுதமாக அதைப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள். “வாராணசி சந்திப்பின் மிக முக்கிய நோக்கமே இந்த வழக்குகள் விஷயத்தில் மோடி அரசை (தொடர்ந்தால்) குளிர்விப்பதுதான்” என்றும் சொல்கிறார்கள்.

கொந்தளிப்பும் காத்திருப்பும்

மக்களவைத் தேர்தலில் கிட்டத்தட்ட பன்னீர்செல்வத்தை ஒன்றும் இல்லாதவர் ஆக்கிவிட்டார் பழனிசாமி. ‘உங்கள் மகனுக்கு மட்டும் தொகுதி வாங்கிக்கொள்ளுங்கள்; வேறு எதிலும் தலையிடாதீர்கள்’ என்று சொல்லப்பட்டதை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே அவருடைய ஆதரவாளர்கள் ஒருவருக்கும் இடம் இல்லாமல் போயிருக்கிறது. ‘இனியும் உங்களை நம்பிப் பலன் இல்லை’ என்று வெளிப்படையாகவே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சொல்லிவிட்ட நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய சூழலைக் கணித்தே அமித் ஷாவைச் சந்திக்கப் புறப்பட்டிருக்கிறார் பன்னீர்செல்வம்.

“மத்தியில் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும்; ஒருவேளை அதிமுக – பாஜக கூட்டணி வென்றால் பழனிசாமியின் கை மேலும் ஓங்கும்; இந்த இரு வாய்ப்புகளில் எது நடந்தாலும் தனக்குப் பிரச்சினைதான் என்ற நிலையில்தான் வாராணசி சென்றார்” என்று அவருடைய வட்டாரத்திலேயே சொல்கிறார்கள். ‘வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும்; பாஜக வெல்லும் பட்சத்தில் மகனை அமைச்சர் ஆக்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளே பேசப்பட்டன என்பதையும் டெல்லியிலுள்ள பாஜக வட்டாரங்களும் உறுதிப்படுத்தின. அதேசமயம், அவர் பாஜகவில் சேர்வார் என்ற தகவலை அவர்கள் மறுக்கவும் செய்தனர். “அப்படி அவர் நேரடியாக பாஜகவுக்கு வருவதால் எங்களுக்குத்தான் உடனடியாக என்ன பயன் அல்லது அவருக்குதான் உடனடியாக என்ன பயன்?” என்று சிரித்தபடி கேட்டார்கள் அவர்கள்.

மொத்தத்தில்... தந்திரம், விசுவாசம், படை பலம் என்று ஒவ்வொன்றாக பழனிச்சாமியிடம் தோற்றுக்கொண்டேவருகிறார் பன்னீர்செல்வம். அவருடைய மவுன யுத்தம் வேறு பாதையில் இப்போதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் பாதகமாக இருந்தால், பழனிசாமிக்குப் பதிலாக பன்னீர்செல்வம் சீட்டைப் பயன்படுத்தும் பாஜக.

எப்படியும் தமிழ்நாட்டில் இப்போதைக்கு பாஜக தலையெடுக்க முடியாது என்ற சூழலில் அதிமுக வழியாகவே தமிழ்நாட்டை அது கையாளும்; பன்னீர்செல்வத்திடம் பழனிசாமி எனும் சீட்டையும் பழனிசாமியிடம் பன்னீர்செல்வம் எனும் சீட்டையும் காட்டியே அது விளையாடும்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close